ஏணி வெச்சாலும் எட்டாது.. பணத்திலும் கோப்பையிலும் இந்தியா – ஆஸி யார் பெஸ்ட்.. வெளியான புள்ளிவிவரம்

IND vs AUS 33
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா இன்றியமையாத நாடாக உருவெடுத்துள்ளது. சொல்லப்போனால் ஒரு காலத்தில் தங்களுக்காக விளையாடி வீரர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாமல் தடுமாறிய பிசிசிஐ 2008இல் ஐபிஎல் எனும் டி20 கிரிக்கெட் தொடரை துவக்கியதால் மடமடவென விஸ்வரூப வளர்ச்சி கண்டு பொருளாதாரத்தில் சர்வதேச போட்டிகளை நடத்தும் ஐசிசியையே மிஞ்சி உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக உருவெடுத்துள்ளது.

அதனால் இப்போதெல்லாம் சர்வதேச கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அங்கமாக பிசிசிஐ உருவெடுத்துள்ளது. குறிப்பாக வரும் காலங்களில் 84, 94 போட்டிகளாக ஐபிஎல் தொடரை விரிவுபடுத்துவதற்காக பிசிசிஐ எடுத்துள்ள முடிவுக்கு ஐசிசி எவ்விதமான எதிர்ப்பையும் தெரிவிக்க முடியவில்லை.

- Advertisement -

பணமும் கோப்பையும்:
ஏனெனில் தங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் முக்கால்வாசி இந்தியா மற்றும் ஐபிஎல் தொடரின் வாயிலாக கிடைப்பதால் பிசிசிஐ எடுக்கும் சில முடிவுகளுக்கு ஐசிசி அமைதியாக இருக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் பிசிசிஐ வாரியத்தின் தற்போதைய மொத்த மதிப்பு 2.25 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வளர்ந்துள்ளதாக பிரபல க்ரிக்பஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது இந்திய ரூபாயில் சுமார் 18,700 கோடிகளுடன் பிசிசிஐ யாராலும் நெருங்க முடியாத உலகின் மிகப்பெரிய பணக்கார வாரியமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் ஆஸ்திரேலிய வாரியம் வெறும் 79 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய ரூபாயில் சுமார் வெறும் 600 கோடிகள் மட்டுமே மதிப்புடையதாக இருக்கிறது. 3வது இடத்தில் இங்கிலாந்து வாரியம் 59 மில்லியன், 4வது இடத்தில் பாகிஸ்தான் வாரியம் 55 மில்லியன், 5வது இடத்தில் வங்கதேசம் 50 மில்லியன், தென்னாப்பிரிக்கா 47 மில்லியன் டாலர்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

- Advertisement -

அந்த வகையில் 2வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவை விட 28 மடங்கு இந்தியா கிரிக்கெட்டில் பணக்கார வாரியமாக இருக்கிறது. ஆனால் செயல்பாடுகளில் பார்த்தால் ஆடவர் கிரிக்கெட்டில் 10 கோப்பைகளுடன் ஆஸ்திரேலியா உலகிலேயே அதிக ஐசிசி கோப்பைகளை வென்ற நாடாக உலக சாதனை படைத்துள்ளது. குறிப்பாக இந்த வருடம் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் உலகக்கோப்பை ஃபைனல்களில் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா 2 சாம்பியன் பட்டங்களை வென்றது.

இதையும் படிங்க: டிராவிட் சார் ஆதரவு தாராரு.. தெ.ஆ மண்ணில் இதை எதிர்பாக்கல.. ஆட்டத்தை மாத்தணும்.. ரிங்கு சிங் பேட்டி

மறுபுறம் 1983 உலகக்கோப்பை, 2002 சாம்பியன்ஸ் டிராபி, 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என 5 ஐசிசி கோப்பைகளை மட்டுமே இந்தியா வென்றுள்ளது. அந்த வகையில் பணத்தில் ஏணி வச்சாலும் எட்டாத அளவுக்கு ஆஸ்திரேலியாவை விட இந்தியா மிகப்பெரிய உயரத்தில் இருக்கிறது. ஆனால் களத்தில் வெளிப்படுத்திய செயல்பாடுகளால் கிடைத்த வெற்றிகளின் அடிப்படையில் இந்தியா ஏணி வச்சாலும் எட்டாத உயரத்தில் ஆஸ்திரேலியா இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement