
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சசக்ஸ் அணிக்காக இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர அனுபவ வீரர் புஜாரா பங்கேற்று வருகிறார். அந்த வகையில் ஏப்ரல் 21-ஆம் தேதி துவங்கிய டிவிஷன் 2 சுற்றில் வோர்க்சையர் அணிக்கு எதிரான போட்டியில் சசக்ஸ் களமிறங்கியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வோர்க்சையர் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி தனது முதல் இன்னிங்சில் 491 ரன்கள் எடுத்தது.
அந்த அணிக்கு அதிக பட்சமாக பிரட் டோலிவியரா சதமடித்து 169* ரன்களும் எட் பொல்லாக் 77 ரன்களும் எடுத்தனர். சசக்ஸ் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் டாம் ஹெய்ன்ஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய சசக்ஸ் அணிக்கு அலி ஓர் 0 (1) கேப்டன் டாம் ஹெய்ன்ஸ் 26 (30) என தொடக்க வீரர்கள் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். அந்த இக்கட்டான நேரத்தில் களமிறங்கிய இந்திய வீரர் புஜாரா சரிந்த தனது அணியை மீட்டெடுப்பதற்காக களத்தில் நங்கூரமிட்டார்.
காப்பாற்றிய புஜாரா:
அவருக்கு ஜோடியாக டாம் கிளார்க் கை கொடுத்ததால் 3-வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி தங்களது அணியை ஓரளவு மீட்டெடுத்தது. அப்போது டாம் கிளார்க் 44 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 0 (5), ஜம்மி அட்கின்ஸ் 0 (5) ஆகிய வீரர்கள் புஜாராவுக்கு கைகொடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து தனது வழக்கமான பொறுமை மிகுந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா எதிரணி பவுலர்களை திணறடித்து அபார சதமடித்தார்.
ஒருகட்டத்தில் அவரும் 16 பவுண்டரிகள் உட்பட 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் நிலையில் அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வரிசையாக அவுட்டானதால் தனது முதல் இன்னிங்சில் சசக்ஸ் வெறும் 269 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. வோர்க்சையர் சார்பில் ஜேக் லீச் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் 222 ரன்கள் முன்னிலை பெற்ற வோர்க்சையர் 2-வது இன்னிங்ஸில் பாலோ – ஆன் கொடுத்ததால் மீண்டும் களமிறங்கிய சசக்ஸ் அணியை இந்த முறை புஜாராவும் காப்பாற்ற முடியாமல் போனதால் வெறும் 188 ரன்களுக்கு சுருண்டது.
இம்முறை புஜாராவும் காப்பாற்ற முடியாமல் 12 ரன்களில் அவுட்டாக அந்த அணிக்கு அதிகபட்சமாக கிரான்ட் ஸ்டீவர்ட் 67* ரன்கள் எடுத்தார். அதன் காரணமாக இன்னிங்ஸ் மற்றும் 34 ரன்கள் வித்தியாசத்தில் வோர்க்சையர் அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சசக்ஸ் தோற்றாலும் அந்த அணிக்காக சதமடித்து ஓரளவு காப்பாற்றிய புஜாரா ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறார்.
ஃபார்முக்கு திரும்பிய புஜாரா:
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்த டெர்பிஷைர் அணிக்கு எதிரான போட்டியிலும் முதல் இன்னிங்சில் சசக்ஸ் அணி மோசமாக செயல்பட்டு பாலோ ஆன் பெற்றது. அப்போது இதேபோல அபாரமாக செயல்பட்ட புஜாரா இரட்டை சதமடித்து 201* ரன்கள் விளாசி அந்த போட்டி டிராவாகும் வரை சிறப்பாக பேட்டிங் செய்தார். தற்போது இந்த போட்டியிலும் சதமடித்துள்ள அவர் அடுத்தடுத்த போட்டிகளில் சதங்களை அடித்து முழுவதுமாக பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளார் என்றே கூறலாம்.
ஏனெனில் கடந்த 2018/19 இல் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் மண்ணை கவ்வ செய்த விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் தொடரை வென்று சரித்திரம் படைத்தது. அதில் 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து இந்தியாவின் வெற்றிக்கு கருப்பு குதிரையாக செயல்பட்ட புஜாரா கடைசியாக அந்த தொடரில்தான் சதமடித்திருந்தார்.
ஆனால் அந்த தொடருக்குப் பின் 2 வருடங்களாக சதம் அடிக்க முடியாமல் மோசமான பார்மில் திண்டாடி வந்த அவரை சமீபத்தில் சொந்த மண்ணில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது இந்திய அணி நிர்வாகம் கழற்றிவிட்டது. அந்த நிலைமையில் தற்போது மீண்டும் நல்ல பார்முக்கு திரும்பியுள்ள அவர் இந்திய அணிக்குள் மீண்டும் காலடி வைப்பதற்கான வேலையை கச்சிதமாக செய்து வருகிறார்.
ஏனென்றால் அடுத்ததாக வரும் ஜூலை மாதம் இதே இங்கிலாந்து மண்ணில் கடந்த வருடம் பாதியில் விட்டு வந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் இந்தியா விளையாடுகிறது.
இதையும் படிங்க : 2000 கருப்புநிற கடக்நாத் கோழிகளை தனது பண்ணை வீட்டிற்கு வாங்கிய தல தோனி – எதற்கு தெரியுமா?
அந்த தொடரில் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கும் நிலையில் எஞ்சிய கவுண்டி போட்டிகளில் புஜரா இதே போல் செயல்படும் பட்சத்தில் அவரிடமுள்ள அனுபவத்திற்கு நிச்சயமாக அந்த போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது.