IPL 2023 : ரிங்கு சிங் இல்ல, நான் பார்த்ததிலேயே இது டி20 கிரிக்கெட்டின் பெஸ்ட் இன்னிங்ஸ் – இந்திய வீரரை பாராட்டிய லாரா, கெயில்

Chris Gayle Brian Lara
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் 2023 ஐபிஎல் தொடரில் ஏப்ரல் 9ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 13வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 8 விக்கெட் வித்யாசத்தில் தோற்கடித்த ஹைதராபாத் தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவர்களில் 143/9 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 99* (66) ரன்கள் எடுக்க ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக மயங் மார்க்கண்டே 4 விக்கெட்களை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 145 ரன்களை துரத்திய ஹைதராபாத்துக்கு ராகுல் திரிப்பாதி 74* (48) ரன்களும் ஐடன் மார்க்ரம் 37* (21) ரன்களும் எடுத்து 17.1 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர்.

SRH vs PBKS

- Advertisement -

ஆனாலும் இந்த போட்டியில் தனி ஒருவனாக போராடிய கேப்டன் ஷிகர் தவான் தான் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். ஏனெனில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப்புக்கு பிரப்சிம்ரன் சிங் 0, மேத்தியூ ஷார்ட் 1, ஜிதேஷ் சர்மா 4, சாம் கரண் 22, சிக்கந்தர் ராசா 5, சாருக் கான் 4 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

லாரா பாராட்டு:
இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக அரை சதம் கடந்து போராடிய அவருக்கு ஹர்ரீத் ப்ரார் 1, ராகுல் சஹர் 0 என டெயில் எண்டர்களும் கை கொடுக்காமல் ஒற்றை இலக்க ரன்களில் நடையை கட்டினர். அதனால் 15 ஓவரில் 88/9 என திணறிய பஞ்சாப் 100 ரன்கள் தாண்டாது என்று அனைவரும் எதிர்பார்த்த போது 10வது இடத்தில் களமிறங்கிய மோகித் ராதேவை வெறும் 2 பந்துகள் (1* ரன்) மட்டும் எதிர்கொள்ள விட்டு எஞ்சிய பந்துகளை மாற்றி மாற்றி தாமே எதிர்கொண்ட தவான் நடராஜன் வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் சிக்சர் அடித்தும் 12 பவுண்டரி 5 சிக்ஸருடன் 99* (66) ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

Shikhar Dhawan

அப்படி சதத்தை தவற விட்டாலும் எஞ்சிய பேட்ஸ்மேன்கள் சேர்ந்து வெறும் 38 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தனி ஒருவனாக 99* ரன்கள் எடுத்து பஞ்சாப்பை மோசமான தோல்வியிலிருந்து காப்பாற்றிய தவான் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறார். அந்த வரிசையில் இது தம்முடைய வாழ்நாளில் பார்த்த சிறந்த டி20 இன்னிங்ஸ்களில் ஒன்று என ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக செயல்படும் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் நேரலையில் பாராட்டியது பின்வருமாறு.

- Advertisement -

“ஷிகர் தவான் பற்றி நான் கண்டிப்பாக பேசியாக வேண்டும். குறிப்பாக இது நான் பார்த்த டி20 கிரிக்கெட்டில் விளையாடப்பட்ட மிகச் சிறந்த இன்னிங்ஸ் என்று நினைக்கிறேன். அதிலும் ஆல் அவுட்டாக விடாமல் அவர் ஸ்ட்ரைக்கை மாற்றி விளையாடிய விதம் அபாரமாக இருந்தது. அவர் மொத்தமாக இந்த போட்டியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்” என பாராட்டினார்.

Lara

அதே போல் 1 ரன்னில் சதத்தை தவற விட்டது தமக்கு ஏமாற்றமளிப்பதாக மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் பாராட்டி பேசியது பின்வருமாறு. “ஷிகர் தன்னுடைய அணிக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டார். உங்களை சுற்றி விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருக்கும் போது உங்களால் எளிதாக அதிரடியாக விளையாட முடியாது. இருப்பினும் அதையும் தாண்டி அவர் பதறாமல் இந்த நல்ல ஸ்கோரை அணிக்காக எடுத்து 99* ரன்கள் குவித்துள்ளார். எனவே அவர் சதத்துக்கு தகுதியானவர் என்று நினைக்கிறேன். மேலும் இது ஐபிஎல் வரலாற்றில் விளையாடப்பட்ட ஒரு மிகச் சிறந்த இன்னிங்ஸ்” என்று கூறினார்.

இதையும் படிங்க:IPL 2023 : கவலைப்படாதே நண்பா, யாஷ் தயாளுக்கு அனுப்பிய மெசேஜை பகிர்ந்த ரிங்கு – கேகேஆர், ரசிகர்கள் மெகா ஆதரவு

இந்த பாராட்டுகளை தாண்டி ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் தன்னுடைய அணியின் எஞ்சிய 9 பேட்ஸ்மேன்களுடன் சேர்ந்து பேட்டிங் செய்த முதல் கேப்டன் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்த சிகர் தவான் 10வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி (55* ரன்கள்) என்ற ஆல் டைம் மோஹித் ராதேவுடன் இணைந்து படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement