இந்தியாவில் ஆகஸ்ட் 29ஆம் தேதி தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது. பொதுவாக விளையாட்டு என்பது மதம் மற்றும் எல்லைகளைக் கடந்து மக்களை ஒருங்கிணைக்கும் ஒரு உணர்வாக பார்க்கப்படுகிறது. எனவே அதற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தியாவில் பல்வேறு விளையாட்டுகளைப் பற்றிய விழிப்புணர்பை ஏற்படுத்தும் நாளாக இன்றைய தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இன்றைய தினத்தில் இந்தியாவில் கபடி, ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு இருந்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி கிரிக்கெட் எந்தளவுக்கு உயர்ந்து நிற்கிறது என்பதை பற்றி பார்ப்போம். ஆரம்பக் காலங்களில் இந்தியாவில் ஹாக்கி விளையாட்டு மிகவும் பிரபலமாக இருந்தது. குறிப்பாக 1928 – 1956 வரையிலான காலகட்டங்களில் ஒலிம்பிக்கில் ஹாக்கி இந்திய அணி 6 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தது.
இந்தியாவும் கிரிக்கெட்டும்:
மேலும் 1964 – 1980 காலகட்டங்களிலும் ஒலிம்பிக்கில் சில பதக்கங்களை வென்றதால் ஹாக்கி இந்தியாவின் அறிவிக்கப்படாத தேசிய விளையாட்டாக கொண்டாடப்பட்டது. ஆனால் அப்போது தான் இங்கிலாந்தில் நடைபெற்ற 1983 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையை கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி வென்றது. அந்த வெற்றி கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாத மொத்த இந்திய மக்களையும் கிரிக்கெட்டின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.
அதன் பின் 1985 உலக சாம்பியன்ஷிப் கோப்பையை ஆஸ்திரேலியாவில் சுனில் கவாஸ்கர் தலைமையில் வென்றது கிரிக்கெட்டை இன்னும் ஆழமாக இந்தியாவில் வேரூன்ற வைத்தது. அந்த வெற்றியை பார்த்தும் கபில் தேவ், சுனில் கவாஸ்கர் போன்ற சூப்பர் ஸ்டார் வீரர்களின் திறமையை கண்டும் சச்சின் டெண்டுல்கர் போன்ற பல இளம் வீரர்கள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று உத்வேகமடைந்து பேட்டையும் பந்தையும் கையிலெடுத்தனர்.
விஸ்வரூப வளர்ச்சி:
அதைத் தொடர்ந்து 90களில் சச்சின் டெண்டுல்கர் தனி ஒருவனாக பல போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். அதே சமயம் சச்சின் அவுட்டானதும் தோல்வி உறுதி என்ற எண்ணத்துடன் இந்தியாவில் அணைக்கப்பட்ட தொலைக்காட்சிகளும் ஏராளமாக இருந்தன. இருப்பினும் அசாருதீன் தலைமையில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய இந்தியாவுக்கு 2000ஆம் ஆண்டு கங்குலி புதிய கேப்டனாக பொறுப்பேற்றார்.
அவர் சேவாக் முதல் தோனி வரை பல தரமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து வளர்த்து இந்திய அணியில் பல மேட்ச் வின்னர்களை உருவாக்கினார். அவரது தலைமையில் வெளிநாடுகளில் வெல்லத் துவங்கிய இந்தியா 2001 கொல்கத்தா டெஸ்ட், 2002 நாட்வெஸ்ட் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் ட்ராபி போன்ற மகத்தான வெற்றிகளை பெற்றது. அதன் பின் தோனி தலைமையில் 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியா தங்களுடைய வரலாற்றில் பொற்காலத்தையும் புதிய உச்சத்தையும் சந்தித்தது.
மதமாக கிரிக்கெட்:
அதற்கிடையே துவங்கப்பட்ட ஐபிஎல் தொடரால் தற்போது பல தரமான வீரர்களும் கோடிக்கணக்கான ரூபாயும் இந்தியாவுக்கு கிடைக்கின்றது. அதனால் தற்போது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளை மிஞ்சிய இந்தியா உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. மேலும் 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையில் வென்ற இந்தியா தரத்திலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளுக்கு சவாலை கொடுக்கிறது.
இதையும் படிங்க: அம்பயரா சொல்றேன்.. தோனியை பற்றி ரசிகர்கள் சொல்றது உண்மை தான்.. அனில் சௌத்ரி பேட்டி
மொத்தத்தில் 1983க்குப்பின் மக்கள் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவுக்கு தொடர்ந்து கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றிகளை பெற்று வருகிறது. அதனாலேயே 21ஆம் நூற்றாண்டில் ஹாக்கி உள்ளிட்ட இதர விளையாட்டுகளை பின்னுக்குத் தள்ளிய கிரிக்கெட் இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்டு ஒவ்வொரு தெருக்களிலும் விளையாடப்படும் விளையாட்டாக உருவெடுத்துள்ளது. அதை ரசிகர்கள் ஒரு மதமாக கொண்டாடி வருகின்றனர்.



