டைம் ஆச்சு கிளம்புங்க.. வங்கதேச கேப்டனை.. பழி தீர்த்த மேத்யூஸ்.. ஆறுதல் வெற்றிக்கு இவ்வளவு போராட்டமா?

SL vs BAN
- Advertisement -

இந்தியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 6ஆம் தேதி மதியம் 2 மணிக்கு தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 38வது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதின. ஏற்கனவே உலகக் கோப்பையிலிருந்து வெளியேறிய இவ்விரு அணிகளும் ஆறுதல் வெற்றி பெறுவதற்காக மோதிய நிலையில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக நிசாங்கா 41, சமரவிக்ரமா 41 ரன்கள் எடுத்த நிலையில் மிடில் ஆர்டரில் அபாரமாக விளையாடிய அசலங்கா 6 பவுண்டரி 5 சிக்சருடன் சதமடித்து 108 (105) ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

அவர்களுடன் டீ சில்வா 34, தீக்ஷனா 21 ரன்கள் எடுத்து ஓரளவு கை கொடுத்தனர். அதற்கிடையே ஏஞ்சலோ மேத்யூஸ் காலதாமதத்தால் அவுட் கொடுக்கப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. மறுபுறம் வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக டன்சித் ஹசன் 3, கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 2, சோரிபுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள். அதைத்தொடர்ந்து 280 ரன்களை துரத்திய வங்கதேசத்திற்கு டன்சித் ஹசனை 9 ரன்களில் அவுட்டாக்கிய மதுசங்கா நட்சத்திர வீரர்கள் லிட்டன் தாசையும் 23 ரன்களில் பெவிலின் அனுப்பி வைத்தார்.

அதனால் 41/2 என்ற தடுமாற்றமான துவக்கத்தை பெற்ற வங்கதேசத்திற்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மற்றும் நஜ்முல் சாண்டோ மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3வது விக்கெட்டுக்கு 169 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்தார்கள். ஆனால் அதில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சாகிப் அல் ஹசனை 82 (65) ரன்களில் அவுட்டாக்கிய மேத்யூஸ் நேரம் முடிந்து விட்டது செல்லுங்கள் என்று சைகை காட்டி பழி தீர்த்தார்.

- Advertisement -

குறிப்பாக தனது ஹெல்மெட் பழுதான நிலைமையை சொல்லியும் அவுட்டை வாபஸ் பெற மறுத்த ஷாகிப்புக்கு அவர் தக்க பதிலடி கொடுத்து பழி தீர்த்தார். அதோடு நிற்காத அவர் தன்னுடைய அடுத்த ஓவரில் மறுபுறம் சவாலை கொடுத்த நஜ்மல் சாண்டோவையும் 90 ரன்களில் போல்ட்டாக்கினார். அப்போது வந்த முகமதுல்லா 22, முஸ்பிக்கர் ரஹீம் 10, மெஹதி ஹசன் 3 ரன்களில் அவுட்டானதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் இலக்கு குறைவாக இருந்ததை பயன்படுத்தி ஹ்ரிடாய் 15*, தன்சித் சாகிப் 5* ரன்கள் எடுத்த உதவியுடன் 41.1 ஓவரிலேயே 282/7 ரன்கள் எடுத்த வங்கதேசம் 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது.

இதையும் படிங்க: தம்மை அவுட்டாக்கிய வங்கதேச கேப்டனை.. பழி தீர்த்த மேத்யூஸ்.. ஆறுதல் வெற்றிக்கு இவ்வளவு போராட்டமா?

அதனால் இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசங்கா 3, ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் தீக்சனா ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. அதன் காரணமாக 2வது வெற்றியை பதிவு செய்த வங்கதேசம் புள்ளி பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறிய நிலையில் 6வது தோல்வியை பதிவு செய்த இலங்கை 8வது இடத்திற்கு சரிந்தது.

Advertisement