
பாகிஸ்தான் அணி தற்சமயத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 1992 சாம்பியனான பாகிஸ்தான் சமீபத்திய ஐசிசி தொடர்களில் ஜிம்பாப்வே, அமெரிக்கா போன்ற கத்துக் குட்டிகளிடம் தோல்வியை சந்தித்தது. ஆனால் தற்போது வங்கதேசத்திற்கு எதிராக சொந்த மண்ணில் பாகிஸ்தான் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது.
அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக முதல் முறையாக ஒரு போட்டியில் பாகிஸ்தான் வரலாற்றுத் தோல்வியை சந்தித்தது. அது போக டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக டிக்ளர் செய்த பின்பும் தோல்வியை சந்தித்த முதல் அணியாக பாகிஸ்தான் மோசமான உலக சாதனை படைத்தது. அப்படி பிறந்து வளர்ந்த சொந்த மண்ணில் வங்கதேசம் போன்ற அணியிடம் தோற்கும் அளவுக்கு பாகிஸ்தான் வீழ்ச்சியை சந்தித்துள்ளது அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் இப்படி தோல்விகளை சந்திப்பதற்கு உள்ளூர் கிரிக்கெட் தரமாக இல்லாததே காரணம் என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் பசித் அலி தெரிவித்துள்ளார். எனவே அண்டை நாடான இந்தியாவை பார்த்து பாகிஸ்தான் தங்களுடைய உள்ளூர் கிரிக்கெட்டை முன்னேற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.
“வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்ததும் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை எனும் உள்ளூர் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளின் சிஸ்டங்களை பாகிஸ்தான் ஏற்கனவே காப்பி அடித்துள்ளது. இந்தியா நமக்கு அடுத்ததாக அருகில் உள்ளனர். அவர்களுடைய சிஸ்டங்களையும் காப்பி செய்யுங்கள்”
“உண்மையில் காப்பி அடிப்பதற்கும் உங்களுக்கு கொஞ்சம் அறிவு வேண்டும். தற்போதைய நிலைமையில் இந்தியா செய்வதை அப்படியே காப்பி அடியுங்கள். இந்தியாவில் விரைவில் துலீப் கோப்பை துவங்க உள்ளது. அது டி20 அல்லது ஒருநாள் தொடரா? இல்லை. அது 4 நாட்கள் கொண்ட தொடர். இந்தியா வித்தியாசமாக தங்களுடைய அடிப்படையை உருவாக்குவதில் கவனம் செலுத்துகின்றனர்”
இதையும் படிங்க: தேசிய விளையாட்டு தினம் 2024 ஸ்பெஷல்: இந்தியாவில் கிரிக்கெட் கொடி கட்டிப் பறப்பது எப்படி?
“அதனாலேயே அவர்கள் இந்தளவுக்கு வெற்றிகரமாக செயல்படுகின்றனர்” என்று கூறினார். மொத்தத்தில் இந்த வீழ்ச்சியிலிருந்து மீண்டு வர பாகிஸ்தான் அணி இந்தியாவை அப்படியே காப்பி அடிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று பசித் அலி வெளிப்படையாக கேட்டுக் கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கும் வங்கதேசத்துக்கு எதிரான 2வது போட்டியில் விளையாட பாகிஸ்தான் தயாராகி வருகிறது.