ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றிகளை பதிவு செய்தது. ஆனால் அகமதாபாத் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பேட்டிங்கில் சுமாராக விளையாடிய இந்தியா 240 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு மறக்க முடியாத சோகத்தை கொடுத்தது.
அதனால் சொந்த மண்ணில் 2011 போல கோப்பை வென்று சரித்திரம் படைப்பதற்கான பொன்னான வாய்ப்பை தவற விட்ட இந்தியா தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் தோல்வியை சந்தித்தது. அந்த தோல்வியால் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தியும் கோப்பையை வெல்ல முடியாத கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அகமதாபாத் மைதானத்தில் கண்கலங்கி நின்றது இப்போதும் ரசிகர்களால் மறக்க முடியாததாக இருக்கிறது.
மற்றொரு வாய்ப்பு:
இருப்பினும் மனதை தேற்றிக்கொண்டு அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தொடரில் விளையாடுவதற்காக களமிறங்கியுள்ளது. அதில் நேற்று துவங்கிய டி20 தொடரில் சூரியகுமார் யாதவும் அடுத்ததாக நடைபெறும் ஒரு நாள் தொடரில் கே.எல் ராகுலும் இந்தியாவின் கேப்டன்களாக செயல்படுகின்றனர்.
அதைத்தொடர்ந்து இறுதியாக 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அடங்கிய முதன்மை இந்திய அணி விளையாடுகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்க மண்ணில் வரலாற்றில் இதுவரை சச்சின், தோனி, விராட் கோலி உள்ளிட்ட எந்த இந்திய கேப்டனாலும் ஒரு டெஸ்ட் தொடரை கூட வெல்ல முடியவில்லை.
எனவே உலகக் கோப்பையில் தவற விட்ட சரித்திரத்தை தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய கேப்டனாக சாதனை படைக்க ரோகித் சர்மாவுக்கு இம்முறை நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். எனவே அதில் ரோகித் சர்மா சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.
இதையும் படிங்க: இந்திய அணிக்கு 6வது இடத்தில் விளையாட.. அவரை விட சிறந்த பேட்ஸ்மேன் கிடையாது.. ஜேக் காலிஸ்
“கடந்த 6 – 8 மாதங்களில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தங்களுடைய உச்சகட்ட ஃபார்மில்அபாரமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். ஜேக் காலிஸ் சொன்னது போல இந்தியா இந்த டெஸ்ட் தொடரை வெல்வதற்கு ரோஹித் சர்மா வெற்றியின் சாவியாக இருப்பார். அவர் 3, 4, 5 ஆகிய இடங்களில் விளையாடும் பேட்ஸ்மேன்களுக்கு ஆரம்பத்திலேயே நன்றாக விளையாடி நல்ல அடித்தளத்தை கொடுக்க வேண்டும். மொத்தத்தில் எது நடந்தாலும் உலகக்கோப்பை ஃபைனலில் சந்தித்த தோல்வியை சரி செய்வதற்கு ரோகித் சர்மாவுக்கு இது அற்புதமான வாய்ப்பாகும்” என்று கூறினார்.