பாகிஸ்தானில் மாஸ் காட்டிய பஸ்பால்.. இந்தியாவில் முதல் நாளிலேயே படுத்த பரிதாப புள்ளிவிவரம்

- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து சுமாராக விளையாடி 246 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் போராடி 70 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்யும் இந்தியா முதல் நாள் முடிவில் அதிரடியாக விளையாடி 119/1 ரன்கள் எடுத்து இங்கிலாந்து விட இன்னும் 127 ரன்கள் மட்டுமே பின் தங்கியுள்ளது.

- Advertisement -

படுத்த பஸ்பால்:
இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 24 ரன்களில் அவுட்டானாலும் இளம் வீரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக 9 பவுண்டரி 3 சிக்சருடன் 76* (70) ரன்கள் விளாசி மிரட்டி வருகிறார். முன்னதாக பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்றது முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து நிறைய வெற்றிகளை குவித்து வருகிறது.

அதை மெக்கல்லத்தின் பட்டப்பெயரான “பஸ்” என்பதை அடிப்படையாக வைத்து பஸ்பால் என்று இங்கிலாந்து ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கொண்டாடி வருகின்றனர். அந்த நிலையில் பஸ்பால் அணுகுமுறையை பயன்படுத்தி 2022 நவம்பர் மாதம் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் அடித்து நொறுக்கி 3 – 0 என்ற கணக்கில் வென்றதைப் போல இம்முறை இந்தியாவை அதன் சொந்த மண்ணில் 12 வருடங்கள் கழித்து தோற்கடிப்போம் என்று இங்கிலாந்து அணியினர் தொடர் துவங்குவதற்கு முன்பே எச்சரிக்கை கொடுத்தனர்.

- Advertisement -

ஆனால் பாகிஸ்தானில் தார் ரோடு போலிருந்த பிட்ச்சில் 8.29 என்ற ரன்ரேட்டில் 21 ஓவரில் 174 ரன்களை அடித்து நொறுக்கியதே ப்ரெண்டன் மெக்கல்லம் புதிய பயிற்சியாளராக வந்த பின் ஒரு டெஸ்ட் போட்டியின் ஒரு செஷனில் இங்கிலாந்து பதிவு செய்த அதிகபட்ச ரன் ரேட்டாகும். இருப்பினும் அதே இங்கிலாந்து அணி தற்போது ஹைதெராபாத் பிட்ச்சில் சவாலான இந்தியாவுக்கு எதிராக இப்போட்டியின் 2வது செஷனில் அதிரடி காட்ட முடியாமல் 31 ஓவரில் 107 ரன்களை 3.45 என்ற ஆமைவேக ரன்ரேட்டில் தான் அடித்தது.

இதையும் படிங்க: அண்டர்-19 உ.கோ 2024 : 2.850 ரன்ரேட்.. 100க்கு ஆல் அவுட்டாக்கி அயர்லாந்தை அலறவிட்ட இந்திய அணி

இந்த 3.45 என்பது மெக்கல்லம் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின் ஒரு போட்டியின் ஒரு செஷனில் இங்கிலாந்து பதிவு செய்த குறைந்தபட்ச ரன் ரேட்டாகும். இதிலிருந்து சுமாரான பவுலிங்கை கொண்ட பாகிஸ்தானில் தார் ரோட் போன்ற பிட்ச்சில் மாஸ் காட்டிய இங்கிலாந்தின் பஸ்பால் தரமான பவுலிங்கை கொண்ட இந்தியாவில் சவாலான பிட்ச்சில் முதல் நாளிலேயே படுத்துள்ளது தெரிய வருகிறது. மறுபுறம் அதே பிட்ச்சில் ஜெய்ஸ்வால் அதிரடியால் இந்தியா முதல் நாளில் 5.17 என்ற ரன்ரேட்டில் ரன்கள் குவித்து உண்மையான அதிரடியை காட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement