ஐபிஎல் 2022 : தோனியின் ஆல் டைம் சாதனையை சமன் செய்து முதல் இந்தியராக ஸ்பெஷல் விருது வென்ற தினேஷ் கார்த்திக்

- Advertisement -

ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008 முதல் கோப்பையை வெல்ல போராடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி குறிப்பாக விராட் கோலி தலைமையில் 2013 – 2021 வரை எவ்வளவோ போராடியும் ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை. அதனால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளான விராட் கோலி கடந்த வருடத்துடன் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். அந்த நிலைமையில் இந்த வருடம் தென்ஆப்பிரிக்காவை வழி நடத்திய அனுபவம் கொண்ட டுப்லஸ்ஸிஸ் தலைமையில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கிய அந்த அணி லீக் சுற்றில் அசத்தி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறி பைனலுக்கு முந்தைய குவாலிஃபயர் 2 போட்டி வரை சென்று தோல்வியடைந்து வரலாற்றில் 15-ஆவது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது.

இருப்பினும் இந்த வருடம் அந்த அணிக்காக விளையாடிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் முதல் போட்டியிலிருந்தே கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து எம்எஸ் தோனி, ஹர்திக் பாண்டியா போன்றவர்களைக் காட்டிலும் அற்புதமாக செயல்பட்டார். அதனால் இந்த வருடத்தின் மிகச்சிறந்த பிநிஷர் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அவர் 3 வருடங்கள் கழித்து இந்தியாவுக்காக விளையாட தேர்வாகி அசத்தினார்.

- Advertisement -

பினிஷர் டிகே:
மேலும் விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் இந்த வருடம் டாப் ஆர்டரில் பெரிய ரன்கள் எடுக்காமல் பின்னடைவை ஏற்படுத்திய போதெல்லாம் மிடில் ஆர்டரில் அதுவும் கடைசி நேரத்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் தனது அதிரடியால் தாங்கிப் பிடித்து தேவையான ரன்களை விளாசி வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வந்தார். ஆனால் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல களமிறங்கிய அத்தனை போட்டிகளிலும் சோடை போகாமல் அதிரடியாக பேட்டிங் செய்த அவர் ராஜஸ்தானுக்கு எதிரான குவாலிபயர் 2 போட்டியில் துரதிஷ்டவசமாக 6 (7) ரன்களில் அவுட்டானார். அந்த போட்டியில் விராட் கோலி, கிளன் மேக்ஸ்வெல், கேப்டன் டுப்லஸ்ஸிஸ் போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் அவரும் அவுட்டானதால் தோல்வியடைந்த பெங்களூருவின் கனவும் உடைந்தது.

இருந்தாலும் கூட இந்த வருட ஐபிஎல் 2022 தொடரின் மிகச்சிறந்த பினிஷர் என்றால் அதில் தினேஷ் கார்த்திக் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில் கடந்த 2008 முதல் ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளுக்காக விளையாடி வரும் அவர் இந்த வருடம் பங்கேற்ற 16 போட்டிகளில் 330 ரன்களை மட்டும் எடுத்தாலும் 55.00 என்ற அபார பேட்டிங் சராசரியில் 183.33 என்ற தெறிக்கவிடும் ஸ்டிரைக் ரேட்டில் குவித்துள்ளார். அவரின் இந்த பேட்டிங் சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் என்பது அவரின் வாழ்நாளில் தொட்டுள்ள உச்சபட்ச புள்ளிகளாகும்.

- Advertisement -

சூப்பர் ஸ்ட்ரைக்கர்:
மேலும் இந்த வருடம் பங்கேற்ற 16 போட்டிகளில் 10 முறை கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் நின்ற அவர் ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக முறை நாட் – அவுட்டாக இருந்த பேட்ஸ்மேன் என்ற எம்எஸ் தோனியின் வரலாற்றுச் சாதனையை சமன் செய்துள்ளார். அந்தப் பட்டியல் இதோ:
1. எம்எஸ் தோனி 2014இல்:
14*, 13*, 22*, 12*, 22*, 26*, 21*, 57*, 49*, 42*
2. தினேஷ் கார்த்திக் 2022இல்:
32*, 14*, 44*, 7*, 66*, 13*, 26*, 30*, 2*, 37*

அதைவிட இந்த வருடத்தின் மிகச்சிறந்த பினிஷெர் என்பதற்கு சான்றாக இந்த வருடம் களமிறங்கிய பேட்ஸ்மேன்களில் அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் கொண்ட பேட்ஸ்மேன்களின் பட்டியலில் லியம் லிவிங்ஸ்டன், ஆண்ட்ரே ரசல் போன்றவர்களை காட்டிலும் தினேஷ் கார்த்திக் தான் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல் இதோ:
1. தினேஷ் கார்த்திக் : 183
2. லியாம் லிவிங்ஸ்டன் : 182
3. ஆண்ட்ரே ரசல் : 174
4. கிளென் மேக்ஸ்வெல் : 169
5. ஜிதேஷ் சர்மா : 164

- Advertisement -

முதல் இந்தியர்:
அதன் காரணமாக இந்தப் பட்டியலுக்கு கொடுக்கப்படும் “சூப்பர் ஸ்ட்ரைக்கர்” என்ற விருதையும் அவர் பெற்றுள்ளார். குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய மாபெரும் இறுதி போட்டிக்கு பின் நிகழ்ந்த விருது விழாவில் அவருக்கான இந்த விருதையும் 10 லட்சம் பரிசையும் தினேஷ் கார்த்திக் சார்பில் 2022 ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா பெற்றுக்கொண்டார். அதற்கு தினேஷ் கார்த்திக் தனது டுவிட்டரில் மனதார நன்றியும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஒவ்வொரு வருடமும் அதிரடியாக பேட்டிங் செய்யும் பேட்ஸ்மேன்களை கவுரவிக்கும் வகையில் சூப்பர் ஸ்ட்ரைக்கர் என்ற விருதை கடந்த 2018 முதல் ஐபிஎல் நிர்வாகம் கொடுத்து வருகிறது. அதை இதற்கு முன் ஆண்ட்ரே ரசல் போன்ற வெஸ்ட் இண்டீஸ் காட்டடி வீரர்கள் மட்டுமே தங்களது முரட்டுத்தனமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வென்று வந்தார்கள். ஆனால் இப்போதுதான் அந்த விருதை வெல்லும் முதல் இந்தியராக தினேஷ் கார்த்திக் சாதனை படைத்துள்ளது தமிழக ரசிகர்களுக்கு பெருமையான ஒன்றாகும்.

இதையும் படிங்க : நோ தோனி, கோலி, ரோஹித் – ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்ட சிறந்த ஐபிஎல் 2022 கனவு அணி

அந்த பட்டியல் இதோ:
1. சுனில் நரேன் : 2018
2. ஆண்ட்ரே ரசல் : 2019
3. கைரன் பொல்லார்ட் : 2020
4. சிம்ரோன் ஹெட்மயர் : 2021
5. தினேஷ் கார்த்திக் : 2022*

Advertisement