22 வருட வைராக்கியம், கேப்டனாக தோற்று கோச்சாக ரஞ்சி கோப்பையை முத்தமிட்ட வீரர் – நெஞ்சை தொடும் பின்னணி

Chandrakant Pandit
- Advertisement -

இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையின் 2021/22 சீசன் 2 பாகங்களாக நடைபெற்றது. இந்தியாவுக்கு காலம் காலமாக தரமான வீரர்களை உருவாக்கி கொடுக்கும் இந்த தொடரின் லீக் சுற்றில் தமிழகம் போன்ற அணிகள் சுமாராக செயல்பட்டு ஆரம்பத்திலேயே வெளியேறின. அதேசமயம் சிறப்பாக செயல்பட்ட பெங்கால், ஜார்கண்ட், மும்பை, உத்தரகாண்ட், கர்நாடகா, உத்தர பிரதேசம், பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய 8 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன.

அதை தொடர்ந்து கடந்த ஜூன் 6இல் துவங்கிய காலிறுதியில் பெங்கால், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் மும்பை ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அதன்பின் ஜூன் 14இல் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் அபாரமாக செயல்பட்ட மும்பை மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. அந்த நிலைமையில் இந்த தொடரின் மாபெரும் இறுதி போட்டி ஜூன் 22-ஆம் தேதியன்று பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற சின்னசாமி மைதானத்தில் துவங்கியது.

- Advertisement -

வலுவான மும்பை:
அதில் 41 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ரஞ்சி அணியாக சாதனை படைத்துள்ள வலுவான மும்பையை ஒருமுறைகூட கோப்பையை வாங்காத மத்திய பிரதேசம் எதிர்கொண்டது. அப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் பிரிதிவி ஷா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய மும்பை தனது முதல் இன்னிங்சில் 374 ரன்கள் மட்டுமே எடுத்தது. பிரிதிவி ஷா 47, யசஸ்வி ஜெய்ஸ்வால் 78 என அந்த அணியின் தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கம் கொடுத்தாலும் அர்மன் ஜாபர் 26, சுவேட் பார்க்கர் 18, ஹர்டிக் டாமோர் 24, சாம்ஸ் முலானி 12 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். இருப்பினும் மிடில் ஆர்டரில் அசத்திய இளம் வீரர் சர்பராஸ் கான் சதமடித்து 134 ரன்கள் விளாசினார். மத்திய பிரதேசம் சார்பில் அதிகபட்சமாக கௌரவ் யாதவ் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய மத்திய பிரதேசம் ஆரம்பம் முதலே நிதானமாக பேட்டிங் செய்து 536 என்ற பெரிய ஸ்கோரை எட்டியது. அந்த அணிக்கு தொடக்க வீரர் ஹிமான்சு மன்ட்ரி 31 ரன்களில் அவுட்டானாலும் மற்றொரு தொடக்க வீரர் யாஷ் துபே சதமடித்து 133 ரன்கள் விளாச அவருடன் பேட்டிங் செய்த சுபம் சர்மா தனது பங்கிற்கு சதமடித்த 116 ரன்கள் விளாசினார். அதைவிட ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூரு அணிக்காக நாக்-அவுட் சுற்றில் சதமடித்து மிரட்டிய ரஜத் படிடார் இங்கும் அற்புதமாக பேட்டிங் செய்து சதமடித்து 122 ரன்கள் விளாசினார். மும்பை சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக சாம்ஸ் முலானி 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

மடக்கிய ம.பி:
அதனால் 162 ரன்கள் பின்தங்கிய நிலையில் 42-வது கோப்பையை வெல்ல பெரிய ரன்களை எடுக்க வேண்டிய மும்பையை 2-வது இன்னிங்சில் மேலும் அற்புதமாக பந்துவீசி மடக்கிப் பிடித்த மத்திய பிரதேசம் வெறும் 269 ரன்களுக்கு சுருட்டியது. மும்பைக்கு கேப்டன் பிரிதிவி ஷா 44, ஹர்டிக் டாமோர் 25, அர்மன் ஜாபர் 37, சுவேட் பார்க்கர் 51, சர்ப்ராஸ் கான் 45 என முக்கிய பேட்ஸ்மேன்கள் நல்ல தொடக்கத்தை பெற்றாலும் பெரிய ரன்களை எடுக்காமல் ஏமாற்றமளித்தனர். மத்தியபிரதேசம் சார்பில் அதிகபட்சமாக குமார் கார்த்திகேயா 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

இறுதியில் 108 என்ற சுலபமான இலக்கை இன்றைய கடைசி நாளில் துரத்திய மத்திய பிரதேசத்துக்கு யாஷ் துபே 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினாலும் ஹிமான்சு 37, சுபம் சர்மா 30 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர். இறுதியில் ரஜத் படிதார் 30* ரன்களுடன் பினிஷிங் கொடுத்ததால் 108/4 ரன்களை எடுத்த மத்திய பிரதேசம் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த அற்புதமான வெற்றியால் வலுவான மும்பைக்கு மாபெரும் அதிர்ச்சி கொடுத்த கத்துக்குட்டியான மத்திய பிரதேசம் வரலாற்றில் தனது முதல் ரஞ்சிக் கோப்பையை வென்று புதிய சரித்திரத்தை எழுதியது.

- Advertisement -

வைராக்கிய கோச்:
அந்த அணி வென்ற போது பெவிலியனில் இருந்து கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டு உணர்ச்சி பொங்க ஓடி வந்த பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் தனது அணி வீரர்களை கட்டி அணைத்துக்கொண்டது ரசிகர்களின் நெஞ்சை தொட்டது. ஆனால் அதன் பின்னணியில் மிகப்பெரிய வைராக்கியமே உள்ளது என்றே கூறலாம். ஆம் கடந்த 1998/99 ரஞ்சி கோப்பையில் மத்தியபிரதேச அணியின் கேப்டனாக செயல்பட்ட அவரது தலைமையில் வரலாற்றிலேயே அந்த அணி முதலும் கடைசியுமாக இறுதிப்போட்டிக்கு சென்று இதே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கர்நாடகாவுக்கு எதிராக தோற்றுப் போனது.

அதன்பின் கடந்த 22 வருடங்களாக இறுதிப்போட்டிக்கு கூட தகுதி பெற முடியாமல் திணறி வந்த மத்தியபிரதேச அணியை இந்த வருடம் பயிற்சியாளராக வழிநடத்திய சந்திரகாந்த் பண்டிட் அதே பெங்களூரு மண்ணில் 41 சாம்பியன் பட்டங்களை வென்ற வலுவான மும்பையை தோற்கடித்து தனது மாநிலத்தின் சார்பில் முதல் ரஞ்சிக் கோப்பையை முத்தமிட்டுள்ளார்.

இதையும் படிங்க : IND vs ENG : ரோஹித் சர்மாவிற்கு பதிலாக துவக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ள 2 வீரர்கள் – லிஸ்ட் இதோ

கேப்டனாக தோற்றாலும் பயிற்சியாளராக வந்து தனது இலக்கை அடைந்து மாநிலத்திற்கு பெருமை சேர்த்த அவரை தினேஷ் கார்த்திக் உட்பட பல வீரர்களும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement