ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. அதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் வெற்றிகளைக் கண்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் மாபெரும் இறுதி போட்டியில் கோப்பையை வெல்வதற்காக பலப்பரீட்சை நடத்துவதற்கு தயாராகி வருகின்றன.
அப்போட்டியில் ஏற்கனவே 5 கோப்பைகளை கோப்பைகளை வென்று அனுப்பவமிகுந்த ஆஸ்திரேலியா 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் போல இந்தியாவை மீண்டும் வென்று 6வது கோப்பையை வெல்ல தயாராகி வருகிறது. அதற்கு சொந்த மண்ணில் 10 தொடர்ச்சியான போட்டிகளில் வென்று உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கும் இந்தியா 2011 போல கோப்பையை வென்று பதிலடி கொடுக்க உள்ளது.
கேப்டன்களுக்கு மரியாதை:
குறிப்பாக 2003 உலகக்கோப்பை ஃபைனல் மற்றும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் தோல்விகளுக்கு இப்போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்தியா களமிறங்க உள்ளது. அதனால் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த போட்டியில் 2023 உலகக் கோப்பையின் நிறைவு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த விழாவில் இதுவரை ஐசிசி உலகக் கோப்பைகளை வென்ற முன்னாள் கேப்டன்களை தொடரை நடத்தும் நாடு என்ற வகையில் பிசிசிஐ கௌரவிக்க உள்ளதாகவும் தெரிய வருகிறது. குறிப்பாக இதற்கு முன் உலகக் கோப்பைகளை தங்களுடைய நாட்டுக்கு வென்று கொடுத்த கேப்டன்களுக்கு ஸ்பெஷல் பிளேசரை அணிவித்து பிசிசிஐ கௌரவிக்க உள்ளது. இந்த நிகழ்வு ஃபைனலில் முதல் அணி பேட்டிங் செய்து முடித்ததும் நடைபெற உள்ளது.
இந்த அறிவிப்பின் படி 1975, 1979 உலகக் கோப்பைகளை வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கேப்டன் க்ளைவ் லாய்ட், 1983 உலகக் கோப்பையை வென்ற இந்திய ஜாம்பவான் கபில் தேவ், 1987 கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆலன் பார்டர், 1996 உலகக் கோப்பையை வென்ற இலங்கையின் அர்ஜுனா ரணதுங்கா, 1999, 2003, 2007 உலகக் கோப்பைகளை ஆஸ்திரேலியாவுக்கு வென்ற ஜாம்பவான்கள் ஸ்டீவ் வாக் மற்றும் ரிக்கி பாண்டிங், 2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய ஜாம்பவான் எம்எஸ் தோனி ஆகியோரை பிசிசிஐ கௌரவிக்க உள்ளது.
இதையும் படிங்க: இங்கேயும் பாகிஸ்தானுக்கு நேர்ந்த பரிதாபம்.. கபில் முதல் தோனி வரை முன்னாள் கேப்டன்களை கெளரவிக்கும் பிசிசிஐ
அவர்களுடன் 2015 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க், இங்கிலாந்துக்காக 2019 உலகக்கோப்பை வென்ற இயன் மோர்கன் ஆகியோரும் கௌரவிக்கப்பட உள்ளனர். ஆனால் இதில் 1992 உலகக்கோப்பையை வென்ற பாகிஸ்தான் ஜாம்பவான் இம்ரான் கான் அரசியல் பிரச்சனைகளால் தற்போது சிறையில் இருக்கிறார். அதன் காரணமாக இந்த கௌரவ விழாவில் அவர் கலந்து கொள்ள முடியாதது பாகிஸ்தானுக்கு இங்கேயும் பரிதாபத்தையும் அவமானத்தையும் கொடுக்க உள்ளது.