டிராவிட் சார் ஆதரவு தாராரு.. தெ.ஆ மண்ணில் இதை எதிர்பாக்கல.. ஆட்டத்தை மாத்தணும்.. ரிங்கு சிங் பேட்டி

Rinku Singh 6
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. 2023 உலகக் கோப்பை ஃபைனலில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரை 4 – 1 என்ற கணக்கில் வென்ற சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி இந்த தொடரிலும் விளையாட உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக இந்த தொடரில் இளம் வீரர் ரிங்கு சிங் ஆட்டத்தை பார்ப்பதற்காகவே இந்தியாவில் தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். ஏனெனில் கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிராக கடைசி ஓவரில் அடுத்தடுத்து 5 சிக்சர்கள் அடித்து அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் இந்தியாவுக்காக அறிமுகமான அயர்லாந்து டி20 தொடரில் சிறப்பாக விளையாடி வெற்றியில் பங்காற்றினார்.

- Advertisement -

புதிய பயிற்சி:
அதை தொடர்ந்து சீனாவில் நடைபெற்ற 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நேபாளுக்கு எதிரான காலிறுதி போட்டியிலும் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய அவர் ஆஸ்திரேலிய டி20 தொடரின் சில போட்டிகளில் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தார். அந்த வகையில் தோனி வரிசையில் அடுத்த ஃபினிஷராக வருவார் என்ற ரசிகர்களின் நம்பிக்கையை பெற்றுள்ள ரிங்கு சிங் இத்தொடரில் ஜாம்பவான் ராகுல் டிராவிட் தமக்கு பெரிய ஆதரவை கொடுப்பதாக கூறியுள்ளார்.

மேலும் தென்னாப்பிரிக்க மண்ணில் எதிர்பார்த்ததை விட எக்ஸ்ட்ரா பவுன்ஸ் மற்றும் வேகம் இருப்பதால் அதற்கேற்றார் போல் பயிற்சிகளை செய்ய உள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பிசிசிஐ இணையத்தில் பேசியது பின்வருமாறு. “இங்கே நிலவும் நல்ல வானிலையில் முதல் முறையாக நான் மகிழ்ச்சியுடன் பயிற்சி செய்தேன். குறிப்பாக ராகுல் டிராவிட் சாருடன் இணைந்து வேலை செய்வதற்கான வாய்ப்பை பெற்றது நல்ல உணர்வை கொடுக்கிறது”

- Advertisement -

“இப்போது நான் விளையாடும் வழியில் தொடர்ந்து நம்பிக்கை வைத்து விளையாடுமாறு அவர் என்னிடம் சொன்னார். குறிப்பாக 5 அல்லது 6 ஆகிய இடங்களில் விளையாடுவது மிகவும் கடினம் என்றாலும் தொடர்ந்து உன் மீது நம்பிக்கை வைத்து விளையாடு என்று அவர் என்னிடம் சொன்னார். முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் இன்று நான் பேட்டிங் செய்த போது இந்திய மைதானங்களை விட எக்ஸ்ட்ரா பவுன்ஸ் இருப்பதை பார்த்தேன்”

இதையும் படிங்க: உங்க தலையில் மண்ணை வாரி போட்டுக்க தயாரா இருங்க.. இந்திய அணியை எச்சரித்த அலிசா ஹீலி

“வேகமும் சற்று அதிகமாக இருக்கிறது. எனவே வேகப்பந்து வீச்சுக்கு எதிராக நான் நல்ல பயிற்சிகளை எடுக்க வேண்டும்” என்று கூறினார். இதை தொடர்ந்து இத்தொடரின் முதல் போட்டி டிசம்பர் 10ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு டர்பன் நகரில் நடைபெற உள்ளது. அதில் விராட் கோலி போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமலேயே வெற்றி பெறுவதற்கு இந்தியா தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement