SL vs BAN : பயிற்சி போட்டியில் அதிரடி.. 48 பால் மீதம்.. இலங்கையை கேப்டன் ஷாகிப் இல்லாமலேயே வங்கதேசம் தோற்கடித்தது எப்படி?

SL vs BAN
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை அக்டோபர் 5 முதல் இந்தியாவில் துவங்குகிறது. அதற்கு அனைத்து அணிகளும் தயாராகும் வகையில் ஐசிசி நடத்தும் பயிற்சி போட்டிகள் செப்டம்பர் 29ஆம் தேதி துவங்கின. அதில் கௌகாத்தியில் நடைபெற்ற முதல் பயிற்சி போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதின.

மதியம் 2 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் வங்கதேச கேப்டன் சாகிப் அல் ஹசன் காயத்தால் விலகியதால் இளம் வீரர் மெஹதி ஹசன் அணியை வழி நடத்தினார். குறிப்பாக கடந்த டிசம்பர் மாதம் வலுவான இந்தியாவை சொந்த மண்ணில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோற்கடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த அவரை வருங்கால கேப்டனாக வளர்க்கும் வகையில் வங்கதேச அணி நிர்வாகம் இந்த முடிவு எடுத்ததாக தெரிகிறது.

- Advertisement -

அசால்ட்டான வெற்றி:
அந்த சூழ்நிலையில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த போதிலும் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி 49.1 ஓவரில் 263 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இத்தனைக்கும் குசால் பெரேரா 34, நிஷாங்கா 68, குசன் மெண்டிஸ் 22 என டாப் 3 பேட்ஸ்மேன்கள் நல்ல ரன்களை எடுத்ததால் ஒரு கட்டத்தில் இலங்கை 163/3 என்ற நல்ல நிலையில் இருந்தது.

ஆனால் மிடில் ஆர்டரில் தனஞ்செயா டீ சில்வா 55 ரன்கள் எடுத்தது தவிர்த்து சமரவிக்கிரமா 2, அசலங்கா 18, கேப்டன் சனாக்கா 3, கருணரத்னே 18 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அந்த வகையில் இலங்கையை கட்டுப்படுத்திய வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக ஸ்பின்னர் மெகிதி ஹசன் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

அதை தொடர்ந்து 264 ரன்களை துரத்திய வங்கதேசத்திற்கு தன்சித் ஹசன் – லிட்டன் டாஸ் ஆகிய ஓப்பனிங் ஜோடி ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடி 131 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல அடித்தளம் கொடுத்தது. அதில் லிட்டன் தாஸ் 10 பவுண்டரியுடன் 61 (56) ரன்களிலும் ஹசன் 84 (88) ரன்களிலும் அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த ஹ்ரிடாய் டக் அவுட்டானார்.

இதையும் படிங்க: உலகக்கோப்பை 2023 : இம்முறை இறுதிப்போட்டியில் மோதப்போகும் 2 அணிகள் இதுதான் – இர்பான் பதான் கணிப்பு

இருப்பினும் அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் மெஹதி ஹசன் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி 67* (64) ரன்களும் அனுபவ வீரர் முஸ்பிகர் ரஹீம் 35* (43) ரன்களும் எடுத்தனர். அதனால் 42 ஓவரிலேயே 264/3 ரன்கள் எடுத்த வங்கதேசம் 48 பந்துகள் மீதம் வைத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் சாகிப் இல்லாமலேயே எளிதான வெற்றி பெற்றது. மறுபுறம் 2023 ஆசிய கோப்பை ஃபைனலில் இந்தியாவிடம் படுதோல்வியை சந்தித்த இலங்கை ஹசரங்கா போன்ற சில முக்கிய வீரர்கள் இல்லாததால் இங்கேயும் ஏமாற்றமான தோல்வியை பதிவு செய்தது.

Advertisement