
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலத்தை நடத்த பிசிசிஐ தயாராகி வருகிறது. அதற்காக சமீபத்தில் ஐபிஎல் அணி நிர்வாகங்கள் பங்கேற்ற கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதில் தக்க வைக்கும் வீரர்களை 4க்கு பதிலாக 7 – 8 வீரர்களாக உயர்த்துமாறு பெரும்பாலான அணிகள் கேட்டுக் கொண்டன. அதே போல இம்பேக்ட் வீரர் விதிமுறை நீக்கப்பட வேண்டும் என்று சில அணிகள் கேட்டுக் கொண்டன.
ஆனால் அந்த அணிகளுக்கு மத்தியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டும் அன்கேப்ட் பிளேயர் விதிமுறையை மீண்டும் கொண்டு வருமாறு பிசிசிஐ வித்தியாசமான கோரிக்கை வைத்தது. குறிப்பாக சிஎஸ்கே அணியின் முன்னாள் ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி கடந்த 2019 உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்று தற்போது முழுமையாக 5 வருடங்கள் முடிந்து விட்டது.
சாதகமாக பிசிசிஐ:
மறுபுறம் ஒரு வீரர் ஓய்வு பெற்று 5 வருடங்கள் முடிந்து விட்டால் அவரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரராக கருதி அடிப்படை விலையான 20 லட்சத்துக்கு தக்க வைக்க முடியும் என்ற விதிமுறை 2021 வரை இருந்தது. ஆனால் அதன் பின் அந்த விதிமுறை அகற்றப்பட்டது. இருப்பினும் இம்முறை தோனியை அந்த விதிமுறையை பயன்படுத்தி தக்க வைக்க அனுமதியளிக்குமாறு பிசிசிஐயிடம் சிஎஸ்கே நிர்வாகம் கோரிக்கை வைத்தது.
அதற்கு ஹைதராபாத் போன்ற சில அணி நிர்வாகங்கள் எதிர்ப்பும் தெரிவித்தன. இந்நிலையில் தோனிக்காக அந்த விதிமுறையை பிசிசிஐ மீண்டும் கொண்டு வருவதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பாக தோனி விளையாடினால் அதை கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்ப்பார்கள். அது ஐபிஎல் தொடருக்கும் பிசிசிஐக்கும் லாபகரமான விஷயமாகும்.
அதனால் அன்கேப்ட் பிளேயர் விதிமுறை மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது பற்றி நியூஸ்18 இணையத்தில் பிசிசிஐ நிர்வாகி தெரிவித்தது பின்வருமாறு. “அந்த விதிமுறை மீண்டும் வருவதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது. கடந்த மாதம் நடத்தப்பட்ட நீண்ட விவாதத்தில் அந்த விதிமுறை பற்றி பேசினோம். வீரர்கள் பற்றிய விதிமுறைகள் அறிவிக்கப்படும் போது அது மீண்டும் கொண்டு வர முடியும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: அனைத்து விதமான கிரிக்கெட்டில் விளையாட தடை பெற்ற இலங்கை வீரர்.. காரணம் என்ன? வெளியான தகவல்
முன்னதாக 2025 ஏலத்தின் விதிமுறைகள் வெளியான பின் சிஎஸ்கே அணியின் நலனை பொறுத்து தாம் விளையாடுவது பற்றி தீர்மானிக்க உள்ளதாக தோனி கூறியிருந்தார். தற்போது பிசிசிஐயும் சிஎஸ்கே நிர்வாகம் கேட்ட பழைய விதிமுறையை கொண்டு வரவுள்ளது. அதனால் தோனி 2025 ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.