இங்க நாம ஜெயிக்குறது முக்கியமில்ல. ரோஹித்துக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கு – விராட் கோலியின் கோச்

Rajkumar
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்துள்ள டி-20 தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா ஒயிட்வாஷ் வெற்றியை பதிவு செய்து அசத்தியது. இதன் வாயிலாக கடந்த 2016ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக சர்வதேச டி20 போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள இந்தியா உலகின் புதிய நம்பர் ஒன் டி20 அணியாக சாதனை படைத்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

Rohith-1

- Advertisement -

இது மட்டுமல்லாமல் கடந்த வாரம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அகமதாபாத் நகரில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இதே போலவே அபாரமாக செயல்பட்ட இந்தியா 3 – 0 என்ற கணக்கில் வைட்வாஷ் வெற்றியை பதிவு செய்தது. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதல் முறையாக வைட்வாஷ் வெற்றியை பதிவு செய்த இந்திய கேப்டன் என்ற சூப்பர் சாதனையை ரோகித் சர்மா படைத்தார்.

புதிய கேப்டன் ரோஹித்:
இப்படி இந்தியாவிற்கு அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் கேப்டன் ரோகித் சர்மா கடந்த நவம்பர் மாதம் முதல் முறையாக இந்தியாவின் முழுநேர டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த சமயத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டி20 தொடரில் முதல் முறையாக முழு நேர கேப்டனாக செயல்பட்ட அவர் 3 – 0 என்ற கணக்கில் தொடரை வென்று கொடுத்து ஆரம்பத்திலேயே அதகள படுத்தினார். அதன் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் ஒருநாள் கேப்டனாக இருந்த விராட் கோலி அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டு புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமனம் செய்யப்பட்டார்.

Rohith

அந்த வேளையில் தென்னாப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் காயம் காரணமாக விலகியிருந்த அவர் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பின் தற்போது டெஸ்ட் போட்டிகளுக்கும் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து விரைவில் துவங்க இருக்கும் இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர் முதல் 3 வகையான இந்திய கிரிக்கெட்டுக்கும் முழுநேர கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படவுள்ளார்.

- Advertisement -

சொந்த மண்ணில் அசத்தல்:
வெஸ்ட்இண்டீஸ் தொடரை போல இதுவரை அவர் கேப்டன்ஷிப் செய்த பெரும்பாலான போட்டிகள் இந்திய மண்ணிலேயே நடைபெற்றுள்ளது. அதில் தனது அபார கேப்டன்ஷிப் வாயிலாக எதிரணிகளை தெறிக்கவிடும் கேப்டனாக ரோகித் சர்மா விளங்குகிறார். இந்நிலையில் சொந்த மண்ணில் வெற்றி பெறுவது பெரிதல்ல இனிமேல்தான் ரோகித் சர்மாவுக்கு மிகப்பெரிய சவால் காத்திருப்பதாக விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியது பின்வருமாறு :

Rajkumar-sharma

“ரோஹித் ஷர்மாவுக்கு உண்மையான சவால் சேனா நாடுகளில் காத்திருக்கிறது. ஏனெனில் வலுவான அணிகள் கூட இந்தியாவுக்கு வந்தால் சொதப்புவது இயல்பான ஒன்றாகும். எனவே ஒரு இந்திய கேப்டனின் உண்மையான திறமையை சேனா நாடுகளில் எத்தனை வெற்றிகளைப் பெற்றுத் தருகிறார் என்பதை பொறுத்தே மதிப்பிடப்படும். தற்போது கேப்டனாக புதிய பயணத்தை துவங்கிய ரோகித் சர்மா அபாரமாக செயல்பட்டு வருகிறார். இதே போலவே வெளிநாட்டுச் காலச் சூழ்நிலைகளிலும் அவர் மிகச் சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

- Advertisement -

அவர் கூறுவது போல பொதுவாகவே கிரிக்கெட்டில் வங்கதேசம் போன்ற கத்துக்குட்டி அணிகள் கூட சொந்த மண்ணில் புலியாக பாய்ந்து வெற்றிகளை பெறுவது இயல்பான ஒன்றாகும். அந்த வகையில் தற்போது சொந்த மண்ணில் வெற்றிகளை குவிக்க துவங்கியுள்ள ரோகித் சர்மா வெளிநாடுகளிலும் வெற்றிகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என ராஜ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். இதுவரை சொந்த மண்ணில் மட்டுமே பெரும்பாலும் கேப்டன்ஷிப் செய்துள்ள அவருக்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் தான் உண்மையான சவால் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

Rohith-1

அடுத்த கேப்டன்:
தற்போது ரோஹித் சர்மா 34 வயதை கடந்து விட்டதால் அடுத்த ஒரு சில ஆண்டுகளுக்கு மட்டுமே அவரால் 3 வகையான இந்திய அணிக்கும் கேப்டனாக செயல்பட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்தியாவின் அடுத்த கேப்டனை அவர் தலைமையில் உருவாக்க விரும்புவதாக தேர்வு குழு தலைவர் சேட்டன் சர்மா சமீபத்தில் தெரிவித்திருந்தார். குறிப்பாக இளம் வீரர்கள் கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை அடுத்த தலைமுறை இந்திய கேப்டன்களாக வளர்க்க படுவார்கள் என அவர் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இது பற்றி விராட் கோலியின் ஆரம்ப கால பயிற்சியாளர் ராஜ்குமார் கூறியது பின்வருமாறு. “உங்களால் 4 – 5 வீரர்களை ஒரே சமயத்தில் அடுத்த கேப்டனாக வளர்க்க முடியாது. எம்எஸ் தோனி தலைமையில் மிகவும் நீண்ட வருடங்களாக விராட் கோலி துணை கேப்டனாக இருந்ததால் அவரிடமிருந்து பல தலைமைப் பண்புகளை கற்று கொண்டார். எனவே அதே போலவே 3 வகையான இந்திய அணியிலும் நீண்டகாலம் விளையாடக்கூடிய ஏதேனும் ஒரு வீரரை கேப்டனாக வளர்க்க தேர்வு செய்ய வேண்டும். மேலும் நீங்கள் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் 3 வெவ்வேறு துணை கேப்டன்களை நியமித்தால் பின்பு அவர்களை வளர்ப்பதற்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் 3 வெவ்வேறு கேப்டன்களை நியமிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க : உயிருக்கு போராடிய சிறுவனின் ஆப்ரேஷனுக்காக 31 லட்சம் கொடுத்து காப்பாற்றிய இந்திய வீரர் – குவியும் வாழ்த்து

அவர் கூறுவது போல இந்திய டி20 அணிக்கு கே எல் ராகுல் துணை கேப்டனாகவும் டெஸ்ட் அணிக்கு ஜஸ்பிரித் பும்ரா துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் அந்த முடிவு மிக மிக தவறானது என தெரிவித்துள்ள ராஜ்குமார் அடுத்த கேப்டனாக யாராவது ஒரு இளம் வீரரை மட்டுமே வாய்ப்பளித்து வளர்க்க வேண்டும் என பிசிசிஐக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்.

Advertisement