ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 3ஆம் பாகிஸ்தானில் இருக்கும் கடாஃபி நகரில் நடைபெற்ற 4வது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஆரம்ப முதலே அதிரடியாக செயல்பட்டு நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 334/5 ரன்கள் சேர்த்தது. அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் நடைபெற்ற ஒரு போட்டியில் தங்களுடைய அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து வங்கதேசம் புதிய சாதனையும் படைத்தது. இதற்கு முன் கடந்த 2019 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாட்டிங்கம் நகரில் வங்கதேசம் 333/8 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.
அந்தளவுக்கு பேட்டிங்கில் பட்டையை கிளப்பிய அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரர் மெகதி ஹசன் 7 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்து 112 (119) ரன்கள் குவித்து காயமடைந்து வெளியேறினார். அவர் கொடுத்த நல்ல தொடக்கத்தை வீணடிக்காத வகையில் மிடில் ஆர்டரில் அசத்திய நஜ்முல் சாண்டோ தன்னுடைய பங்கிற்கு அசத்தலாக செயல்பட்டு 9 பவுண்டரி 2 சிக்ஸ்டருடன் சதமடித்து 104 (105) ரன்கள் எடுத்தார்.
இலங்கைக்கு சிக்கல்:
அவர்களுடன் கேப்டன் சாகிப் அல் ஹசன் 32* (18) ரன்களும் முஸ்பிக்கர் ரஹீம் 25 (15) ரன்களும் எடுக்க ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முஜீப் உர் ரகுமான் மற்றும் குலாம் நைப் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 335 ரன்கள் துரத்திய ஆப்கானிஸ்தான் 2வது ஓவரிலிருந்தே சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழக்கும் அளவுக்கு சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி 44.3 ஓவரில் 245 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
அந்த அணிக்கு ரஹ்மதுல்லா குர்பாஸ் 1, ரஹீல் ஷா 33, நஜிபுல்லா ஜாட்ரான் 17, முகமது நபி 3 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய நிலையில் அதிகபட்சமாக இப்ராஹிம் ஜாட்ரான் 75 ரன்களும் கேப்டன்ஸ் ஷாகிதி 51 ரன்களும் எடுத்தனர். அதனால் 89 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றி பெற்ற வங்கதேசம் இத்தொடரை வெற்றியுடன் துவக்கியுள்ளது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக தஸ்கின் அகமது 4 விக்கெட்டுகளையும் சோரிஃபுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளையும் எடுத்து ஆப்கானிஸ்தானை வீழ்த்த உதவினர்.
சொல்லப்போனால் குரூப் பி பிரிவில் 2 லீக் போட்டிகளில் விளையாடி முடித்துள்ள வங்கதேசம் இலங்கையிடம் தோற்றாலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்த பெரிய வெற்றியால் கிட்டத்தட்ட சூப்பர் 4 சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது. அதன் காரணமாக தற்போது 2 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கும் இலங்கை தன்னுடைய கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தானை ஏதோ ஒரு வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது.
இதையும் படிங்க: பாவம் அதிக மேட்ச்ல விளையாடி களைச்சிட்டாரு அதான் தடுமாறுறாரு – நட்சத்திர இந்திய வீரருக்கு ஹர்பஜன் ஆதரவு
ஒருவேளை ஆப்கானிஸ்தான் பெரிய வெற்றியை பெரும் பட்சத்தில் இலங்கை வெளியேறுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறும் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை மோதும் போட்டி கிட்டத்தட்ட நாக் அவுட் போல இருக்கும் என்றே சொல்லலாம். அதில் நடப்பு சாம்பியனாக இருக்கும் இலங்கை சொந்த மண்ணில் நிச்சயமாக வென்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது. ஒருவேளை அப்போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால் இலங்கை 3 புள்ளிகளுடன் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.