வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. ஜூன் மாதம் நடைபெற்ற அந்த தொடரில் ஆரம்பம் முதலே அசத்திய இந்தியா 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்றது. மேலும் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வந்த தொடர்ச்சியான தோல்விகளையும் இந்தியா உடைத்தது.
எனவே அந்த சரித்திர வெற்றியால் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட அனைத்து இந்திய வீரர்களும் மைதானத்திலேயே கண்கலங்கினர். அதே போல இந்திய ரசிகர்களும் மக்களும் அந்த வெற்றியை கொண்டாடி தீர்த்தனர். இந்த நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற தருணங்களை இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர வீரர் விராட் கோலி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.
இன்ஸ்டாகிராமின் கிங்:
ஏற்கனவே கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயோனல் மெஸ்ஸி ஆகியோருக்கு பின் இன்ஸ்டாகிராமில் அதிக ரசிகர்களை கொண்ட 3வது விளையாட்டு வீரர் என்ற சாதனை விராட் கோலி படைத்துள்ளார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜூன் 29ஆம் தேதி இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வென்ற புகைப்படங்களை பற்றிய பதிவை விராட் கோலி பதிவிட்டார்.
சாதாரணமாகவே விராட் கோலி போடும் பதிவுகளை ரசிகர்கள் லைக் செய்வது வழக்கமாகும். அப்படிப்பட்ட ரசிகர்கள் விராட் கோலி காத்திருந்து வென்ற உலகக்கோப்பை பதிவை போட்டதும் அதை தாறுமாறாக லைக் செய்ய துவங்கினர். அதனால் ஓரிரு மணி நேரங்களில் அந்த பதிவு 17 மில்லியன் லைக்குகளை பெற்றது. அதனால் இந்தியாவில் அதிகம் விரும்பப்பட்ட இன்ஸ்டாகிராம் பதிவு என்ற பெருமையை விராட் கோலி படைத்தார்.
இதற்கு முன் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் கைரா அத்வானி ஆகிய பாலிவுட் நட்சத்திரங்களின் திருமண புகைப்படம் 16 மில்லியன் லைக்குகளை பெற்றதே முந்தைய சாதனையாகும். இந்நிலையில் அந்தப் பதிவை ஜூலை எட்டாம் தேதி 21 மில்லியன் ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். இதன் வாயிலாக ஆசிய கண்டத்தில் அதிக லைக் பெற்ற இன்ஸ்டாகிராம் பதிவு என்ற சாதனையை விராட் கோலியின் 2024 டி20 உலகக் கோப்பை பதிவு படைத்துள்ளது.
இதையும் படிங்க: டிஎன்பிஎல் 2024 : 7 விக்கெட்ஸ்.. அஸ்வின் எடுத்த அதீத தைரியமான முடிவால்.. திண்டுக்கல்லை எளிதாக வீழ்த்திய சேலம்
இதற்கு முன் கொரியா நாட்டைச் சேர்ந்த “பாய் பேண்ட்” எனும் இசைக் குழுவில் இடம் வகிக்கும் “கிம் தாஹ்யுங்” என்ற பிரபலத்தின் இன்ஸ்டாகிராம் பதிவு 20 மில்லியன் லைக்குகளை பெற்றதே முந்தைய சாதனையாகும். அந்த வகையில் ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்று இந்தியாவை வெற்றி பெற வைத்து டி20 கிரிக்கெட்டில் விடைபெற்ற விராட் கோலி தற்போது இன்ஸ்டாகிராமிலும் தன்னை கிங் என்பதை நிரூபித்துள்ளார் என்றால் மிகையாகாது.



