
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்று வரலாறு படைத்தது. கடந்த ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அந்தத் தொடரில் ஆரம்பம் முதலே அசத்திய இந்தியா தோல்வியே சந்திக்காமல் கோப்பையை வென்றது. குறிப்பாக தென்னாப்பிரிக்காவை ஃபைனலில் தோற்கடித்த இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்றது.
அந்தத் தொடரை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ ஏற்கனவே 124 கோடி பரிசுத் தொகையை அறிவித்திருந்தது. அதை மும்பை மாநகரில் பேரணியாக மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு மத்தியில் வந்த இந்திய அணிக்கு வான்கடே மைதானத்தில் ஏற்கனவே பரிசாக கொடுக்கப்பட்டது. இந்நிலையில் 2024 டி20 உலகச் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ மற்றுமொரு ஸ்பெஷல் பரிசை கொடுத்துள்ளது.
அதாவது நீல நிறத்தில் வைரக் கற்கள் பதிக்கப்பட்ட தங்க மோதிரத்தை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ பரிசாக கொடுத்துள்ளது. அந்த மோதிரத்தின் மையத்தில் நீல நிறத்தில் இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக அறியப்படும் அசோகச் சக்கரம் உள்ளது. அதைச் சுற்றி “டி20 உலகச் சாம்பியன் இந்தியா” என்று பொன்னெழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளது.
அதனுடைய பக்கவாட்டில் வீரர்களின் பெயர் மற்றும் அவர்களுடைய ஜெர்சி நம்பரும் அச்சிடப்பட்டுள்ளது. அது போக ஃபைனலில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் அடையாளமாக 7 என்ற எண்ணும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த மோதிரத்தை சமீபத்தில் நடைபெற்ற 2024 பிசிசிஐ விருதுகள் வழங்கும் விழாவில் இந்திய வீரர்களுக்கு பரிசாக கொடுக்கப்பட்டது.
அதைக் கேப்டன் ரோகித் சர்மா, தொடர்நாயகன் ஜஸ்ப்ரித் பும்ரா, சூரியகுமார் யாதவ், அக்சர் பட்டேல், ரிஷப் பண்ட் உள்ளிட்ட பெரும்பாலான இந்திய வீரர்கள் பெற்றுக் கொண்டார்கள். அது பற்றிய விவரத்தை பிசிசிஐ தங்களுடைய சமூக வலைதளத்திற்கு “டி20 உலகக் கோப்பையில் குறைபாடற்ற பிரச்சாரத்தை கௌரவிக்கும் வகையில் இந்திய அணிக்கு அவர்களின் சாம்பியன்ஸ் மோதிரத்தை வழங்குவது என்றென்றும் நினைவாக இருக்கலாம்”
இதையும் படிங்க: அவங்க வாயை மூட இதான் ஒரே வழி.. இதுக்காகவே ரோஹித் சதத்தை அடிக்க வேண்டிக்கிறேன்.. அஸ்வின் பேட்டி
“இந்த வெற்றி நிச்சயமாக ஒரு பில்லியன் மக்கள் இதயங்களில் அழியாது. அந்த நினைவுகள் சத்தமாக எங்களுடன் என்றென்றும் வாழும்” என்று பதிவிட்டுள்ளது. இந்த மோதிரத்திற்கு ட்ரீம் லெவன் ஸ்பான்சர்ஷிப் செய்துள்ளது. இதே போல அடுத்த நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியையும் இந்தியா வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.