
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது கடந்த ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் நகரில் துவங்கி நேற்று நடைபெற்ற ஐந்தாம் நாள் ஆட்டத்துடன் நிறைவுக்கு வந்தது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த போட்டியில் இங்கிலாந்து அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி தொடரின் ஆரம்பத்தியிலேயே 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 471 ரன்களை குவிக்க அடுத்ததாக தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 465 ரன்களை குவித்தது.
அதன் காரணமாக 6 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 364 ரன்களை குவித்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை வெகு சிறப்பாக துரத்திய இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 373 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் : இந்த மைதானத்தில் ஏற்கனவே சில நல்ல நினைவுகள் எங்களுக்கு இருக்கின்றன. அதில் இந்த வெற்றியும் சேர்ந்ததில் மிகவும் மகிழ்ச்சி. இந்த டெஸ்ட் போட்டியில் ஐந்தாவது நாள் கடைசி மணி நேரம் வரை போட்டி சென்றது மிகச் சிறப்பாக இருந்தது. இந்த போட்டியில் எங்களது வெற்றிக்கு நல்ல வாய்ப்பு இருந்ததாக கருதினோம்.
இந்த மைதானத்தில் பேட்டிங்குக்கும் சரி, பந்து வீச்சுக்கும் சரி நல்ல சாதகம் இருந்ததனால் சிறப்பாக செயல்பட முடிந்தது. நான்காவது இன்னிங்சில் இலக்கை நோக்கி செல்வது நிச்சயம் அழுத்தமான ஒரு விடயம் தான். ஆனாலும் எங்களது அணியின் துவக்க வீரர்களான ஜேக் கிராவ்ளி மற்றும் பென் டக்கெட் ஆகியோர் மிகச் சிறப்பான துவக்கத்தை அளித்து சேசிங்கிற்கு நல்ல அடித்தளத்தை அமைத்தனர்.
இதையும் படிங்க : 9க்கு 8 தோல்வி.. வெறும் 257 டார்கெட் 44%.. கிங் கோலியின் அருமை இப்போ புரியுதா? பாதாளத்தில் தவிக்கும் இந்தியா
அவர்களது பார்ட்னர்ஷிப் இந்த வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது. பந்துவீச்சிலும் எங்கள் அணியின் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இந்த தொடரினை வெற்றியுடன் துவங்கியதில் மகிழ்ச்சி இன்னும் அடுத்த நான்கு போட்டிகளிலும் இதேபோன்ற சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம் என பென் ஸ்டோக்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.