
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்று சாதனை படைத்தது. அத்தொடரில் துபாயில் தங்களது போட்டிகளை விளையாடிய இந்தியா தோல்வியே சந்திக்காமல் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு அனைவருமே முக்கிய பங்காற்றிய நிலையில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி வெறும் 3 போட்டியில் 9 விக்கெட்டுகளை எடுத்து கருப்பு குதிரையாக செயல்பட்டார்.
குறிப்பாக செமி ஃபைனலில் இந்தியாவை அடித்து நொறுக்கக்கூடிய டிராவிஸ் ஹெட்டை அவுட்டாக்கிய அவர் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க முக்கிய பங்காற்றினார். முன்னதாக இதே துபாயில் நடைபெற்ற 2021 டி20 உலகக் கோப்பையில் சக்கரவர்த்தி 3 போட்டிகளில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் சுமாராக விளையாடினார். அதனால் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்ட அவர் கடந்த ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா வெல்ல உதவினார்.
அதனால் 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த வருண் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியதால் கடைசி நேரத்தில் சாம்பியன்ஸ் டிராபியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த வாய்ப்பில் அபாரமாக பவுலிங் செய்த அவர் அதே துபாயில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி நாயகனாக மாறியுள்ளார். இந்நிலையில் 2021இல் வருண் அழுத்தத்தால் மிகவும் தடுமாறியதாக அப்போதைய பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார்.
அதனால் எந்த மாதிரியான ஃபீல்டிங்கை செட்டிங் செய்ய வேண்டும் என்பது பற்றி கேப்டன் விராட் கோலியிடம் சொல்வதற்கே வருண் பயந்ததாகவும் அருண் கூறியுள்ளார். ஆனால் தற்போது மனதளவில் பெரிய முன்னேற்றத்தை சந்தித்துள்ள வருண் சிறப்பாக செயல்படுவதாக அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி பரத் அருண் பேசியது பின்வருமாறு.
“கண்டிப்பாக அந்த சமயத்தில் அவர் பெரிய தடுமாற்றத்தை சந்தித்தார். எந்த மாதிரியான ஃபீல்டிங் தனக்கு வேண்டும் என்று விராட் கோலியிடம் சொல்வதற்கு கூட அவர் பயந்தார். அதனால் தமக்கு என்ன ஃபீல்டிங் கிடைத்ததோ அதை வைத்து அவர் பௌலிங் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனால் தற்போது அவரைப் பாருங்கள். அவர் முற்றிலும் வித்தியாசமான கிரிக்கெட்டராக மாறியுள்ளார்”
இதையும் படிங்க: இதனால தான் ஷமி உலகத்தரம்.. செமி ஃபைனலில் ரோஹித்தை விட்டது தவறு தான்.. ஆஸி வீரர் கூப்பர் பேட்டி
“கிரிக்கெட் என்பது 90 சதவீதம் மனநிலையைப் பொறுத்தது என்று நாம் சொல்வோம். தற்போது வருண் அதற்கு உண்மையான எடுத்துக்காட்டாக நிற்கிறார். தற்போது பந்தை கொடுத்தால் என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்குத் தெரிகிறது. தனது சொந்த வழியில் ஃபீல்ட் செட்டிங் செய்யும் அவர் தன் மீது அதிக தன்னம்பிக்கையையும் கொண்டுள்ளார்” என்று கூறினார்.