சர்வதேச அளவில் இந்தியாவுக்காக விளையாடும் இளம் வீரர்களை முன்கூட்டியே கண்டறியும் நோக்கத்தில் 2008ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஐபிஎல் தொடரால் பலரின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது. அதைப் தொடர்ந்து உலகம் முழுவதிலும் இருக்கும் அனைத்து நாடுகளிலும் பிரத்தியேக டி20 கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்த வருடம் தென்னாப்பிரிக்கா, அமீரகம் மற்றும் அமெரிக்காவில் புதிதாக பிரீமியர் லீக் தொடர்கள் துவங்கப்பட்டுள்ளன. முன்னதாக ஐசிசி நடத்தும் சர்வதேச போட்டிகளுக்கு நிகரான தரத்தை கொண்டுள்ள ஐபிஎல் தொடரில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான வீரர்கள் விளையாடுகிறார்கள்.
அப்படி ஐபிஎல் தொடரில் விளையாடி இந்தியாவின் கால சூழ்நிலைகளையும் இந்திய வீரர்களின் பலம் மற்றும் பலவீனங்களை வெளிநாட்டு வீரர்கள் நன்கு தெரிந்து வைத்துக் கொள்கிறார்கள். அதை ஐசிசி தொடர்களில் பயன்படுத்தும் அவர்கள் இந்தியாவை அடித்து நொறுக்கி வெற்றி காண்பது சமீப காலங்களில் சர்வ சாதாரணமாகி விட்டது. மறுபுறம் இந்திய வீரர்களின் தனித்துவம் போய்விடும் என்று கருதும் பிசிசிஐ அவர்களை வெளிநாடுகளில் நடைபெறும் டி20 தொடர்களில் விளையாட அனுமதிப்பதில்லை.
பிசிசிஐ ஆப்பு:
அது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் நடைபெறும் ஐசிசி தொடர்களில் இந்திய அணியினர் சொதப்ப மறைமுகம் காரணமாக இருக்கிறது. அதனால் வெளிநாட்டுத் தொடர்களில் இந்திய வீரர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இருப்பினும் அதற்கு பிசிசிஐ செவி சாய்க்காத நிலையில் ஐபிஎல் மற்றும் இந்திய உள்ளூர் தொடர்களில் அதிகாரப்பூர்வமாக ஓய்வை அறிவித்த பின்பே வெளிநாடுகளில் விளையாட முடியும் என்ற விதிமுறை இருக்கிறது.
அந்த நிலையில் போட்டி மிகுந்த இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத நட்சத்திரம் முன்னாள் வீரர்கள் விரைவாக ஓய்வு முடிவை அறிவித்து வெளிநாடுகளில் விளையாட துவங்கியுள்ளனர். எடுத்துக்காட்டாக யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, பதான் சகோதரர்கள், ராபின் உத்தப்பா போன்றவர்கள் சமீபத்திய வருடங்களில் ஓய்வு பெற்று லெஜெண்ட்ஸ் லீக் போன்ற டி20 தொடர்களில் விளையாடி வருகின்றனர். அதில் லேட்டஸ்டாக நட்சத்திர வீரர் ராயுடு 2023 ஐபிஎல் கோப்பையை வென்ற கையுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்து அமெரிக்காவில் புதிதாக துவங்கும் மேஜர் லீக் டி20 தொடரில் டெக்சாஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படி நட்சத்திர வீரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்கூட்டியே ஓய்வை அறிவித்து வெளிநாடுகளில் விளையாடுவதை விரும்பாத பிசிசிஐ அதை நிறுத்துவதற்கு புதிய விதிமுறையை கொண்டு வர உள்ளது. அதாவது சர்வதேச மற்றும் உள்ளூர் தொடர்களில் இருந்து விடைபெறும் இந்திய வீரர்கள் ஓய்வு பெற்று குறிப்பிட்ட சில வருடங்கள் நிறைவடையும் வரை வெளிநாட்டு தொடர்களில் விளையாட முடியாது என்ற புதிய விதிமுறையை கொண்டு வருவதற்கு ஜூலை 7ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பிரபல கிரிக்பஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
இருப்பினும் இது முன்னாள் வீரர்களின் வாழ்வில் மண்ணை அள்ளி போடும் முடிவு என்றால் மிகையாகாது. ஏனெனில் ஏற்கனவே கடும் போட்டி நிலவும் இந்திய அணியில் ராயுடு, ரெய்னா போன்ற வீரர்களுக்கு 100% வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை. அதே போல உள்ளூர் கிரிக்கெட்டில் 40 வயது வரை விளையாடினாலும் அவர்களுக்கு இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கனவிலும் கிடைக்காது. எனவே இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து தங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அவர்கள் இவ்வாறு ஓய்வெடுத்து வெளிநாட்டு தொடர்களில் விளையாடுவதில் எந்த தவறுமில்லை.
இதையும் படிங்க:சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு 50 கோடியினை வழங்கயிருக்கும் பி.சி.சி.ஐ – எதுக்கு தெரியுமா?
சொல்லப்போனால் இங்கே சர்பராஸ் கான் போன்ற உள்ளூர் தொடரில் மிரட்டும் இளம் வீரர்களுக்கே இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பதில்லை. மேலும் ஓய்வு பெற்று 5 வருடங்கள் முடிந்து 40 வயதை தாண்டி விட்டால் அவர்களுக்கு வெளிநாட்டு தொடரில் விளையாடும் வாய்ப்பு பறிபோய்விடும். மொத்தத்தில் நாங்கள் கொடுக்கும் மாதாந்திர பென்சன் தொகையை மட்டும் நம்பியிருங்கள் என்று சொல்ல வரும் பிசிசிஐ உங்களை அவ்வளவு எளிதில் வாழ விடுவோமா என முன்னாள் வீரர்களின் வாழ்வில் இப்படி விளையாடும் முடிவை எடுக்க தயாராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.