அவரைப்போல் யாரும் என்னை நம்பல, அவருடன் விளையாடியதே வாழ்வின் சிறந்த தருணம் – விராட் கோலி உருக்கம்

Kohli
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் ஆகஸ்ட் 27 முதல் புகழ் பெற்ற ஆசிய கோப்பை நடைபெறுகிறது. இந்த தொடரில் கோப்பையை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்புக்கு சமமாக இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பார்முக்கு திரும்பி விமர்சனங்களை அடித்து நொறுக்குவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏனெனில் கடந்த 2019க்குப்பின் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளுக்கும் மேலாக சதமடிக்கவில்லை என்ற காரணத்தால் அவரை அணியிலிருந்து நீக்குமாறு நிறைய முன்னாள் வீரர்கள் விமர்சித்துள்ளனர்.

களமிறங்கினாலே சதமடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்க்கும் அளவுக்கு கடந்த 10 வருடங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் 23000+ ரன்களையும் 70 சதங்களையும் விளாசி ஏராளமான வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து தன்னை உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்று நிரூபித்துள்ள அவர் தனக்கென்று தங்கமான தரத்தை உருவாக்கி வைத்துள்ளதே தற்போது அவருக்கு பிரச்சினையாகியுள்ளது. ஏனெனில் இந்த சோதனை காலங்களிலும் இடையிடையே 40, 50, 70 போன்ற நல்ல ரன்களை அவ்வப்போது அடித்து வரும் அவர் இப்போதும் 2019க்குப்பின் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்களின் பட்டியலில் ஜொலிக்கிறார்.

- Advertisement -

பழைச மறந்துட்டாங்க:
அப்படிப்பட்ட அவரது தரத்தை உணர்ந்த ரிக்கி பாண்டிங், பிரையன் லாரா போன்ற வெளிநாட்டு ஜாம்பவான்கள் இங்கு முன்னாள் வீரர்கள் என்ற பெயருடைய பலரும் 70 சதங்களை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது என்ற வகையில் விமர்சனத்தை மிஞ்சும் ஆதரவு கொடுக்கின்றனர். ஏனெனில் பகலானால் இரவு வரும் என்பது இயற்கையின் நியதியாக இருக்கும் நிலையில் 2011 முதல் உச்சத்தை மட்டுமே சந்தித்த விராட் கோலி முதல் முறையாக வீழ்ச்சியை சந்தித்துள்ளார்.

இருப்பினும் சதமடிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக பார்ம் அவுட்டாகி விட்டார் என்ற முத்திரையுடன் நிறைய முன்னாள் இந்திய வீரர்களும் ரசிகர்களும் அவரை அணியிலிருந்து நீக்குமாறு பழைய பங்கை மறந்து தினந்தோறும் விமர்சனங்களை அம்பாக பாய்ச்சுகிறார்கள். அதுபோக அணி நிர்வாகத்திலும் முன்பு கிடைத்த பழைய ஆதரவு இப்போது விராட் கோலிக்கு கிடைப்பதில்லை.

- Advertisement -

தோனியை போல் யாருமில்லை:
அதனால் என்னதான் ஆதரவு கிடைத்தாலும் தனிமையை உணர்வதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்த விராட் கோலி தற்போது முன்னாள் கேப்டன் தோனியை போல் தனது வாழ்நாளில் தன்னை யாரும் நம்பவில்லை என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இது பற்றி தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை இணைத்து தனது டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இவரின் நம்பிக்கையைப் பெற்ற துணைக் கேப்டனாக விளையாடியது எனது கேரியரில் மிகவும் மகிழ்ச்சியான சுவாரசியமான தருணமாகும். எங்களுடைய பார்ட்னர்ஷிப்கள் எனது வாழ்நாளில் எப்போதும் எனக்கு ஸ்பெஷலாகவே இருக்கும். 7+18” என குறிப்பிட்டு தோனி மற்றும் தனது ஜெர்சி நம்பர்களை இணைத்து பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த இந்திய ரசிகர்களின் நெஞ்சங்கள் அப்படியே உருகிப்போகிறது என்றே கூறலாம். கடந்த 2008 ஐசிசி அண்டர்-19 உலகக்கோப்பையை கேப்டனாக வென்று இந்தியாவுக்காக அறிமுகமான விராட் கோலி ஆரம்ப காலத்தில் ரொம்பவே தடுமாறினார். இருப்பினும் சீனியர்களுக்கு பதிலாக இவருக்கு வாய்ப்பு கொடுத்ததால் நிறைய விமர்சனங்களை வாங்கி கட்டிக்கொண்ட தோனி அதை எப்போதும் அவரிடம் காட்டாமல் முழு ஆதரவையும் வாய்ப்புகளையும் கொடுத்து உலகத்தரம் வாய்ந்த வீரராக உருவெடுக்க முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

குரு சிஷ்யன்:
அதேபோல் 2014இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர் தோல்விகளை சந்தித்து கொண்டிருந்தபோது ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் நடைபெற்ற போட்டியில் காயமடைந்த தமக்கு பதிலாக கேப்டன்ஷிப் செய்த விராட் கோலி இந்தியாவை வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்தார். அப்போது தமக்கு அடுத்து அவர் தான் இந்தியாவை வழிநடத்த சரியானவர் என்பதை உணர்ந்து பணிச் சுமையையும் கருத்தில் கொண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தமாக ஓய்வு பெற்ற தோனி 2016 வரை வெள்ளைப்பந்து கேப்டனாக மட்டும் செயல்பட்டார்.

அந்த பதவியையும் 2019 உலகக்கோப்பைக்கு சிறப்பான அணியை கட்டமைத்து தயாராக வேண்டும் என்பதற்காக 2017இல் ராஜினாமா செய்து விராட் கோலி தலைமையில் சாதாரண வீரராக விளையாடி ஆச்சரியப்படுத்தினார். அப்படி தனது வளர்ச்சிக்கும் தன்னை நம்பி கேப்டன்ஷிப் பொறுப்புகளை ஒப்படைத்த தோனி எப்போதுமே என்னுடைய கேப்டன் என்று விராட் கோலி தொடர்ந்து நிறைய தருணங்களில் கூறி வருகிறார்.

இதையும் படிங்க : டி20 தரவரிசையில் வரலாறு காணாத சரிவை சந்தித்த பும்ரா. அதுக்குன்னு இப்படியா? – நம்பவே மாட்டீங்க

தற்போது அனைவரும் விமர்சிக்கும் இந்த சூழ்நிலையில் “அவரைப் போல் என்னை யாரும் நம்பவில்லை, அவரது தலைமையில் விளையாடியதே தனது வாழ்வின் மிகச் சிறந்த தருணம்” என்று மீண்டும் ஒருமுறை தோனியுடனான நட்பை விராட் கோலி வெளிப்படுத்தியுள்ளார். மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில் அவரது தலைமையில் விளையாடினால் மிகச் சிறப்பாக இருக்கும் என்று இந்த பதிவின் வாயிலாக விராட் கோலி சொல்லாமல் சொல்ல வருகிறார்.

Advertisement