GT vs CSK : ஃபைனல் வரலாற்றில் புதிய சரித்திரம் படைத்த சிஎஸ்கே – குறைந்த ஸ்கோருடன் குஜராத்தை வீழ்த்தியது எப்படி?

GT vs CSK Q1
- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 23ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் நடைபெற்ற குவாலிபயர் 1 பிளே ஆப் போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த நடப்பு சாம்பியன் குஜராத் 2வது இடம் பிடித்த முன்னாள் சாம்பியன் சென்னையை எதிர்கொண்டு டாஸ் வென்று முதலில் தங்களுக்கு மிகவும் பிடித்த சேசிங்கை தேர்ந்தெடுத்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய சென்னைக்கு டேவோன் கான்வேயுடன் இணைந்து பவர் பிளே ஓவர்களில் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்திய ருதுராஜ் கைக்வாட் நோபால் அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி 11 ஓவர்கள் வரை நிலைத்து நின்று அரை சதமடித்து 7 பவுண்டரி 1 சிக்சருடன் 60 (44) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அந்த நிலைமையில் வந்த சிவம் துபே 1 (3) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க அடுத்து வந்த ரகானேவும் அதிரடியாக விளையாட முயற்சித்து 17 (9) ரன்களில் ஆட்டமிழந்தார். போதாகுறைக்கு மறுபுறம் தடுமாறிய கான்வே கடைசி வரை அதிரடியை துவங்காமல் 40 (34) ரன்களில் அவுட்டானார். இறுதியில் கேப்டன் தோனியும் 1 (2) ரன்னில் அவுட்டாக ரவீந்திர ஜடேஜா 2 பவுண்டரியுடன் 22 (16) ரன்களும் மொயின் அலி 9* (4) ரன்களும் எடுத்ததால் 20 ஓவர்களில் சென்னை 172/7 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

குஜராத் சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி மற்றும் மோகித் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் ரசித் கான் வரை அதிரடியாக விளையாடக்கூடிய குஜராத் எளிதாக 173 ரன்களை துரத்தி விடும் என சென்னை ரசிகர்கள் கவலையடைந்தனர். அந்த நிலையில் களமிறங்கிய குஜராத்துக்கு ஆரம்ப முதலே துல்லியமாக பந்து வீசிய சென்னை பவுலர்களில் ரித்திமான் சகாவை 12 (11) ரன்களில் தீபக் சஹர் அவுட்டாக்கிய நிலையில் அடுத்து வந்த கேப்டன் பாண்டியாவை தனது சுழலில் மஹீஸ் தீக்சனா 8 (7) ரன்களில் காலி செய்தார்.

இருப்பினும் மறுபுறம் உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில் தொடர்ந்து நங்கூரமாக பேட்டிங் செய்த போதிலும் எதிர்ப்புறம் தசுன் சானக்கா 17 (16) டேவிட் மில்லர் 4 (6) என 2 முக்கிய பேட்ஸ்மேன்களை பார்ட்னர்ஷிப் போட விடாமல் ரவீந்திர ஜடஜா தனது மாயாஜால சுழலில் சொற்ப ரன்களில் அவுட்டாக்கினார். அதனால் அதிகப்படியான அழுத்தம் ஏற்பட்டதால் முக்கிய நேரத்தில் சுப்மன் கில் 42 (38) ரன்களில் அவுட்டாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் திவாடியா 3 (5) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார்.

- Advertisement -

அதன் காரணமாக கடைசி 5 ஓவரில் குஜராத் வெற்றிக்கு 71 ரன்கள் தேவைப்பட்ட போது எதிர்பார்க்கப்பட்டது போலவே ரஷித் கான் அதிரடியாக விளையாடி சென்னைக்கு பெரிய சவாலை கொடுத்தனர். இருப்பினும் இம்பேக்ட் வீரராக வந்த விஜய் சங்கர் 14 (10) ரன்களில் ருதுராஜின் சிறப்பான கேட்ச்சால் அவுட்டாகி செல்ல அடுத்து வந்த நல்கண்டே ரன் அவுட்டாகி சென்றார்.

அடுத்த ஓவரிலேயே 3 பவுண்டரி 2 சிக்சருடன் அச்சுறுத்தலை கொடுத்த ரசித் கான் 30 (16) ரன்களில் துசார் தேஷ்பாண்டே வேகத்தில் ஆட்டமிழந்தார். அதனால் 20 ஓவரில் குஜராத்தை 157 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி 15 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்ற சென்னை சார்பில் அதிகபட்சமாக தீபக் சஹர், ரவீந்திர ஜடேஜா, மதிஷா பதிரனா, மஹீஸ் தீக்சனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

- Advertisement -

முன்னதாக இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை தரமாக பந்து வீசிய குஜராத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் 87 ரன்களை ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் பெற்றும் 20 ரன்களை குறைவாகவே எடுத்தது. அதனால் குஜராத் எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் பேட்டிங்க்கு சவாலான பிட்ச்சில் ஆரம்ப முதலே சிறப்பாக செயல்பட்ட சென்னை பவுலர்கள் பார்ட்னர்ஷிப் போட விடாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை அழுத்தத்தை ஏற்படுத்தினர்.

அதனால் பிளே ஆஃப் சுற்றில் முதல் முறையாக தோல்வியை சந்தித்த குஜராத்தை ஒட்டுமொத்தமாக 3 தொடர் தோல்விகளுக்கு பின் முதல் முறையாக தோற்கடித்த சென்னை நேரடியாக மே 28இல் நடைபெறும் ஐபிஎல் 2023 தொடரின் மாபெரும் ஃபைனலுக்கு வரலாற்றில் 10வது முறையாக தகுதி பெற்றது.

இதையும் படிங்க:Qualifier 1 : குஜராத் பவுலர் செய்த பிழையால் விக்கெட்டில் இருந்து தப்பி பொளந்து கட்டிய ருதுராஜ் கெய்க்வாட் – நடந்தது என்ன?

குறிப்பாக வரலாற்றில் மும்பை, பெங்களூரு ஆகிய 2 அணிகள் சேர்ந்து 9 முறை ஐபிஎல் ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் சென்னை மட்டும் முதல் அணியாக 10 ஃபைனலுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக புதிய சரித்திரம் படைத்துள்ளது. மறுபுறம் தோல்வியை சந்தித்தாலும் எலிமினேட்டர் போட்டியில் வென்று வரும் அணியுடன் மீண்டும் மோதுவதற்கு குஜராத் தயாராக உள்ளது.

Advertisement