
ஒட்டு மொத்த உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக நடைபெறுகிறது. சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை நிர்ணயிக்கும் இந்த தொடரில் சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா 2011 போல கோப்பையை வென்று கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடரில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்தும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. இருப்பினும் அதற்கு போட்டியாக அடித்து நொறுக்கும் வீரர்களை கொண்ட நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வெற்றிகரமான ஆஸ்திரேலியா, காலம் காலமாக தெறிக்க விட்டு வரும் நியூசிலாந்து போன்ற அணிகள் இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல தங்களை புறக்கணிக்க நினைக்கும் இந்திய மண்ணில் கோப்பையை வெல்வதற்கு பாகிஸ்தானும் தங்களுடைய லட்சிய முதல் சாம்பியன் பட்டத்தை வெல்லும் கனவுடன் தென்னாப்பிரிக்காவும் இத்தொடரில் களமிறங்க தயாராகி வருகிறது. இந்நிலையில் உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் கோப்பையை வெல்லப்போவது யார் என்பதை கணிப்பது சாத்தியமற்றது என முன்னாள் நியூசிலாந்து கேப்டன் ப்ரெண்டன் மெக்கல்லம் வெளிப்படையாக பேசியுள்ளார்.
மெக்கல்லம் கணிப்பு:
அதே சமயம் பும்ரா வந்துள்ளதால் சொந்த மண்ணில் இந்தியா ஃபைனலுக்கு செல்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் அவர் இங்கிலாந்தும் மிகப்பெரிய சவாலை கொடுக்கும் அணியாக இருக்கும் என்று கணித்துள்ளார். மேலும் ஆசியாவில் நடைபெறும் இத்தொடரில் வங்கதேசம் உட்பட எந்த அணியையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்று நிதர்சனமாக பேசும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இந்தியா வலுவான அணி என்று நினைக்கிறேன். குறிப்பாக பும்ரா மீண்டும் திரும்பியுள்ளது உங்களுடைய அணியின் நீளத்தை அதிகரிக்கும்”
“ஏனெனில் முக்கியமான சமயங்களில் எப்படி தம்முடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியை வென்று கொடுக்க முடியும் என்பது அவருக்கு தெரியும். எனவே அவர் வந்துள்ளதால் இந்திய அணி வலுவாக இருக்கிறது. மேலும் இந்திய அணியில் நிறைய திறமையும் இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஐபிஎல் தொடரில் நிறைய இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு சர்வதேச அளவிலும் இந்தியாவுக்காக வெற்றிகரமாக தங்களுடைய கேரியரில் செயல்படுகின்றனர். எனவே இந்தியா இத்தொடரின் கடைசியில் ஒரு அணியாக என்று நான் எதிர்பார்க்கிறேன்”
“இந்த உலகக்கோப்பையில் செமி ஃபைனலில் விளையாடும் அணிகளை கணிப்பது மிகவும் கடினமாகும். சில நேரங்களில் உலகக் கோப்பையின் வெற்றியாளர் அணிகளை பற்றி நீங்கள் கணிப்பது நியாயமாக இருக்க வேண்டும். அந்த வகையில் இந்தியா அங்கு இருக்கும் என்று நினைக்கிறேன். இங்கிலாந்துக்கும் நல்ல வாய்ப்பு இருக்கிறது. அதே போல ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து போன்ற அணிகளும் உலக கோப்பையில் வெல்வதற்கான வழிகளை கண்டறியும் திறமையை கொண்டுள்ளன”
“அதே சமயம் இது போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் வங்கதேசத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது. எனவே இந்த உலக கோப்பை அனைவருக்கும் திறந்த ஒன்றாக இருக்கிறது என்று நினைக்கிறேன். அதில் யார் நல்ல துவக்கத்தை பெறுகிறார்களோ அவர்களுக்கு இறுதியில் வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் இருக்கும் என்று கருதுகிறேன். அதே போல பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியில் இணைவது அவர்களையும் வலுப்படுத்துவதாக இருக்கிறது. ஏனெனில் அவர் மிகப்பெரிய தருணங்களில் நிலைத்து நின்று அசத்தக்கூடிய வீரர்களில் ஒருவராவார்”
இதையும் படிங்க:IND vs IRE : நாளைய 3 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ
“மேலும் கடைசி டி20 உலக கோப்பையிலும் ஒருநாள் உலக கோப்பையிலும் அவர் எந்தளவுக்கு இங்கிலாந்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே அவரைப் போன்றவருக்காக ஹரி ப்ரூக்கை நீங்கள் கழற்றி விடுவதில் தவறில்லை. எனவே வலுவான இங்கிலாந்து போலவே மற்ற அணிகளும் இந்த உலகக் கோப்பையை வெற்றி பெறுவதற்கு அனைவருக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இது போன்ற சூழ்நிலையில் ஆசிய கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கு நல்ல வாய்ப்பிருக்கிறது. அதில் அசத்துவதற்கு மேற்கத்திய அணிகளும் திட்டங்களுடன் வரும் என்று நம்புகிறேன்” என கூறினார்.