
நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது. அத்துடன் 12 வருடங்கள் கழித்து முதல் முறையாக இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் தோற்றுள்ளது. அது போக சொந்த மண்ணில் முதல் முறையாக 3 – 0 என்ற கணக்கில் இந்தியா முழுமையான ஒயிட் வாஸ் தோல்வியையும் பதிவு செய்துள்ளது.
இந்த தோல்விக்கு நியூசிலாந்து ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் இந்த வரலாற்றுத் தோல்விக்கு புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தான் காரணம் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி விமர்சித்துள்ளார். குறிப்பாக இங்கிலாந்தின் பஸ்பால் அணுகுமுறையை கம்பீர் காப்பியடிக்க முயற்சித்ததாக அவர் விமர்சித்துள்ளார்.
அதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாட முயற்சித்ததே இந்த தோல்விக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி பசித் அலி பேசியது பின்வருமாறு. “இன்று இந்தியா கண்டிப்பாக ட்ராவிட்டை மிஸ் செய்யும். ஏனெனில் அவர் 4 நாட்கள் திட்டமிடுவார். ஆனால் இப்போது உள்ளவர்கள் 2 அல்லது இரண்டரை நாட்களுக்கு மட்டுமே திட்டமிடுகிறார்கள்”
“இப்போதுள்ள பயிற்சியாளர்கள் கொடுக்கும் பேட்டியை நன்றாக பாருங்கள். அவர்கள் போட்டி டிராவில் முடிவடைவதை விரும்பவில்லை. அது சரிதான். ஆனால் ஐபிஎல் கோப்பையை வென்ற கையோடு வந்த நீங்கள் டெஸ்ட் போட்டிகளிலும் அதே போல பயிற்சியை கொடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. டி20 போல டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினால் அது உங்களுடைய ஆட்டத்தை பாழாக்கிவிடும்”
“அனைவரும் பஸ்பால் அணுகுமுறையை காப்பியடிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் இதுவரை இங்கிலாந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு ஒரு முறையாவது தகுதி பெற்றுள்ளதா? எனவே அது போன்ற அணுகு முறையில் விளையாடுவதில் என்ன பயன்? மும்பையில் நீங்கள் சுழலுக்கு சாதகமான மைதானத்தை அமைத்தீர்கள்”
இதையும் படிங்க: அந்த மாதிரி சூழல் கிடைச்சா இந்திய அணியை பாகிஸ்தானே 3 – 0ன்னு வீழ்த்தும்.. வாசிம் அக்ரம் அதிரடி கணிப்பு
“ஆனால் அங்கே வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் பேட்ஸ்மேன்களுக்கும் 0 தன்னம்பிக்கை மட்டுமே கிடைத்தது. தற்போது அவர்கள் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் விளையாட செல்ல உள்ளனர். இங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் போது அவர்களுடைய தன்னம்பிக்கை என்னவாக இருக்கும்? ஹீரோவாக இருக்கும்” என்று கூறினார். மொத்தத்தில் நியூசிலாந்திடம் தோற்றதால் இந்தியாவின் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.