
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற நான்காவது போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் 10 வருடங்களுக்குப் பின் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்ல முடியாமல் நழுவ விட்ட இந்தியா 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் கோட்டை விட்டது. அந்தத் தோல்விக்கு கேப்டன் ரோஹித் சர்மா மிகவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்.
இந்நிலையில் இந்தத் தொடரில் மிடில் ஆர்டரில் விளையாடிய ரோகித் சர்மா துவக்க வீரராக களமிறங்கி அசத்தவில்லை என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி கூறியுள்ளார். அந்த வகையில் ஏற்கனவே ஓப்பனிங்கில் அசத்தி வந்த கேஎல் ராகுலையும் தொடர்ந்து அசத்த விடாமல் தாமும் அசத்தாமல் மொத்த அணியின் தன்னம்பிக்கையை சீர்குலைத்த ரோஹித் சர்மா தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார்.
மேலும் தொடரை சமன் செய்ய கடைசி போட்டியில் இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனவே ரோஹித் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவிக்கும் அவர் பும்ரா இந்தியாவை தலைமை தாங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி பசித் அலி பேசியது பின்வருமாறு.
“முதல் போட்டியில் வென்ற பின் இந்தியா அதீத தன்னம்பிக்கையை கொண்டார்களா? ரோஹித் நான் ஓப்பன் செய்கிறேன் என்று சொன்னார். இத்தனைக்கும் அவர் ஃபார்மில் இல்லை. அதையும் தாண்டி துவக்க வீரராக களம் இறங்கிய அவர் ரன்கள் அடித்துக் கொண்டிருந்த ராகுலையும் அழுத்தத்திற்குள் தள்ளினார். அந்த வகையில் நீங்கள் மொத்த அணியின் தன்னம்பிக்கையையும் உடைத்தீர்கள்”
“எனவே ரோகித் சர்மா கேப்டன்சிப் பதவியை ராஜினாமா செய்யும் நேரம் வந்துள்ளதாக நான் நினைக்கிறேன். பும்ரா கடைசி போட்டியில் கேப்டனாக செயல்பட வேண்டும். ரோகித் நீண்ட காலமாக இந்தியாவுக்கு வேலை செய்தார். ஆனால் தற்போது அவருடைய உடல் அவருக்கு ஆதரவு கொடுக்கவில்லை. 0 ரன்கள் அடித்திருந்தாலும் இளம் வீரர் என்ற முறையில் சுப்மன் கில் விளையாடியிருக்க வேண்டும்”
இதையும் படிங்க: உண்மையா இதுல பாண்டியாவை விட நிதிஷ் நல்ல பிளேயர்.. தொடர்ந்து சான்ஸ் கொடுங்க.. கவாஸ்கர் பாராட்டு
“ஆனால் ரோகித் சர்மா மொத்த பேட்டிங் வரிசையையும் தொல்லை செய்துள்ளார். அதே போல விராட் கோலி நான்காவது இடத்தில் தொடர்ந்து ஒரே மாதிரியாக அவுட்டாகிறார். எனவே நல்ல ஃபார்மில் இருக்கும் நிதிஷ் ரெட்டியை 4வது இடத்தில் விளையாட வைக்கலாம். ஆனால் விராட் கோலியின் இடத்தை பற்றி பயத்தால் யாரும் பேசுவதில்லை. இங்கே இந்திய அணி ராகுல் டிராவிட் பயிற்சியை தவற விடுகிறது என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.