ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் பேட்டிங், பவுலிங் ஆகிய அனைத்து துறைகளிலும் சொதப்பிய இந்தியா கொஞ்சம் கூட போராடாமல் 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருந்தும் 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் தோல்வியை சந்தித்த இந்தியாவின் தோல்விக்கு ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்வு செய்யாதது முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் அவரை தேர்வு செய்யாமல் சுமாராக கேப்டன்ஷிப் செய்த கேப்டன் ரோகித் சர்மாவை விளாசும் ரசிகர்கள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டையும் பதவி விலக வேண்டும் என்று விமர்சிக்கின்றனர்.
இது மட்டுமல்லாமல் சமீப காலங்களாகவே இந்திய அணியில் சஞ்சு சாம்சன் போன்ற தரமான வீரர்கள் இருந்தும் அவர்களை ஏதோ ஒரு காரணத்துக்காக தேர்வு செய்யாமல் சுமாராக செயல்படும் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது தொடர்கதையாகி வருகிறது. அதே போல தேர்வு செய்யும் வீரர்களிலும் அஸ்வின் போன்றவர்களை கழற்றி விட்டு சரியான 11 பேர் அணியை தேர்ந்தெடுக்காதது தோல்வியை கொடுத்து வருகிறது. இவை அனைத்திற்கும் தேர்வு குழுவினர் முக்கிய காரணமாக அமைகிறார்கள் என்றால் மிகையாகாது.
பிசிசிஐ கஞ்சத்தனம்:
பொதுவாக சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்தியாவுக்கு அதிக போட்டிகளில் விளையாடிய அனுபவம் மிகுந்த ஒருவர் தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டால் மட்டுமே சரியான புரிதலுடன் தரமான வீரர்களை தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் இந்தியாவில் மட்டுமே ரசிகர்களுக்கு யார் என்று பெயர் தெரியாத ஓரிரு போட்டிகளில் மட்டும் விளையாடிய எம்எஸ்கே பிரசாத், சேட்டன் சர்மா போன்றவர்கள் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தேர்வுக்குழுவினருக்கு மிகவும் குறைவான சம்பளம் கொடுப்பதன் காரணமாகவே நட்சத்திர ஜாம்பவான் வீரர்கள் அந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பதில்லை என பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி கூறியுள்ளார். அதன் காரணமாகவே 2017இல் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு வீரேந்திர சேவாக் விண்ணப்பிக்கவில்லை என்று கூறும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.
“உச்சநீதிமன்றம் அமைத்த கிரிக்கெட் வழிகாட்டுதல் கமிட்டி இருந்த போது சேவாக் பயிற்சியாளராக செயல்பட விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். பின்னர் தான் அந்தப் பதவி அனில் கும்ப்ளேவுக்கு சென்றது. இருப்பினும் அந்த பதவிக்கு விண்ணப்பிக்க சேவாக் ஆர்வத்துடன் இருந்தாலும் தன்னுடைய அந்தஸ்துக்கு அப்பதவிக்கான சம்பளம் குறைவாக இருப்பதாக கருதினார். அதே சமயம் அவரைப் போன்ற வீரர்களுக்கு பிசிசிஐ 4 – 5 கொடுக்க முடியாது என்று அர்த்தமில்லை. இருப்பினும் தேர்வுக்குழுவினர் போன்ற பதவிக்கு வந்தால் ஐபிஎல் பயிற்சியாளர் போன்ற பதவிகளில் செயல்பட முடியாது என்ற உச்ச நீதிமன்ற விதிமுறைகளை கருத்தில் கொண்டு அவர்கள் விண்ணப்பிப்பதில்லை”
“ஆனால் திலிப் வெங்சர்க்கார் தேர்வுக்குழு தலைவராக இருந்த போது பத்ரிநாத் மற்றும் விராட் கோலி ஆகியோரில் ஒருவரை தேர்ந்தெடுக்கும் நிலையை சந்தித்தார். அப்போது ஆஸ்திரேலியாவில் நடந்த சில இந்தியா ஏ போட்டிகளை பார்த்த அவருக்கு யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தெரிந்தது. அதில் விராட் கோலியை அவர் தேர்ந்தெடுத்த முடிவு சரித்திரமாக மாறியது” என்று கூறினார். அதாவது 2006 – 2008 வரை திலிப் வெங்சர்கார் மற்றும் 2008 – 2011 வரை கிறிஸ் ஸ்ரீகாந்த் ஆகிய நட்சத்திரம் முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் தேர்வுக்குழு தலைவராக இருந்தனர்.
அந்த சமயத்தில் தலா 1 கோடி ரூபாய்களை வருடத்திற்கு சம்பளமாக பெற்ற அவர்களது காலகட்டத்தில் இந்தியா 2007 டி20 உலக கோப்பை, 2010இல் டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன், 2011 உலகக்கோப்பை போன்ற வெற்றிகளை பெற்று சாதனைகளை படைத்தது. ஆனால் அதன் பின் குறைந்த சம்பளத்திற்கு பிரபலமில்லாத முன்னாள் வீரர்களை தேர்வுக்குழு தலைவராக பிசிசிஐ தேர்ந்தெடுத்து வருகிறது.
இதையும் படிங்க:தோனிய விடுங்க, இவர் தான் டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய மிஸ்டர் கூல் பிளேயர் – வெளிநாட்டு வீரரை புகழ்ந்த சேவாக்
அது போக விராட் கோலி – ரவி சாஸ்திரி, ரோஹித் சர்மா – ராகுல் டிராவிட் போன்றவர்களுக்கு எதிராக தாங்கள் விரும்பும் வீரர்களை தேர்ந்தெடுக்க முடியாது என்ற காரணத்தாலும் இப்போதெல்லாம் நட்சத்திரம் முன்னாள் வீரர்கள் அந்த பதவிக்கு விண்ணப்பிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.