ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 18ஆம் தேதி நடைபெற உள்ள பெங்களூரு மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான லீக் போட்டிக்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஏனெனில் பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் ஏற்கனவே தகுதி பெற்று விட்டன. அதே போல 3வது இடத்தைப் பிடிக்க ஹைதராபாத் அணிக்கு அதிக வாய்ப்புள்ளது.
எனவே மே 18ஆம் தேதி நடைபெறும் போட்டியில் வென்று 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு சென்னைக்கு செல்லுமா அல்லது பெங்களூரு தகுதி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. அதில் பெங்களூரு அணி கடைசி 5 போட்டிகளில் தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்று நல்ல ஃபார்மில் இருக்கிறது. எனவே தங்களுடைய சொந்த மண்ணில் சென்னையில் தோற்கடித்து அந்த அணி பிளே ஆஃப் செல்லும் என்று ஆர்சிபி ரசிகர்கள் நம்புகின்றனர்.
கைப் கருத்து:
இந்நிலையில் இப்போட்டியில் சிஎஸ்கே அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக முகமது கைஃப் தெரிவித்துள்ளார். குறிப்பாக அழுத்தமான போட்டியில் பதற்றமடையக் கூடாது என்ற தோனியின் ஃபார்முலா சென்னை அணிக்கு வெற்றியை கொடுக்கும் என்று ஃகைப் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “சிஎஸ்கே அணிக்கு பெரிய போட்டிகளிலும் நாக் அவுட் போட்டிகளிலும் எப்படி வெல்ல வேண்டும் என்பது தெரியும்”
“கடந்த முறை அவர்கள் 2023 ஐபிஎல் கோப்பையை வென்றனர். அந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் கடைசி 2 பந்தில் 10 ரன் தேவைப்பட்ட போது கிட்டத்தட்ட தோல்வி உறுதியானது. அப்போது ஜடேஜா பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடித்து வெற்றி பெற வைத்தார். தோனி இப்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே அவருடன் பேட்டிங் செய்யும் யாராக இருந்தாலும் வெற்றியை பெற்றுக் கொடுக்கக்கூடிய ஆட்டத்தை விளையாடுவார்கள்”
“நெருக்கமான போட்டியில் பதற்றமடையாமல் மூச்சு வாங்கிக்கொண்டு விளையாட வேண்டும் என்பதே தோனியின் ஃபார்முலா. நெருக்கமான போட்டிகளில் அவர் மட்டுமே இந்த கலையை கொண்டுள்ளார். எத்தனையோ கேப்டன்கள் வந்தாலும் முக்கியமான போட்டியில் தோனியின் விழிப்புணர்வுத் தன்மை மற்றவர்களால் பொருத்த முடியாததாகவே இருக்கிறது. அவர் குறைந்த தவறுகளை செய்வதாலேயே சிஎஸ்கே சாம்பியன் அணியாக இருக்கிறது”
இதையும் படிங்க: அவர் ஃபார்மில் இல்லாததால்.. டி20 உ.கோ தொடரில் விராட் கோலியை ஓப்பனிங்கில் இறக்கலாம்.. பதான் யோசனை
“எனவே ஆர்சிபி அணிக்கு எதிரான இப்போட்டியில் சிஎஸ்கே வெல்ல வாய்ப்புள்ளது” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் இர்பான் பதான் பேசியது பின்வருமாறு. “இந்த சீசனில் 136 ரன்களை 68 சராசரியில் 200க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ள தோனி ஏற்கனவே 12 சிக்சர்கள் அடித்துள்ளார். நெருக்கமான போட்டிகளில் சிஎஸ்கே எப்போதும் வித்தியாசமாக விளையாடியுள்ளது. அதே போல தோனியும் இந்த சீசனில் செய்யாததை இப்போட்டியில் செய்யலாம்” என்று கூறினார்.