அன்றும் இன்றும் என்றும் ! அதான் நம்ம புவி – என பாராட்டுகளை அள்ளும் புவனேஸ்வர் குமார், எதற்கு தெரியுமா?

Bhuvi
- Advertisement -

ஐபிஎல் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் எதிரணி பவுலர்களை புரட்டி எடுத்து ரன் மழை பொழிந்து தங்களது அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்து வருகின்றனர். அதிலும் ஒருசில பவுலர்கள் ஒரே ஓவரில் 20 – 30 ரன்களை வாரி வழங்கி கையில் இருக்கும் தங்களது அணியின் வெற்றியை எதிரணிக்கு வள்ளல் பரம்பரையாக பரிசளித்து வருவதை பார்த்து வருகிறோம். ஆனால் அவர்களுக்கு மத்தியில் இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் தனது துல்லியமான பந்துவீச்சால் ரசிகர்களின் லைக்ஸ்களை அன்று போல இன்றும் அள்ளி வருவதை பற்றி பார்ப்போம்.

bhuvi 1

- Advertisement -

மே 5-ஆம் தேதி நடைபெற்ற 50-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்கேற்றன. இந்த போட்டியில் ஐதராபாத் அணியில் விளையாடிய தமிழக வீரர்கள் நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவருமே காயத்தால் விலகியதால் பங்கேற்கவில்லை.

தெறிக்கவிட்ட டெல்லி:
அந்த நிலைமையில் பந்து வீசிய ஹைதராபாத்துக்கு முதல் ஓவரிலேயே மந்தீப் சிங்கை புவனேஸ்வர் குமார் டக் அவுட் செய்து அசத்தினார். அதன்பின் மிட்செல் மார்ஷ் 10 (7) கேப்டன் ரிஷப் பண்ட் 26 (16) ஆகிய வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டானதால் தடுமாறிய டெல்லியை மறுபுறம் நங்கூரமாக நின்ற டேவிட் வார்னர் அதிரடியாக 12 பவுண்டரி 3 சிக்சர்களை பறக்கவிட்டு 92* (58) ரன்கள் எடுத்து மீட்டெடுத்தார். அவருக்கு உறுதுணையாக கடைசி ஓவர்களில் ஹைதராபாத் பவுலர்களை புரட்டி எடுத்த ரோவ்மன் போவல் 3 பவுண்டரி 6 சிக்சர்கள் 67* (35) ரன்கள் எடுத்து மிரட்டல் பினிஷிங் கொடுத்தார்.

David Warner Rovman Powell

அதனால் அந்த நிர்ணயித்த 208 ரன்களை துரத்திய ஹைதராபாத்துக்கு வில்லியம்சன் 4 (11) அபிஷேக் சர்மா 7 (6) ராகுல் திரிபாதி 22 (18) ஆகிய முதல் 3 வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறினர். அதனால் ஏற்பட்ட சரிவால் மிடில் ஆர்டரில் ஐடன் மார்க்ரம் 42 (25) ரன்களும் நிக்கோலஸ் பூரான் 62 (34) ரன்கள் எடுத்த போதிலும் 20 ஓவர்களில் 186/8 ரன்களை மட்டுமே எடுத்து ஹைதராபாத் 21 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. இதனால் பங்கேற்ற 10 போட்டிகளில் 5-வது தோல்வியை பதிவு செய்து அந்த அணி ப்ளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது. மறுபுறம் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசத்திய டெல்லி 10 போட்டிகளில் 5-வது வெற்றியைப் பதிவு செய்து பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

- Advertisement -

தனிஒருவன் புவி:
இந்த போட்டியில் உம்ரான் மாலிக், சீன் அபோட், ஷ்ரேயஸ் கோபால் என அத்தனை ஹைதராபாத் பவுலர்களும் டெல்லிக்கு சுமார் 10க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கினார்கள். அதிலும் 157 கி.மீ வேகப்பந்துகளை வீசிய உம்ரான் மாலிக் அதற்கு ஈடாக 52 ரன்களை பரிசளித்தார். ஆனால் 125 – 140 என்ற சீரான கி.மீ வேகத்தில் 4 ஓவர்களில் 25 ரன்களை வெறும் 6.25 என்ற அற்புதமான எக்கனாமியில் பந்து வீசிய புவனேஸ்வர் குமார் மட்டும் சிறப்பாக பந்து வீசினார்.

bhuvi

அதிலும் முதல் ஓவரிலேயே மந்தீப் சிங் விக்கெட் எடுத்து மெய்டன் ஓவராக வீசிய அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய 2-வது பவுலர் என்ற இர்பான் பதான் சாதனையை சமன் செய்தார். அந்தப் பட்டியல் இதோ:
1. பிரவின் குமார் : 14
2. புவனேஸ்வர் குமார்/இர்பான் பதான் : 10*

- Advertisement -

நேற்றைய போட்டியில் டெல்லி 207 ரன்கள் அடித்த நிலையில் புவனேஸ்வர் குமார் மட்டும் 25 ரன்களைக் கொடுத்து இதர ஹைதராபாத் பவுலர்களை காட்டிலும் தனி ஒருவனாக காட்சியளித்தார். அதேபோல் சென்னைக்கு எதிரான முந்தைய போட்டியிலும் அந்த அணி 202 ரன்கள் எடுத்த போது இதர பவுலர்கள் ரன்களை வாரி வழங்கிய போது அவர் 22 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

அன்றும் இன்றும் என்றும்:
அதைவிட கடந்த 2013இல் சின்னசாமி மைதானத்தில் கிறிஸ் கெயில் எனும் சூறாவளி புயல் புனே வாரியர்ஸ் இந்திய அணியை சுழன்றடித்து 175* ரன்கள் விளாசியதை எந்த ரசிகர்களும் மறக்க முடியாது. அன்றைய நாளில் மற்ற அனைத்துப் பவுலர்களும் 12க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கிய நிலையில் போர்க்களத்திற்கு மத்தியில் பூவாக புவனேஸ்வர் குமார் மட்டும்  4 ஓவர்களில் 23 ரன்களை வெறும் 5.75 என்ற அற்புதமான எக்கனாமியில் வீசினார். அன்றைய நாளில் முரட்டுத்தனமான பார்மில் இருந்த கெயில் கூட புவனேஸ்வர் குமாரை அடிக்க முடியவில்லை.

இதையும் படிங்க : இவருக்காக அந்த வைரத்தை விட்டிங்களே! நட்சத்திர வீரரால் ஹைதராபாத்தை கலாய்க்கும் ரசிகர்கள் – என்ன நடந்தது?

அதன் காரணமாகவே புவனேஸ்வர் குமார் என்றால் துல்லியம் கட்டுப்பாடு தரம் என்ற தாரக மந்திரத்தை கொண்டவர் என்று ரசிகர்கள் போற்றி வருகின்றனர். அந்த வகையில் 10 வருடங்களுக்கு முன்பு எப்படி பந்துவீசினாரோ அதே புவனேஸ்வர் குமார் அன்றும் இன்றும் செயல்பட்டு என்றும் துல்லியத்திற்கு அடையாளமாய் நிற்பேன் என்று நிரூபித்துள்ளது உண்மையாகவே பாராட்டத்தக்கதாகும்.

Advertisement