ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் கோலாகலமாக அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் துவங்கி நடைபெற உள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை நிர்ணயிக்க உள்ள இந்தத் தொடரில் கோப்பையை வெல்வதற்காக உலகின் டாப் அணிகள் மோதுகின்றன. அதில் கோப்பையை வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்புக்கு நிகராக இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியில் வெல்லப்போவது யார் என்ற வழக்கமான எதிர்ப்பார்ப்பு காணப்படுகிறது.
ஏனெனில் கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெற்றிக்காக முழுமூச்சுடன் ஆக்ரோசத்துடன் மோதிக் கொள்ளும் என்பதால் அந்தப் போட்டியில் அனல் பறக்கும். அத்துடன் எல்லை பிரச்சினை காரணமாக ஆசிய மற்றும் ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதுவதால் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஒரு வருடம் காத்திருக்க வேண்டியுள்ளது.
வான்கடே மாதிரி:
அந்த வரிசையில் இம்முறை வரலாற்றிலேயே முதல் முறையாக அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் வரும் ஜூன் 9ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக நாஸாவ் நகரில் பிரத்தியேகமாக புதிய கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 6 மாதமாக நடைபெற்று வரும் அந்தப் பணி தற்போது இறுதிக் கட்டத்தை தொட்டுள்ளது.
அதை பார்வையிட்ட ஐசிசி நிகழ்வுகளுக்கான தலைமை அதிகாரி கிறிஸ் டெட்லி நாஸாவ் மைதானம் இந்தியாவிலுள்ள வான்கடே போல இருக்கும் என்று முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “புதிய மைதானம் கட்டப்படும் போதெல்லாம் அதன் பவுண்டரி அளவுகள் பற்றி நிறைய கேள்விகள் வரும். ஆனால் நாஸாவ் மைதானம் மிகவும் சிறிதானதல்ல”
“அது கிழக்கு மேற்கு திசையில் 75 யார்ட் மற்றும் நடுவிலிருந்து வடக்கு தெற்கு திசையில் 67 யார்ட் தூரத்தை கொண்டிருக்கிறது. அது வான்கடே மைதானத்தை போன்ற அளவைக் கொண்டுள்ளது. தண்ணீர் வெளியேற்றுவதற்கான வசதி உலகத்தரம் வாய்ந்ததாக இருக்கிறது. அங்குள்ள பிட்ச்களில் வேகம் மற்றும் பவுன்ஸ் இருக்கும் என்பதால் பந்து நன்றாக பேட்டுக்கு வரும்”
இதையும் படிங்க: நீங்க புதியவர் கிடையாது.. இதை செய்ங்க.. மொத்த உலகமும் நோட் பண்ணும்.. சாம்சனுக்கு கம்பீர் அறிவுரை
“அதையே அனைத்து வீரர்களும் விரும்புவார்கள். தொடர் முழுவதும் வீரர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட நல்ல பிட்ச் இருக்க வேண்டும் என்பதால் அதை அதற்கு தகுந்தார் போல் தயாரித்து வருகிறோம்” என்று கூறினார். அந்த வகையில் வான்கடே போல் இருக்கும் என்று ஐசிசி அதிகாரியே சொல்வதால் நாஸாவ் மைதானம் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் அமெரிக்காவில் இந்திய ரசிகர்களுக்கு பஞ்சமிருக்காது. எனவே இந்த மைதானத்தில் சொந்த மண்ணில் விளையாடுவதைப் போன்ற உணர்வு இந்திய அணிக்கு கிடைக்கும் என்றால் மிகையாகாது.