இந்திய கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தற்சமயத்தில் சுமாரான ஃபார்மில் இருக்கிறார்.
குறிப்பாக சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் அவர் சுமாராக விளையாடியது இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதனால் ஹிட்மேன் என்ற பெயரை வைத்திருக்கும் நீங்கள் இத்தொடரில் எப்படி அசத்தப் போகிறீர்கள்? என்று முதல் போட்டிக்கு முன் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு இதெல்லாம் ஒரு கேள்வியா? என்று செய்தியாளர்களிடம் கேப்டன் ரோஹித் சர்மா கோபத்தை வெளிப்படுத்தினார்.
இதெல்லாம் கேள்வியா:
ஏனெனில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் வெவ்வேறு ஃபார்மட் என்று தெரிவித்த அவர் கடந்த காலத்தைப் பார்க்காமல் நிகழ்காலத்தில் விளையாட உள்ளதாக கூறினார். அத்துடன் விரைவில் சாம்பியன்ஸ் டிராபி தொடங்கவிருக்கும் சூழ்நிலையில் தம்முடைய ஓய்வு பற்றி கேள்வி கேட்பது சரியா? என்றும் ரோகித் சர்மா செய்தியாளர்களை சாடினார். அந்த சூழ்நிலையில் முதல் போட்டியில் களமிறங்கிய அவர் வெறும் 2 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார்.
இந்நிலையில் இது போன்ற விமர்சகர்களின் வாயை எப்போதும் மூட முடியாது என்று ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். அப்படி மூட வேண்டுமெனில் இந்தத் தொடரிலேயே ரோகித் சர்மா சதமடித்து காண்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இது எளிதல்ல. ரோகித் சர்மாவின் பார்வையில் இது அவருக்கு கோபத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும்”
அஸ்வின் ஆதரவு:
“ஏனெனில் அவர் இந்தத் தொடரில் கவனத்தைச் செலுத்த விரும்புகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் நன்றாக விளையாடியுள்ள நான் அதில் தொடர விரும்புகிறேன் என்பதே ரோகித் சர்மாவின் கருத்தாகும். எனக்கு மிகவும் பிடித்த ஒருநாள் தொடரில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் விளையாடப் போகிறேன் என்று அவர் சொன்னார். ஆனால் மக்கள் தொடர்ந்து கேள்விகளைக் கேட்பார்கள்”
இதையும் படிங்க: 5 ஆவது இடத்தில் களமிறங்க வேண்டிய கே.எல் ராகுல் 6 ஆவது இடத்தில் இறங்க காரணம் கம்பீர் தான் – என்ன ஆனது?
“போட்டியைப் பார்ப்பவர்கள் கண்டிப்பாக கேள்வி எழுப்புவார்கள். அதை உங்களால் நிறுத்த முடியாது. ரோஹித் அசத்தும் போது மட்டுமே அவர்கள் கேள்விகளை நிறுத்துவார்கள். ஆனால் ஒரு வீரராக ரோஹித் எந்த நிலையில் இருக்கிறார் என்பதை என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது. அது எளிதல்ல. எனவே அவர் சிறப்பாக விளையாடி இந்தத் தொடரில் சதத்தை அடிக்க நான் வேண்டிக் கொள்கிறேன்” என்று கூறினார்.



