தோனிய விடுங்க, இவர் தான் டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய மிஸ்டர் கூல் பிளேயர் – வெளிநாட்டு வீரரை புகழ்ந்த சேவாக்

Sehwag
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2023 ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 1 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளது. பர்மிங்கம் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அதிரடியாக செயல்பட்டு 393/8 ரன்கள் குவித்த போது ஜோ ரூட் களத்தில் இருந்ததால் 40 – 50 எக்ஸ்ட்ராவாக எடுக்கும் வாய்ப்பை கையில் வைத்திருந்தும் தைரியமாக டிக்ளேர் செய்து கோட்டை விட்டது தோல்வியை கொடுத்தது.

அதே போல் 2வது இன்னிங்ஸில் வெறும் 7 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றதால் பொறுப்புடன் செயல்பட வேண்டிய அந்த அணி மீண்டும் அதிரடியாகவே விளையாடுவோம் என்று அடம் பிடித்து வெறும் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 300 ரன்களை கூட இலக்காக நிர்ணிக்காதது மற்றொரு காரணமாக அமைந்தது. அப்படி பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் தார் ரோடு போன்ற பிட்ச்களில் அடித்து நொறுக்கி பெற்று அதீத போலியான தன்னம்பிக்கையுடன் இங்கிலாந்து செய்த தவறுகளை பயன்படுத்திய ஆஸ்திரேலியா அசத்தலான வெற்றி பெற்றது.

- Advertisement -

மிஸ்டர் கூல்:
குறிப்பாக இந்தத் தொடரில் நிச்சயமாக உங்களையும் அடித்து நொறுக்குவோம் என்று இங்கிலாந்து ஆரம்பத்திலேயே எச்சரித்தது. ஆனால் உங்களது ஆட்டத்தை பாகிஸ்தான் போன்ற இதர அணிகளிடம் வைத்துக் கொள்ளுங்கள் தரமான பவுலிங்கை கொண்ட எங்களிடம் செல்லுபடியாகாது என பதிலடி கொடுத்த ஆஸ்திரேலியா அதை செயலிலும் காட்டியுள்ளது. அந்த வெற்றிக்கு 141, 65 ரன்கள் குவித்த கவாஜா முக்கிய பங்காற்றினாலும் கடைசி நேரத்தில் 54 ரன்கள் தேவைப்பட்ட போது அழுத்தமான சமயத்தில் தில்லாக பேட்டிங் செய்த கேப்டன் பட் கமின்ஸ் 44* ரன்கள் குவித்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார் என்றே சொல்லலாம்.

குறிப்பாக 16* ரன்கள் எடுத்த நேதன் லயன் உதவியுடன் இங்கிலாந்துக்கு கடைசி நேரத்தில் வளைந்து கொடுக்காமல் கேப்டனுக்கு மிகச்சிறந்த அடையாளமாக முன்னின்று வெற்றி பெற வைத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட போட்டியில் 9வது இடத்தில் களமிறங்கி அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற உலக சாதனையும் படைத்தார். அத்துடன் முதல் இன்னிங்சிலும் முக்கியமான 38 ரன்கள் எடுத்த அவர் பந்து வீச்சில் 4 விக்கெட்டுகள் எடுத்து ஆல் ரவுண்டராக இந்த வெற்றியில் பங்காற்றினார்.

- Advertisement -

மேலும் நாட்டுக்காக ஐபிஎல் 2023 தொடரை புறக்கணித்து முழுமையாக தயாராகி சமீபத்திய 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்து கேப்டனாக ஆஸ்திரேலியாவுக்கு கோப்பையை வென்ற அவர் தற்போது இப்போட்டியிலும் வெற்றி பெற வைத்துள்ளார். அதனால் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சமீப காலங்களில் இந்தியாவுக்காக அழுத்தமான போட்டிகளில் சொதப்பிய கேப்டன்களை விட அசத்தலாக செயல்பட்ட பட் கமின்ஸ் தான் உண்மையான கேப்டன் என இந்திய ரசிகர்களே சமூக வலைதளங்களில் பாராட்டினார்.

இந்நிலையில் அப்போட்டியில் 2 இன்னிங்ஸிலும் முக்கிய ரன்களை எடுத்த பட் கமின்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய மிஸ்டர் கூல் வீரர் என ஜாம்பவான் வீரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார். பொதுவாக இந்தியாவின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியை மிஸ்டர் கூல் என அனைவரும் அழைக்கும் நிலையில் பட் கமின்ஸை புகழ்ந்து பாராட்டிய சேவாக் இது பற்றி ட்விட்டரில் கூறியுள்ளது பின்வருமாறு. “என்ன ஒரு டெஸ்ட் மேட்ச். சமீப காலங்களில் நான் பார்த்ததில் இது சிறந்தது. எப்போதுமே டெஸ்ட் கிரிக்கெட் தான் மகத்தானது”

இதையும் படிங்க:கூலான தல தோனி கடைசி பந்தை கண்ணை மூடி பார்க்காமல் கடைசியில் அழுதது ஏன்? பின்னணியை பகிர்ந்த காசி விஸ்வநாதன்

“முதல் நாளில் வானிலை அப்படி இருந்தும் இங்கிலாந்து தைரியமாக டிக்ளர் செய்தது. ஆனால் கவாஜா 2 இன்னிங்சிலும் அசத்தினார். அதை விட அழுத்தமான நேரத்தில் என்ன ஒரு அற்புதமான இன்னிங்ஸ் விளையாடிய பட் கமின்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய மிஸ்டர் கூல் ஆவார். அவருடன் லயன் அமைத்த பார்ட்னர்ஷிப் நீண்ட காலம் நினைவில் இருக்கும்” என்று கூறினார்.

Advertisement