
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் எதிர்வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. அதற்கு அடுத்து 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரும் வருகிறது. இதன் காரணமாக அடுத்த பல மாதங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்நிலையில் அதற்கு முன்னதாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற இருக்கிறது.
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடி வருவதால் இந்த தொடரானது எப்போது துவங்கும்? என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த வகையில் எதிர்வரும் ஜனவரி 11-ம் தேதி முதல் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரானது நடைபெற உள்ளது. இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நாளை அல்லது நாளை மறுதினம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி வெளியாகப்போகும் இந்தியா ஒருநாள் அணியில் முதன்மை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கே.எல் ராகுல் இடம் பெறுவார் என்பது உறுதி. அதேவேளையில் பேக்கப் விக்கெட் கீப்பராக வரப்போவது யார்? என்ற கேள்வி தான் தற்போது அனைவரது மத்தியிலும் நிலவி வருகிறது.
ஏனெனில் ரிஷப் பண்டை பொருத்தவரை டெஸ்ட் போட்டிகளில் நிரந்தர இடத்தை பிடித்திருந்தாலும் ஒருநாள் போட்டிகளில் அவரை விளையாட வைப்பதில் கௌதம் கம்பீருக்கு விருப்பமில்லை என்றே தெரிகிறது. அதன் காரணமாகவே அவர் தொடர்ந்து ஒருநாள் அணியில் நிராகரிக்கப்பட்டு வருகிறார். அதே வேளையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சையத் முஷ்டாக் அலி தொடரில் கேப்டனாக நின்று ஜார்கண்ட் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற இஷான் கிஷன் தேர்வாளர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.
டி20 போட்டிகளில் அசத்தியது மட்டுமின்றி தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதன் காரணமாக அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோன்று கௌதம் கம்பீரின் நம்பிக்கையை பெற்றெடுத்த சாம்சன் ஏற்கனவே டி20 போட்டிகளில் அசத்தலாக விளையாடி வருகிறார்.
இதையும் படிங்க : அடுத்த 2 மாசத்துக்கு விளையாட வாய்ப்பே இல்ல.. சாய் சுதர்சனுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு – காரணம் என்ன?
அதுமட்டுமின்றி ஒருநாள் போட்டிகளில் தான் கடைசியாக விளையாடிய போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சதம் அடித்து தன்னை நிரூபித்திருந்தார். அதனால் அவரை கௌதம் கம்பீர் தேர்வு செய்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் காரணமாக ரிஷப் பண்ட் நிச்சயம் ஒருநாள் அணியில் இடம்பெற மாட்டார் என்றும் பேக்கப் விக்கெட் கீப்பருக்கான போட்டி இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவருக்கு இடையே மட்டும் தான் உள்ளது என்று கூறப்படுகிறது.