
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய ஆறு அணிகள் மோதும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு போட்டி துவங்க இன்னும் ஒரு சில தினங்களே எஞ்சியுள்ளது.
இந்த தொடருக்கு தயாராகும் விதமாக தற்போது ஆலூரில் பயிற்சி மேற்கொண்டுள்ள இந்திய அணியானது வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி இலங்கை நாட்டிற்கு புறப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான விரிசல் காரணமாக இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் இலங்கை நாட்டில் நடத்தப்பட இருக்கிறது.
ஆசிய கோப்பை தொடரானது பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்றால் இந்திய அணி அங்கு செல்லாது என ஏற்கனவே பிசிசிஐ அறிவித்திருந்த காரணத்தினால் இந்திய அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் அட்டவணை படுத்தப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமானது ஆகஸ்ட் 30-ஆம் தேதி முல்தானில் நடைபெற இருக்கும் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியை நேரில் காண வருமாறு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
அந்த அழைப்பில் பி.சி.சி.ஐ-யின் தலைவரான ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய்ஷா மற்றும் துணை பிரசிடென்ட் ராஜுவ் சுக்ளா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் அந்த அழைப்பை மறுத்துள்ள பிசிசிஐ : வீரர்களுக்கும் எங்களுக்கும் ஒரே விதிமுறைதான் அரசின் அனுமதியில்லாமல் நாங்கள் எங்கும் வரமாட்டோம் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி பிசிசிஐ-யின் சீனியர் அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள தகவலின் படி : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடமிருந்து முதல் போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது உண்மைதான். ஆனாலும் அரசாங்கத்தின் அனுமதியின்றி நாங்கள் அங்கு செல்லப்போவது கிடையாது. எங்களுக்கு பாகிஸ்தான் செல்ல எந்த ஒரு அனுமதியும் வழங்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க : அவங்கள மேல தான் தப்பு இருக்கு, அதுவும் ஒரு வகையான திருட்டு தான் – மன்கட் ரன் அவுட் பற்றி – ஏபிடி கருத்து
மொத்தம் 13 போட்டிகள் கொண்ட இந்த ஆசிய கோப்பை தொடரில் 4 போட்டிகள் மட்டுமே பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது. மீதமுள்ள போட்டிகள் அனைத்தும் இலங்கையில் தான் நடைபெற இருக்கிறது. அதேபோன்று இந்த தொடரின் முக்கியமான இந்தியா பாகிஸ்தான் போட்டி கண்டியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.