- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவரோட உழைப்ப ஐபிஎல் தொடரில் பாத்துருக்கேன், இனிமேல் உலகமே அவர பாராட்டும் – 24 வயது இந்திய வீரரை வாழ்த்திய மெக்கல்லம்

அயர்லாந்துக்கு எதிராக அவர்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இந்தியா முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா காயத்திலிருந்து குணமடைந்து கேப்டனாக கம்பேக் கொடுத்துள்ள இந்த தொடரில் விளையாடி வரும் இளம் வீரர்களுக்கு மத்தியில் ரிங்கு சிங் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்று அசத்த துவங்கியுள்ளார். சிலிண்டர் விற்பவரின் மகனாக ஏழை குடும்பத்தில் பிறந்து அடிமட்டத்திலிருந்து போராடி வந்த அவர் கடந்த 2018 முதல் ஐபிஎல் தொடரில் பெரும்பாலும் கூல்ட்ரிங்ஸ் தூக்குபவராக பெஞ்சில் அமர்ந்து வந்தார்.

அந்த காத்திருப்பின் பயனாக கடந்த வருடம் ஓரிரு வாய்ப்புகளை பெற்ற அவர் லக்னோவுக்கு எதிரான போட்டியில் போராடி கொல்கத்தாவை கிட்டத்தட்ட வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்தார். அதன் காரணமாக இந்த வருடம் முதல் முறையாக முழுமையான 14 போட்டிகளில் வாய்ப்பு பெற்ற அவர் 474 ரன்களை 149 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி அபாரமாக செயல்பட்டார். அதிலும் அழுத்தமான லோயர் மிடில் ஆர்டரில் எதிரணி பவுலர்களை தெறிக்க விட்ட அவர் குஜராத்துக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 28 ரன்கள் தேவைப்பட்ட போது அடுத்தடுத்த 5 சிக்சர்கள் அடித்து வரலாறு காணாத வெற்றியை பெற்றுக் கொடுத்து அனைவரது பாராட்டுகளை அள்ளினார்.

- Advertisement -

மெக்கல்லம் பாராட்டு:
அதன் காரணமாக ஒரு வழியாக இந்த தொடரில் முதல் முறையாக தேர்வான அவர் முதல் போட்டியில் அறிமுகமான போதிலும் மழையால் பேட்டிங் செய்யும் வாய்ப்பை பெறவில்லை. இருப்பினும் 2வது போட்டியில் ஆரம்பத்தில் தடுமாற்றமாக செயல்பட்டாலும் கடைசி 2 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 38 (21) ரன்களை விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்த அவர் 33 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றினார்.

அதன் காரணமாக ஆட்டநாயகன் விருதையும் வென்ற அவர் ஐபிஎல் தொடரில் செய்ததை தற்போது இந்தியாவுக்காகவும் செய்ய துவங்கியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில் கொல்கத்தா அணியில் நீண்ட காலமாக பெஞ்சில் இருந்த ரிங்கு சிங் இந்த இடத்தை பெறுவதற்கு போட்ட கடினமான உழைப்பை தாம் பயிற்சியாளராக இருந்த போது நேரில் பார்த்துள்ளதாக முன்னாள் நியூசிலாந்து வீரர் ப்ரெண்டன் மெக்கல்லம் பாராட்டியுள்ளார். அப்படி போராடி வந்துள்ள ரிங்கு சிங் இந்தியாவுக்காகவும் அசத்துவதை இனி வருங்காலங்களில் இந்த உலகம் அதிகமாக பார்க்கும் என்று வாழ்த்துக்களை தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஆம் அவர் சர்வதேச அளவில் அறிமுகமாகி விளையாடுவதை பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஏனெனில் இதற்காக அவர் எடுத்த முயற்சிகளையும் போராட்டத்தையும் நான் பார்த்திருக்கிறேன். இந்த வாய்ப்பு ரிங்குவுக்கு எளிதாக கிடைத்து விடவில்லை. இந்த வாய்ப்புக்காக அவர் கடினமாக உழைத்துள்ளார். குறிப்பாக வாய்ப்புகளை பார்க்காமல் அணிக்காக நிற்கும் அவர் நல்ல குணத்தை கொண்டவர். தற்போது அவரை பார்த்து விட்டு பலரும் எளிதாக கடந்து செல்வார்கள். ஆனால் ஐபிஎல் தொடரில் கடந்த ஒன்றரை வருடங்களாக அவர் எந்தளவுக்கு போராடியுள்ளார் என்பதை நாங்கள் பார்த்துள்ளோம்”

“எனவே நல்ல திறமை மிக்க அவர் தற்போது இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. சர்வதேச அளவில் ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் அசத்துவதற்கு சொந்தமான விளையாட்டை அவர் கொண்டுள்ளார். அவரால் ஸ்பெஷல் விஷயங்களை சாதிக்க முடியும். எனவே அவருக்கு நான் இந்த சமயத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல மனிதரான அவரிடம் நல்ல திறமையும் இருக்கிறது. அவருடைய கதையை இனிமேல் இந்த உலகம் ரசிக்கும் என்று நம்புகிறேன்” என கூறினார்.

இதையும் படிங்க:ஆசிய கோப்பை 2023 : அதிர்ஷ்டத்தால் தேர்வான சூரியகுமாருக்கு பதில் அந்த இளம் வீரர செலக்ட் பண்ணிருக்கலாம் – டாம் மூடி விமர்சனம்

அப்படி பலரின் பாராட்டுக்கு மத்தியில் அசத்தும் ரிங்கு சிங் 2024 டி20 உலகக்கோப்பை போன்ற வருங்கால தொடர்களில் இந்திய மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையில் இருக்கும் இடது கை பேட்ஸ்மேன் பிரச்சனையை தீர்த்து ஃபினிஷராக செயல்படுவார் என்று ரசிகர்கள் நம்புவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -