ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பும்ரா தலைமையில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் ரோகித் சர்மா தலைமையில் விளையாடிய இரண்டாவது போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. அந்தப் போட்டியில் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் ரோஹித் சர்மா எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாதது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
குறிப்பாக முதல் போட்டியில் ஜெய்ஸ்வால் – ராகுல் ஆகியோர் துவக்க வீரர்களாக சிறப்பாக விளையாடி வெற்றியில் பங்காற்றினார்கள். அதனால் அவர்களுக்காக தம்முடைய ஓப்பனிங் இடத்தை கொடுத்த ரோஹித் சர்மா மிடில் ஆர்டரில் விளையாடினார். ஆனால் அந்த வாய்ப்பில் 20 ரன்கள் கூட தாண்டாத அவர் இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தார்.
37 வயதில் தடுமாற்றம்:
இந்நிலையில் ஜேக் காலிஸ், யூனிஸ் கான் ஆகியோர் போல 37 வயதிலும் ஆஸ்திரேலியாவில் மிடில் ஆர்டரில் ரோஹித் சர்மா அசத்துவது கடினம் என்று முன்னாள் வீரர் கேரி ஓ’கீபி தெரிவித்துள்ளார். எனவே அடுத்த போட்டியில் ரோகித் துவக்க வீரராக களம் இறங்கும் இரண்டாவது திட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அதை ரோஹித் சர்மா செய்ய மாட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அணியை மாற்றுவதற்கான பரிந்துரை கொடுக்கப்பட்டாலும் இந்தியா இதை தொடர்வார்கள் என்று நான் நினைக்கிறேன். 37 வயதில் ஆஸ்திரேலியாவில் வந்து அசத்துவது மிகவும் கடினம். ரோஹித் கடந்த 5 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 13 சராசரி மட்டுமே கொண்டுள்ளார். இரண்டாவது போட்டியில் 2 இன்னிங்ஸிலும் தோல்வியை சந்தித்தார்”
பிளான் பி:
“37 வயதில் ஆஸ்திரேலியாவுக்கு ஒரு தொடரில் தாக்கத்தை ஏற்படுத்திய வீரர்களை நீங்கள் ஒற்றை கையில் சுலபமாக எண்ணலாம். பாகிஸ்தானின் யூனிஸ் கான், தென்னாபிரிக்காவின் ஜேக் காலிஸ் ஆகியோர் இங்கே 50க்கும் மேற்பட்ட சராசரி கொண்டுள்ளார்கள். அதே போன்ற ஆட்டத்தை எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவால் செய்ய முடியுமா? என்ற கேள்வியை கேட்க வேண்டும்”
இதையும் படிங்க: அது ஸ்டீவ் பக்னர் ஆஸிக்காக 12வது வீரராக அறிமுகமாகி இந்தியாவை வீழ்த்திய தொடர்.. குமுறிய ஹர்பஜன்
“அவர் தான் கேப்டன். எனவே பிளான் பி கையில் எடுப்பதற்கான பரிந்துரையை கண்டிப்பாக அவரிடம் கொடுக்க வேண்டும். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் உங்களுக்கு கருணை காட்ட மாட்டார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ரோஹித் சர்மா தனது தனது பேட்டிங் இடத்தை மாற்றுவாரா?” என்று கூறினார். அந்த வகையில் ரோகித் சர்மா மீண்டும் துவக்க வீரராக விளையாட வேண்டும் என்பதை இந்திய ரசிகர்களின் விருப்பமாகவும் இருக்கிறது.



