ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 15ஆம் தேதி முள்ளான்பூரில் நடைபெற்ற 31வது போட்டியில் கொல்கத்தாவை 16 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் 15.3 ஓவரில் 111க்கு சுருண்டதால் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிகபட்சமாக பிரப்சிம்ரன் 30 ரன்கள் எடுத்த நிலையில் கொல்கத்தாவுக்கு அதிகபட்சமாக ஹர்சித் ராணா 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
அடுத்து விளையாடிய கொல்கத்தாவை அபாரமாக பவுலிங் செய்த பஞ்சாப் 15.1 ஓவரில் 95க்கு சுருட்டி தங்களது நான்காவது வெற்றியைப் பெற்றது. அத்துடன் ஐபிஎல் தொடரில் குறைந்தபட்ச இலக்கை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய அணியாகவும் பஞ்சாப் சாதனை படைத்தது. கொல்கத்தாவுக்கு அதிகபட்சமாக ரகுவன்சி 37 ரன்கள் எடுத்த நிலையில் பஞ்சாப்புக்கு அதிகபட்சமாக சஹால் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பஞ்சாப் ஆட்டநாயகன்:
இந்த வெற்றிக்கு 4 ஓவரில் 28 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய சஹால் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இந்த மைதானத்தில் கொல்கத்தா பவுலர்கள் பந்தை சுழற்றியதைப் பார்த்து தாங்களும் அசத்தியதாக அவர் கூறியுள்ளார். மேலும் பேட்ஸ்மேன்கள் அடித்தாலும் பரவாயில்லை என்ற வகையில் தைரியமாக பௌலிங் செய்யும் திட்டத்தைப் பின்பற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி சஹால் பேசியது பின்வருமாறு. “இது அணியின் முயற்சி. நாங்கள் நேர்மறையாக இருந்து பவர் பிளவில் 2 – 3 விக்கெட்டுகள் எடுத்தால் அசத்த முடியும் என்று நினைத்தோம். கொல்கத்தா ஸ்பின்னர்கள் பந்தை சுழற்றுவதைப் பார்த்தது எங்களுக்கு உதவியது. குறிப்பாக நான் வீசிய முதல் பந்து திரும்பியது. அப்போது ஸ்ரேயாஸ் உங்களுக்கு ஸ்லிப் வேண்டுமா என்று கேட்டார்”
திறமை மேல் நம்பிக்கை:
“அதிக ரன்கள் அடிக்கவில்லை என்பதால் நாங்கள் அட்டாக் செய்து விக்கெட்டுகளை எடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று கருதினோம். கடந்த போட்டியில் நான் 4 ஓவரில் 56 ரன்கள் கொடுத்தேன். ஆனால் இன்று என்னுடைய திறமை மீது நம்பிக்கை வைத்த நான் அசத்த முடியும் என்று எனக்கு நானே ஆதரவுக் கொடுத்தேன்”
இதையும் படிங்க: 95க்கு அவுட்.. தோல்விக்கான பொறுப்பை ஏத்துகிறேன்.. பஞ்சாப்பிடம் தோற்க இதான் காரணம்.. ரஹானே பேட்டி
“எப்போதும் நான் பேட்ஸ்மேன்களை எப்படி அவுட்டாக்கலாம் என்ற மனநிலையைக் கொண்டுள்ளேன். அதற்காக வேகத்தை மாற்றிய என்னை ஒருவேளை பேட்ஸ்மேன்கள் அடித்தால் அதற்கு அவர்கள் முயற்சிகளைப் போட வேண்டும். இது போன்ற வெற்றிகளை நீங்கள் பெறும் போது உங்களுடைய அணியின் தன்னம்பிக்கை உச்சமாகும். பஞ்சாப் அணிக்காக இது என்னுடைய முதல் ஆட்டநாயகன் விருது. என் மீது நம்பிக்கை வைத்து எனது திறமைகளுக்கு நான் ஆதரவுக் கொடுக்கிறேன். அப்போது தான் என்னால் வெற்றிகரமாக அசத்த முடியும்” எனக் கூறினார்.