ஐபிஎல் 2022 : மைதானங்களுக்கு பரிசு தொகை அறிவித்த பிசிசிஐ, ஆனாலும் ரசிகர்கள் அதிருப்தி – காரணம் இதோ

Javagal Sreenath Bengaluru Stadium
- Advertisement -

உலகப்புகழ் பெற்ற ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த வருடம் 10 அணிகள் பங்கேற்றதால் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் ரசிகர்கள் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த பரபரப்பான போட்டிகளுடன் நடைபெற்றது. அதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்திய குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதிய மாபெரும் இறுதி போட்டி மே 29-ஆம் தேதியன்று நடைபெற்றது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் அஹமதாபாத் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் ராஜஸ்தானை பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் மண்ணைக் கவ்வ வைத்த குஜராத் தனது முதல் வருடத்திலேயே அதுவும் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைத்தது.

முன்னதாக கரோனா காரணமாக கடந்த வருட ஐபிஎல் தொடர் துபாயில் நடைபெற்றதால் இந்த வருடம் இந்திய மண்ணில் நடைபெறுமா என்ற மிகப்பெரிய கேள்வியிருந்தது. இருப்பினும் இம்முறை பல கட்டுப்பாட்டு பாதுகாப்பு விதிமுறைகளுடன் இந்திய மண்ணிலேயே ஐபிஎல் 2022 தொடரை நடத்திய பிசிசிஐ வீரர்களின் பாதுகாப்பு கருதி வழக்கமாக நடைபெறும் 7 – 8 மைதானங்களுக்கு பதிலாக மும்பை, புனே, கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் மட்டுமே நடைபெறும் என அறிவித்தது.

- Advertisement -

தரமான பிட்ச்கள்:
அது போன்ற நிலைமையில் 74 போட்டிகளையும் 6 மைதானத்திற்குள் ஒருசில நாட்கள் இடைவெளியில் நடத்த வேண்டியிருந்ததால் தரமான பிட்ச்களை அதுவும் குறுகிய காலத்திற்குள் உருவாக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு அந்தந்த மைதான பராமரிப்பாளர்களுக்கு ஏற்பட்டது. ஏனெனில் ஐபிஎல் போன்ற கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்க்கும் டி20 தொடருக்கு பேட்டிங் பவுலிங் என இரண்டுமே சமமாக எடுபடக்கூடிய பிட்ச்களை தயாரிக்க வேண்டும். அப்போதுதான் ஒரு போட்டியில் பங்கேற்கும் இரு அணிகளும் சம அளவில் மோதி ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டு ரசிகர்களை கவர்ந்திழுக்க முடியும்.

அந்த வகையில் இந்த வருடம் நடைபெற்ற பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று ரசிகர்களின் நகங்களை கடிக்க வைத்து பல எதிர்பாராத திரில்லர் போட்டிகளை விருந்து படைத்தது. அந்த அளவுக்கு தரமான பிட்ச்களை தயாரிக்கும் பொறுப்பை சிரம் மேற்கொண்டு திறம்படவும் தரமாகவும் சிறப்பாகவும் செய்த மைதான பராமரிப்பாளர்கள் இந்த வருட ஐபிஎல் தொடர் பிரமாண்ட வெற்றியை பெறுவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளார்கள் என்றே கூறலாம்.

- Advertisement -

பரிசுத்தொகை:
இந்த நிலைமையில் அவர்களின் கடின உழைப்பை பாராட்டி கவுரவிக்கும் வகையில் ஐபிஎல் 2022 தொடர் நடைபெற்ற 6 மைதானங்களை பராமரித்த ஊழியர்களுக்கு 1.25 கோடி பரிசுத் தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் நடைபெற்ற லீக் சுற்று வெற்றிகரமாக நடைபெறுவதற்கு உதவிய 4 மைதானங்களுக்கு தலா 25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பைனல் உட்பட பிளே ஆப் சுற்று போட்டிகளை நடத்திய கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகிய மைதானங்களுக்கு தலா 12.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். அதேபோல் இந்த வருட ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக நடத்த உதவிய பிட்ச் பராமரிப்பாளர்களை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும் மனதார பாராட்டியுள்ளார்.

கடந்த 2 மாதங்களாக தங்களை ஐபிஎல் தொடரின் வாயிலாக மகிழ்விக்க முக்கிய காரணமாக இருந்த மைதான பராமரிப்பாளர்களுக்கு பிசிசிஐ உதவியுள்ளது பல ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இருப்பினும் அந்தப் பரிசு தொகை பிரித்து வழங்கப்பட்டதில் கொஞ்சம் கூட நியாயம் இல்லை என்று பெரும்பாலான ரசிகர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

ரசிகர்கள் அதிருப்தி:
1. ஏனெனில் மார்ச் 26 – மே 22 வரை கிட்டத்தட்ட 2 மாதங்களாக மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் உள்ள வான்கடே, டிஒய் பாட்டில், ப்ராபோர்ன் மற்றும் எம்சிஏ ஆகிய 4 மைதானங்களில் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று தினம்தோறும் நடைபெற்றது.

2. அதிலும் குறிப்பாக வான்கடே மற்றும் டிஒய் பாட்டில் ஆகிய 2 மைதானங்களில் தலா 20 போட்டிகளும் ப்ராபோர்ன் மற்றும் எம்எஸ்ஏ ஆகிய மைதானங்களில் தலா 15 போட்டிகளும் நடைபெற்றன. அதன் காரணமாக மேற்குறிப்பிட்ட 4 மைதானங்களில் அந்த 4 மைதானங்களில் வேலை செய்த ஊழியர்கள் எந்தளவுக்கு உழைத்திருப்பார்கள் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை.

- Advertisement -

3. ஆனால் அத்தனை போட்டிகளை நடத்திய அந்த 4 மைதானங்களுக்கு வெறும் தலா 25 லட்சங்களை பரிசளித்துள்ள பிசிசிஐ வெறும் தலா 2 நாக் அவுட் போட்டிகளை மட்டுமே நடத்திய கொல்கத்தா மற்றும் அகமதாபாத் மைதானங்களுக்கு 12.5 லட்சங்களை வழங்கியது எந்த நியாயமும் இல்லை என்று ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : தோனியின் ஆல் டைம் சாதனையை சமன் செய்து முதல் இந்தியராக ஸ்பெஷல் விருது வென்ற தினேஷ் கார்த்திக்

அதற்காக கொல்கத்தா, அகமதாபாத் மைதான பராமரிப்பாளர்களுக்கு குறைத்து கொடுக்க வேண்டும் எனக் கூறாத ரசிகர்கள் பல ஆயிரம் கோடிகளை கல்லா கட்டிய பிசிசிஐ மும்பை, புனே ஆகிய மைதான பராமரிப்பாளர்களுக்கு சற்று அதிக தொகையை வழங்கியிருக்கலாம் என்றுதான் கூறுகின்றனர்.

Advertisement