
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பும்ரா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆனால் ரோகித் சர்மா தலைமையில் விளையாடிய இரண்டாவது போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு ரோஹித் சர்மாவின் சுமாரான கேப்டன்ஷிப் மற்றும் பேட்டிங் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அப்போட்டியில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடிய போது 40 நிமிடங்களில் பும்ராவுக்கு வெறும் 4 ஓவர்கள் மட்டுமே ரோகித் சர்மா கொடுத்ததாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி விமர்சித்துள்ளார். அதே போல ஆஸ்திரேலிய பவுலர்கள் தொடர்ந்து ஸ்டம்ப் லைனை அட்டாக் செய்து பந்து வீசினார்கள். ஆனால் இந்திய பவுலர்கள் ஸ்டம்புக்கு வெளியே வீசி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை எளிதாக பேட்டிங் செய்ய விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்த இரண்டையும் கட்டுப்படுத்த தவறிய ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் சுமாராக இருந்தது தோல்வியை கொடுத்ததாகவும் பசித் அலி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “40 நிமிட ஸ்பெல்லில் பும்ரா வெறும் 4 ஓவர்கள் மட்டுமே வீசினார். பும்ரா இன்னும் 2 ஓவர்கள் வீசியிருக்க வேண்டும். ஹெட் அப்போது தான் பேட்டிங் செய்ய வந்திருந்ததால் பும்ரா அவரை அவுட்டாக்கி இருக்கலாம்”
“அவருடைய பிட்னஸ் பணிச்சுமை ஆகியவை எனக்குத் தெரியாது. ஆனால் அவர் இன்னும் 2 ஓவர்கள் வீசியிருந்தால் விக்கெட் கிடைத்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். அது ஒரு தவறு. மறுபுறம் பும்ரா இல்லாத நேரத்தில் ஹெட் அட்டாக் செய்தார். குறிப்பாக ராணா நித்திஷ் ரெட்டி, அஸ்வின், ஆகியோருக்கு எதிராக அவர் அதிரடியாக விளையாடினார்”
“பும்ரா பவுலிங் செய்யாததால் அவர் நன்கு செட்டிலாகி பேட்டிங் செய்தார். அதுவே ஆஸ்திரேலிய அணி இப்போட்டியில் தங்களுடைய வெற்றியை வலுவாக்க உதவியது. ஆஸ்திரேலிய பவுலர்கள் இந்திய பேட்ஸ்மேன்களை ஸ்டம்பில் விளையாட வைத்தார்கள். ஆனால் இந்திய பவுலர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தவற விடும் பந்துகளை வீசினார்கள். அது கேப்டன்ஷிப் தவறு”
இதையும் படிங்க: காலிஸ், யூனிஸ் மாதிரி ஆஸியில் 37 வயதில் அசத்த.. பிளான் பி ஃபாலோ பண்ணுங்க.. ரோஹித்துக்கு ஓ’கீபி அட்வைஸ்
“உங்களுடைய கேப்டனும் திட்டங்களை வகுத்து பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கலாம். ஆனால் ரோகித் சர்மா அதை செய்து நாம் பார்க்கவில்லை. ரிஷப் பண்ட் சதமடித்து நிதிஷ் 70 ரன்கள் எடுத்திருந்தால் இரவு நேரத்தில் ஆஸ்திரேலியா 150+ இலக்கை துரத்த வேண்டிய சவாலை சந்தித்திருக்கும். அப்போது சிராஜ், பும்ரா அவர்களை ஊதி தள்ளியிருப்பார்கள். ஆனால் அதை செய்யாததால் வெற்றி தூரமாக சென்றது” என்று கூறினார்.