
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அந்தத் தொடரில் தோல்வியே சந்திக்காமல் அசத்திய இந்தியா தொடர்ந்து 8 வெற்றிகளைப் பெற்றது. குறிப்பாக இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்த இந்தியா 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்றது.
அந்த சரித்திர வெற்றியால் ரோஹித் சர்மா உள்ளிட்ட அனைத்து இந்திய வீரர்களும் ஆனந்தக் கண்ணீர் விட்டனர். அந்த வெற்றி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் மக்களையும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. மேலும் நாடு திரும்பிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு மும்பையில் ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர். அதே போல பிசிசிஐ 125 கோடி பரிசு கொடுத்து கௌரவித்தது.
சீனியர்களுக்கு ஓய்வு:
அதைத் தொடர்ந்து ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி விளையாடி வருகிறது. இதைத்தொடர்ந்து இலங்கைக்கு எதிராக அதன் மண்ணில் இந்தியா 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது.
இந்நிலையில் ஜூலை 27 – ஆகஸ்ட் 7 வரை நடைபெறும் அந்தத் தொடரின் 6 போட்டிகளிலும் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதில் ஏற்கனவே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை வென்று ஓய்வு பெற்றனர். இருப்பினும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.
ஆனால் இலங்கை கொஞ்சம் பலவீனமாகவும் தடுமாற்றமாகவும் செயல்பட்டு வருவதால் பிசிசிஐ அந்த 3 முக்கிய வீரர்களுக்கும் ஓய்வு கொடுக்க விரும்புகிறது. அத்துடன் செப்டம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தான் அந்த 3 நம்பிக்கை நட்சத்திரங்களும் அடுத்ததாக இந்தியாவுக்கு விளையாடுவார்கள் என்பதும் தெரிய வருகிறது.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமிலும் கிங்.. கொரிய பிரபலத்தை முந்திய இந்தியாவின் விராட் கோலி.. ஆசிய அளவில் சாதனை
இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி பேசியது பின்வருமாறு. “சீனியர் வீரர்கள் இன்னும் கொஞ்சம் ஓய்வு எடுத்து சொந்த மண்ணில் நடைபெறும் சீசனுக்காக முழுமையாக தயாராகலாம். எனவே ரோஹித், விராட் மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்படுகிறது. அவர்கள் செப்டம்பர் மாதம் நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் இந்திய அணியில் இணைவார்கள்” என்று கூறினார்.