CWC 2023 : 2003இல் தந்தை.. 2023இல் மகன் பஸ் டீ லீடி.. மாபெரும் தனித்துவ உலக சாதனை.. யுவியின் சாதனையும் சமன்

Bas Dee Leede
- Advertisement -

ஐசிசி உலக கோப்பை 2023 தொடரில் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற்ற 2வது லீக் போட்டியில் கத்துக்குட்டியான நெதர்லாந்தை எதிர்பார்த்தது போலவே பாகிஸ்தான் 81 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49 ஓவரில் 286 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக சவுத் ஷாக்கில் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் தலா 68 ரன்கள் எடுத்தனர்.

மறுபுறம் பந்து வீச்சில் ஓரளவு சிறப்பாக செயல்பட்ட நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக நட்சத்திர கிரிக்கெட் வீரர் பஸ் டீ லீடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 287 ரன்களை துரத்திய நெதர்லாந்துக்கு பஸ் டீ லீடி 67, விக்ரம்ஜித் சிங் 52 ரன்கள் எடுத்ததை தவிர்த்து ஏனைய வீரர்கள் சொதப்பியதால் 41 ஓவரில் 205 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஹரிஷ் ரவூப் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

தந்தையின் வழியில்:
முன்னதாக கடந்த 2003 உலக கோப்பையில் ஹோலண்ட் என்ற பெயருடன் விளையாடிய நெதர்லாந்து அணி வீரர் டிம் டீ லீடி இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி 35 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். குறிப்பாக சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோரது விக்கெட்களை எடுத்த அவருடன் மகன் பஸ் டீ லீடி கடந்த சில வருடங்களாகவே நெதர்லாந்து அணிக்காக சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தன்னுடைய தந்தையை போல் பாகிஸ்தானுக்கு எதிரான இப்போட்டியில் 9 ஓவரில் 62 ரன்கள் கொடுத்த பஸ் டீ லீடி 4 விக்கெட்டுகளை எடுத்தார். இதன் வாயிலாக உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகளை எடுத்த முதல் தந்தை – மகன் ஜோடி என்ற தனித்துவமான உலக சாதனையை அவர்கள் படைத்துள்ளனர். அதை விட ஸ்காட்லாந்துக்கு எதிராக நெதர்லாந்து கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டியில் பஸ் டீ லீடி 123 ரன்களையும் 5 விக்கெட்களையும் எடுத்து இதே போல ஆல் ரவுண்டராக அசத்தினார்.

- Advertisement -

இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் அடுத்தடுத்த 2 போட்டிகளில் 50க்கும் மேற்பட்ட ரன்களையும் 4 விக்கெட்களையும் எடுத்த முதல் வீரர் என்ற தனித்துவமான உலக சாதனையை டீ லீடி படைத்துள்ளார். இது போக உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் 50+ ரன்கள் மற்றும் 4+ விக்கெட்டுகளை எடுத்த முதல் நெதர்லாந்து வீரர் மற்றும் உலக அளவில் 10வது வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: ENG vs NED : 3 விக்கெட்டுகள் இழந்ததும் பயந்தோம்.. ஆனால் வெற்றிக்கு பிறகு – ஆட்டநாயகன் சவுத் சாக்கில் பேட்டி

இதற்கு முன் டங்கன் ப்ளக்சர், இயான் போத்தம், நெய்ல் ஜான்சன், மொரிஸ் ஒடும்பி, க்ளோபேன்பர்க், யுவராஜ் சிங், திலகரத்னே தில்சன், வஹாப் ரியாஸ், சாகிப் அல் ஹசன் ஆகியோர் இந்த சாதனையை ஏற்கனவே உலக கோப்பையில் படைத்துள்ளனர். அப்படி சிறந்த ஆல் ரவுண்டராக செயல்பட்ட போதிலும் இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் இப்போட்டியில் அவரால் வெற்றி காண முடியாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

Advertisement