IND vs AUS : கொஞ்சம் கூட முன்னேறல – ரன்களை வழங்கும் இந்திய பவுலரால் டி20 உ.கோ பற்றி கவாஸ்கர் கவலை

Gavaskar
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் துவங்கிய 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் பேட்டிங்கில் அசத்திய இந்தியா பந்து வீச்சில் மொத்தமாக சொதப்பி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. மொஹாலியில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 208/6 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 11, விராட் கோலி 2 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் தொடக்க வீரர் கேஎல் ராகுல் அதிரடியாக 55 (35) ரன்களும் மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ் 46 (25) ரன்களும் எடுக்க இறுதியில் ஹர்திக் பாண்டியா 7 பவுண்டரி 5 சிக்சருடன் 71* (30) ரன்கள் விளாசி அற்புதமான பினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

அதை தொடர்ந்து 209 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு தொடக்க வீரர் ஆரோன் பின்ச் 22 (13) ரன்களில் ஆட்டமிழந்தாலும் மற்றொரு தொடக்க வீரர் கேமரூன் க்ரீன் அதிரடியாக 8 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 61 (30) ரன்கள் விளாசி வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார். அவருக்குப்பின் ஸ்டீவ் ஸ்மித் 35, கிளன் மேக்ஸ்வெல் 1, ஜோஸ் இங்லீஷ் 17, டிம் டேவிட் 18 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் குறைவான ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் அதிரடி காட்டிய மேத்தியூ வேட் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 45* (21) ரன்கள் விளாசி பினிஷிங் செய்து வெற்றி பெற வைத்தார்.

சொதப்பும் புவி:
அதனால் எளிதாக வென்ற ஆஸ்திரேலியா 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் பேட்டிங்கில் அசத்தினாலும் பந்து வீச்சில் அக்சர் படேல் தவிர எஞ்சிய இந்திய பவுலர்கள் அனைவரும் 10க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கியதால் தோல்வியை சந்தித்த இந்தியா எஞ்சிய போட்டிகளில் வென்றால் மட்டுமே சொந்த மண்ணில் இந்த தொடரை வென்று தலை நிமிர முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

Bhuvi

முன்னதாக இப்போட்டியில் காயத்திலிருந்து திரும்பிய ஹர்ஷல் பட்டேல் மற்றும் 3 வருடங்கள் கழித்து அணிக்கு திரும்பிய உமேஷ் யாதவ் ஆகியோர் தடுமாறுவார்கள் என்பதை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டிய சீனியர் பவுலர் புவனேஸ்வர் குமார் கடைசி கட்ட ஓவர்களில் அனுபவத்தை காட்டாமல் ரன்களை வாரி வழங்கியது தோல்விக்கு முக்கிய காரணமானது. குறிப்பாக 17வது ஓவரில் 15 ரன்களைக் கொடுத்த அவர் 19வது ஓவரில் 18 ரன்களைக் கொடுத்து வெற்றியை கோட்டை விட்டார்.

- Advertisement -

பொதுவாகவே பவர் பிளே ஓவர்களில் புதிய பந்தை ஸ்விங் செய்து துல்லியமாக பந்து வீசக்கூடியவர் என பெயரரெடுத்த அவர் கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அதிலும் சமீபத்திய ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிராக 19வது ஓவரில் முறையே 25, 21 ரன்கள் தேவைப்பட்ட போது முறையே 19, 14 ரன்களை வாரி வழங்கிய அவர் கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும் இன்னும் அதில் கொஞ்சமும் முன்னேறாமல் அதே போல் பந்து வீசியது ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.

Gavaskar

கவாஸ்கர் கவலை:
இந்நிலையில் உலக கோப்பையில் விளையாடப்போகும் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் புவனேஸ்வர் குமார் தொடர்ந்து கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்குவது இந்திய அணிக்கு கவலையளிப்பதாக முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நேற்றைய போட்டியில் பனியின் தாக்கம் இருந்ததாக எனக்கு தெரியவில்லை. ஏனெனில் பீல்டர்களும் பவுலர்களும் பந்துகளையும் கைகளையும் உலர்த்த துண்டுகளைப் பயன்படுத்தியதை நான் பார்க்கவில்லை. எனவே மோசமான பந்து வீச்சுக்காக மன்னிப்பு வழங்க முடியாது”

- Advertisement -

“நாம் சரியாக பந்து வீசவில்லை. எடுத்துக்காட்டாக 19வது ஓவர் மிகப் பெரிய கவலையாக மாறியுள்ளது. அதிலும் புவனேஸ்வர் குமார் போன்ற ஒருவர் நாம் எதிர்பார்ப்பதை விட ஒவ்வொரு முறையும் அதிக ரன்களை வழங்குகிறார். அதிலும் பாகிஸ்தான், இலங்கை (ஆசிய கோப்பையில்) மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 19வது ஓவரில் 18 பந்துகளை வீசிய அவர் 49 ரன்களை கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க : IND vs AUS : அவர் இருக்கும்போது சம்மந்தமின்றி உமேஷ் தேவையா, ரோஹித் – டிராவிட்டை வெளுக்கும் ரசிகர்கள்

அதாவது ஒரு பந்துக்கு 3 ரன்களை கொடுக்கிறார். ஆனால் அவரைப் போன்ற அனுபவமும் பெயரும் பெற்றவர் 18 பந்துகளில் 35 – 36 ரன்களை மட்டுமே கொடுத்திருக்க வேண்டும். இருப்பினும் நடந்தது வேறு கதையாக உள்ளது. எனவே உலகக் கோப்பைக்கு முன்பாக இந்தியாவுக்கு இது மிகப் பெரிய கவலையாக மாறியுள்ளது” என்று கூறினார்.

Advertisement