கிங் கோலியின் படம் சேர்ப்பு.. உலக அரங்கில் 128 வருடம் கழித்து கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் அங்கீகாரம்

Olympics 2028
- Advertisement -

சர்வதேச அளவில் கால்பந்துக்கு பின் அதிக ரசிகர்களால் பார்க்கப்படும் விளையாட்டாக விளங்கும் கிரிக்கெட் இப்போதும் குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே பிரபலமாக இருக்கிறது. குறிப்பாக அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் ஐரோப்பா கண்டத்திலும் கிரிக்கெட்டை தெரியாத பல மக்கள் இருக்கின்றார்கள். அதனாலேயே கால்பந்து அளவுக்கு உலக அளவில் இந்த விளையாட்டு மிகவும் பிரபலமில்லாததாக இருந்து வருகிறது என்றே சொல்லலாம்.

அதனால் கிரிக்கெட்டை பல்வேறு நாடுகளுக்கு எடுத்துச் செல்வதற்கான முயற்சிகளை ஐசிசி தொடர்ந்து செய்து வருகிறது. குறிப்பாக 2024 டி20 உலக கோப்பையையின் கணிசமான போட்டிகளை வரலாற்றிலேயே முதல் முறையாக அமெரிக்காவில் நடத்துவதற்கு ஐசிசி அனுமதி கொடுத்துள்ளது. அத்துடன் கடந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் டி20 வடிவமாக சேர்க்கப்பட்ட கிரிக்கெட் சமீபத்தில் சீனாவில் நடைபெற்று முடிந்த 2023 விளையாட்டு போட்டிகளிலும் மீண்டும் சேர்க்கப்பட்டிருந்தது.

- Advertisement -

பெரிய அங்கீகாரம்:
அந்த வரிசையில் உலகின் மிகப்பெரிய விளையாட்டு தொடரான ஒலிம்பிக் போட்டிகளில் நீண்ட வருடங்கள் கழித்து கிரிக்கெட் சேர்க்கப்படுவதற்கான இறுதிக்கட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. அதாவது வரும் 2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் டி20 கிரிக்கெட்டை சேர்ப்பதற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி குழுவினர் அனுமதி கொடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 14 முதல் 16 வரை மும்பையில் நடைபெறும் ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் அதற்கான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. அதில் கிரிக்கெட் மட்டுமல்லாமல் பேஸ்பால், பிளாக் கால்பந்து, லாக்ராஸ் மற்றும் ஸ்குவாஸ் ஆகிய 5 புதிய விளையாட்டுகளை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்ப்பதற்கான வாக்கெடுப்பு நடக்க உள்ளதாக ஒலிம்பிக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

- Advertisement -

அதில் கிரிக்கெட்டுக்கு தேவையான வாக்கு கிடைக்கும் பட்சத்தில் 128 வருடங்கள் கழித்து மீண்டும் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடப்படுவதை பார்க்க முடியும். கடைசியாக கடந்த 1900ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப்பட்டது. அதில் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் அணிகள் விளையாடாமல் பின்வாங்கியதைத் தொடர்ந்து நேரடியாக நடைபெற்ற பைனலில் பிரான்ஸ் அணியை கிரேட் பிரிட்டன் அணி தோற்கடித்திருந்தது.

இதையும் படிங்க: அந்த 2 விக்கெட் போதும். பும்ராதான் உலகின் டேஞ்சரான பவுலர்னு சொல்றதுக்கு – கவுதம் கம்பீர் பாராட்டு

அந்த சமயத்தில் 5 நாட்களுக்கும் மேல் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளாக கிரிக்கெட் விளையாடப் பட்டதால் காலதாமதம் மற்றும் அணிகளின் ஆர்வக்குறைவு காரணமாக கிரிக்கெட் நீக்கப்பட்டது. இருப்பினும் ஐசிசியின் முயற்சியால் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட உள்ளதை உலகில் எத்தனையோ நட்சத்திர வீரர்கள் இருந்த போதிலும் இந்திய வீரர் விராட் கோலியின் புகைப்படத்தை பயன்படுத்தி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement