BAN vs AFG : மெஹதி ஹசன் மேஜிக்.. 156க்கு சுருட்டிய வங்கதேசம்.. 13வது முறையாக தொடரும் ஆப்கனின் வரலாற்று சோகம்

BAn vs AFG
- Advertisement -

இந்தியாவில் துவங்கி நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் அக்டோபர் 7ஆம் தேதி நடைபெற்ற 3வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் அழகிய தரம்சாலா கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தானுக்கு 47 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த இப்ராஹிம் ஜாட்ரானை 22 (25) ரன்களில் அவுட்டாக்கிய சாகிப் அல் ஹசன் அடுத்ததாக வந்த ராகில் ஷா’வையும் 18 ரன்களில் தன்னுடைய சுழலில் சிக்க வைத்தார். அதே போல அடுத்ததாக வந்த கேப்டன் ஷாகிதி 18 ரன்களில் மெஹதி ஹசன் சுழலில் சிக்கிய நிலையில் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் ரஹ்மத்துல்லா குர்பாஸ் 47 (62) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

வங்கதேசம் வெற்றி:
அதை பயன்படுத்திய வங்கதேச பவுலர்கள் அடுத்ததாக வந்த நஜிபுல்லா ஜாட்ரான் 5, முகமது நபி 6, ஓமர்சாய் 22, ரஷித் கான் 9 என முக்கிய வீரர்களை சீரான இடைவெளிகளில் குறைந்த ரன்களில் அவுட்டாக்கி கதையை முடித்தார்கள். அந்த வகையில் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி ஆப்கானிஸ்தான் 37.2 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 156 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மற்றும் மெஹதி ஹசன் தலா 3 விக்கெட்களையும் சோரிபுல் இஸ்லாம் 2 விக்கெட்களையும் சாய்த்தனர்.

அதை தொடர்ந்து 157 என்ற சுலபமான இலக்கை துரத்திய வங்கதேசத்துக்கு தன்சிட் ஹசன் 5, லிட்டன் டாஸ் 13 என துவக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த மெஹதி ஹசன் – நஜ்முள் சாண்டோ ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வங்கதேசத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தனர்.

- Advertisement -

அந்த வகையில் 3வது விக்கெட்டுக்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய மெஹதி ஹசன் 57 (73) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து வந்த கேப்டன் சாகிப் 14 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் தொடர்ந்து நிதானமாக விளையாடிய சாண்டோ 59* (83) ரன்கள் எடுத்ததால் 34.4 ஓவரிலேயே 158/4 ரன்கள் எடுத்த வங்கதேசம் 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: ஃபைனலில் ட்விஸ்ட்.. ஆப்கனை தடுத்த மழை.. சரித்திரம் படைத்த இந்தியா.. தங்கத்தை கொடுத்த ரூல்ஸ் என்ன?

குறிப்பாக கடந்த 2022 டிசம்பரில் இந்தியாவில் சொந்த மண்ணில் தோற்கடிக்க முக்கிய பங்காற்றிய மெஹதி ஹசன் 57 ரன்கள், 3 விக்கெட்களை எடுத்து வங்கதேசத்திற்கு இந்த உலகக் கோப்பையில் முதல் வெற்றி பெற்று கொடுக்க முக்கிய பங்காற்றினார். அதனால் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்ட ஆப்கானிஸ்தான் சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக பரூக்கி, நவீன்-உல்-ஹக், ஓமர்சாய் தலா 1 எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. குறிப்பாக 50 ஓவர் உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 13வது முறையாக ஆப்கானிஸ்தான் சோகமான தோல்வியை பதிவு செய்துள்ளது.

Advertisement