
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் 3 – 0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலியா தொடரில் இந்தியா 4 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதற்கு தற்சமயத்தில் வாய்ப்பும் குறைவாகவே காணப்படுகிறது.
ஏனெனில் சொந்த மண்ணிலேயே தற்போது இந்தியா வரலாற்றில் முதல் முறையாக ஒரு தொடரில் ஒயிட் வாஸ் தோல்வியை பதிவு செய்துள்ளது. அந்த தோல்விக்கு இந்திய அணி பெரிதும் நம்பியிருந்த விராட் கோலி ரோஹித் சர்மா ஆகியோர் முக்கிய காரணமாக அமைந்தார்கள். அதே போல பந்து வீச்சில் அஸ்வின் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
அதனால் அவர்களை கழற்றி விடும் நேரம் வந்து விட்டதாக இந்திய ரசிகர்களே சமூக வலைதளங்களில் விமர்சிக்க துவங்கியுள்ளார்கள். இந்நிலையில் விராட், ரோஹித் போன்ற அனுபவமிக்க வீரர்களை கழற்றி விட்டு அபிஷேக் ஷர்மா போன்றவர்களை வைத்து உடனடியாக ஆஸ்திரேலியாவில் வெல்ல முடியுமா என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி இந்திய ரசிகர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் 2021, 2023 ஆகிய அடுத்தடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற்று சாதனை படைத்த இந்தியா 2025க்கு தகுதி பெறவில்லையெனில் அனைத்தும் முடிந்து விடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் பசித் அலி இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்திய ரசிகர்கள் என்ன பேசுகிறார்கள்? அவர்கள் விராட் கோலி, ரோஹித், அஸ்வினை நீக்குமாறு சொல்கிறார்கள்”
“தற்போதைய நிலையில் அவர்களுக்கு நிகரான மாற்றுத் தரமான வீரர்கள் இருக்கிறார்களா? அல்லது அபிஷேக் ஷர்மா போன்ற டி20 வீரர்களை நீங்கள் டெஸ்ட் அணிக்குள் கொண்டு வருவீர்களா? உண்மையில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் உள்ளூரில் விளையாடாமல் சரியாக தயாராகவில்லை. அவர்கள் உள்ளூரில் தகுந்த மைதானங்களில் விளையாடி தயாராக வேண்டும்”
இதையும் படிங்க: ஹனிமூன் முடிஞ்சுடுச்சு.. ஆஸியில் கம்பீர் இதை செய்யலன்னா.. அபிஷேக் நாயர் எதுக்கு? கவாஸ்கர் கேள்வி
“அதை விட்டு விட்டு உங்களுடைய ஹீரோவை ஜீரோவாக மாற்றலாமா? பாகிஸ்தானில் பாபர் அசாம், ஷான் மசூத், முகமது ரிஸ்வான் ஆகியோர் பற்றி நாங்கள் விமர்சிக்கிறோம். ஆனால் அவர்களை நாங்கள் அணியிலிருந்து வீட்டுக்கு அனுப்புமாறு சொல்லவில்லை. அவர்கள் ஃபார்முக்கு திரும்பி வருவார்கள். அதற்குள் சகாப்தம் முடிந்து விட்டது என்று சொல்வது அதிகப்படியானது. ஒருவேளை 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு இந்தியா தகுதி வரவில்லையெனில் அனைத்தும் முடிந்து விடுமா?” என்று கூறினார்.