இலங்கை கிரிக்கெட் வீரர் பிரவீன் ஜெயவிக்ரமா சூதாட்டத்தில் ஈடுபட்டதை சமீபத்தில் ஐசிசி கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அது பற்றி விளக்கம் கொடுக்க அவருக்கு 14 நாட்கள் ஐசிசி அவகாசமும் அளித்திருந்தது. அது இலங்கை கிரிக்கெட்டிலும் ரசிகர்களிடம் அதிருப்தி அலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இலங்கை அணியின் மற்றொரு வீரர் நிரோஷன் டிக்வெல்லாவுக்கு அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
குறிப்பாக சமீபத்தில் இலங்கையில் 2024 லங்கா பிரீமியர் லீக் டி20 தொடர் நடைபெற்றது. அந்தத் தொடரில் அவர் ஊக்க மருந்து உட்கொண்டதாக தெரிய வந்துள்ளது. அதனால் அவர் தற்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் முடிவு வரும் வரை அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் பிரபல நியூஸ்வயர் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
விளையாட தடை:
இது பற்றி இலங்கை ஊக்க மருந்து தடுப்பு முகமை அவரிடம் சோதனை நடத்தியுள்ளது. அந்த சோதனையில் அவர் தோல்வியை சந்தித்துள்ளார். அதன் காரணமாக இந்த விவகாரத்தின் இறுதி முடிவு வெளிவரும் வரை டிக்வெல்லா உள்ளூர் போட்டிகளில் கூட விளையாடுவதற்கு தற்காலிகமாக தடை பெற்றுள்ளார். அதை இலங்கை வாரியமும் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
சொல்லப்போனால் அவர் இப்படி தடை பெறுவது இது முதல் முறையல்ல. ஆம் கடந்த 2021ஆம் ஆண்டு அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தது. அப்போது டிக்வெல்லா லாக் டவுன் விதிமுறைகளை மீறி செயல்பட்டார். அதன் காரணமாக அவருக்கு ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த வரிசையில் தற்போது அவர் ஊக்க மருந்து பிரச்சனையில் சிக்கியுள்ளார்.
இந்த தகவல் இலங்கை ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்துவதாக அமைகிறது. முன்னதாக 2024 லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் சுமாராக விளையாடிய டிக்வெல்லா 8 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து தம்முடைய அணியின் தோல்விக்கு காரணமானார். அதன் காரணமாகவே சமீபத்திய இந்திய டி20 தொடரில் அவர் இலங்கைக்காக விளையாட தேர்வு செய்யப்படவில்லை.
இதையும் படிங்க: நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.. ஸ்ரேயாஸ், ஜடேஜாவுக்கு என்னாச்சுன்னு பாத்தீங்களா.. அதான் எல்லாரும் வந்துடாங்க.. ஜெய் ஷா
அதே போல அடுத்ததாக நடைபெறும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் அவர் இலங்கை அணிக்காக தேர்ந்தெடுக்கப்படவில்லை. மேலும் கடைசியாக இலங்கை வெள்ளைப்பந்து அணிக்காக 2022ஆம் ஆண்டு விளையாடியிருந்த டிக்வெல்லா கடந்த வருடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியிருந்தார். இலங்கை அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள அவர் மொத்தம் 54 டெஸ்ட், 55 ஒருநாள், 28 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.



