ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 11ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை 93 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த நடப்பு சாம்பியன் இங்கிலாந்து ஆறுதல் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் 84, ஜோ ரூட் 60, ஜானி பேர்ஸ்டோ 59 ரன்கள் 338 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஹரிஷ் ரவூப் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
அதை தொடர்ந்து 6.2 ஓவரில் 338 ரன்கள் எடுத்தால் செமி ஃபைனல் செல்லலாம் என்ற நிலையுடன் களமிறங்கிய பாகிஸ்தான் மீண்டும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 43.3 ஓவரில் 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக சல்மான் ஆஹா 51 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக டேவிட் வில்லி 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
வெளியேறிய பாகிஸ்தான்:
இந்த வெற்றியால் கோப்பையை தக்க வைக்கும் வாய்ப்பை தவற விட்டாலும் பாகிஸ்தானில் நடைபெறும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபிக்கு தகுதி பெற்ற மகிழ்ச்சியுடன் இங்கிலாந்து நாடு திரும்பியது. மறுபுறம் 1992 போல கோப்பையை வென்று தங்களைப் புறக்கணிக்கும் இந்தியர்களுக்கு அவருடைய சொந்த மண்ணில் பதிலடி கொடுக்கும் முனைப்புடன் களமிறங்கிய பாகிஸ்தான் சுமாராக செயல்பட்டு இந்த தோல்வியால் அதிகாரப்பூர்வமாக லீக் சுற்றுடன் வெளியேறியது.
இந்நிலையில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக சென்னையில் 1 விக்கெட் வித்தியாசத்தில் நூலிழையில் வெற்றி தவறிப் போகாமல் இருந்திருந்தால் இந்நேரம் தாங்கள் செமி ஃபைனலில் இருக்க நல்ல வாய்ப்பு இருந்திருக்கும் என்று பாபர் அசாம் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் எங்களுடைய செயல்பாடுகளால் மிகவும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளோம்”
“குறிப்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் நாங்கள் வென்றிருந்தால் கதை வேறு மாதிரி இருந்திருக்கும். ஆனால் ஆம் நாங்கள் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் தவறு செய்தோம். இப்போட்டியில் நாங்கள் 20 – 30 ரன்கள் எக்ஸ்ட்ரா வழங்கினோம். பவுலர்கள் சுமாரான பந்துகளை வீசினார்கள். ஸ்பின்னர்கள் விக்கெட்டுகளை எடுக்கவில்லை. அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பொதுவாகவே மிடில் ஓவர்களில் உங்களுடைய ஸ்பின்னர்கள் விக்கெட்டுகளை எடுக்காமல் போனால் நீங்கள் கண்டிப்பாக தடுமாறுவீர்கள்”
இதையும் படிங்க: அதிகாரப்பூர்வமாக நாட்டுக்கு கிளம்பிய பாகிஸ்தான்.. இங்கிலாந்து 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெற்றதா?
“இந்த சூழ்நிலையில் நாங்கள் ஒன்றாக உட்கார்ந்து பேச வேண்டும். இத்தொடரில் கிடைத்த நேர்மறையான பாடங்களையும் தவறுகளையும் நாங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். கேப்டன்ஷிப் பொறுப்பில் என்னுடைய அனுபவத்தில் முடிந்தளவுக்கு சிறப்பாக செயல்பட விரும்புகிறேன்” என்று கூறினார். இதை தொடர்ந்து மோசமான தோல்விகளை சந்தித்ததால் பாபர் அசாம் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து நீக்கப்படுவது போன்ற அதிரடியான முடிவுகள் பாகிஸ்தான் அணியில் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.