ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்று சாதனை படைத்தது. பாகிஸ்தானில் நடைபெற்ற அந்தத் தொடரில் பாதுகாப்பு பிரச்சனைகளால் துபாயில் விளையாடிய இந்தியா தோல்வியே சந்திக்காமல் கோப்பையை முத்தமிட்டது. குறிப்பாக அரையறுதிப் போட்டியில் உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து நாக் அவுட் செய்த இந்தியா 2023 உலகக் கோப்பை தோல்விக்கு பதிலடி கொடுத்தது.
முன்னதாக அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக இளம் வீரர் கூப்பர் கோன்லி விளையாடும் வாய்ப்பை பெற்றார். அந்த வாய்ப்பில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 9 பந்துகளை எதிர்கொண்டு ஷமியின் வேகத்தில் டக் அவுட்டானார். அதே போல இந்தியா பேட்டிங் செய்த போது கேப்டன் ரோஹித் சர்மா அவரிடம் கேட்ச் கொடுத்தார்.
ஷமிக்கு பாராட்டு:
ஆனால் அதையும் சரியாகப் பிடிக்காத கோன்லி ஆஸ்திரேலியா அந்தப் போட்டியில் தோல்வியை சந்திப்பதற்கு ஒரு காரணமாக அமைந்தார் என்றே சொல்லலாம். இந்நிலையில் உலகத்தரம் வாய்ந்த ஷமியிடம் சிறந்த பந்தில் தாம் அவுட்டானதாக கோன்லி தெரிவித்துள்ளார். மேலும் ரோகித் சர்மா கேட்சை தவற விட்டது ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் அது விளையாட்டின் அங்கம் என்றும் அவர் நேர்மறையாக பேசியுள்ளார்.
அப்படி சுமாராக விளையாடிய தாம் மீண்டும் முயற்சித்து நன்றாக செயல்பட்டு ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன் என்று கோன்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஷமி காரணத்தாலேயே உலகத்தரம் வாய்ந்த பவுலராக இருக்கிறார். அவர் நிறைய கிரிக்கெட்டை விளையாடியுள்ளார்”
சொதப்பிய கோன்லி:
“நாளின் இறுதியில் இந்தியாவுக்கு எதிராக நாங்கள் சிறந்தப் போட்டியில் விளையாடினோம். அதில் எங்களுடைய அணி எடுத்துச் செல்வதற்கு நிறைய பாடங்கள் கிடைத்தது. கிரிக்கெட்டில் நீங்கள் சில நேரங்களில் கேட்ச் விடுவீர்கள். ரோகித் சர்மா கேட்ச்சை தவற விட்டது முழுவதுமாக எனது மனநிலைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது”
இதையும் படிங்க: 30 ஆச்சு.. இனிமேலும் பும்ரா இளம் பையன் கிடையாது.. இதை ஸ்மார்ட்டா செய்யனும்.. மெக்ராத் அறிவுரை
“ஏனெனில் அந்த சமயத்தில் பவுலிங் செய்து கொண்டிருந்த நான் அதை எப்படியாவது முழுமையாக முடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அடுத்ததாக ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்” எனக் கூறினார். 21 வயதாகும் அவர் இதுவரை ஆஸ்திரேலியாவுக்காக ஒரு டெஸ்ட், 4 ஒருநாள், 2 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.



