விராட் கோலிக்கு இதனால் தான் ஆதரவு கொடுத்தேன் – இந்தியர்களை மிஞ்சிய பாபர் அசாம் ஓபன்டாக்

Babar-Azam-and-Virat-Kohli
- Advertisement -

இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி கடந்த 2019க்கு பின்பு 3 வருடங்களாக சதமடிக்க முடியவில்லை என்பதற்காக கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பின் அவரைப் போன்ற ஒருவர் கிடைக்கப் போவதில்லை என்று ரசிகர்கள் கவலைப்பட்ட நிலையில் அவரளவுக்கு இல்லை என்றாலும் அவரைப்போலவே ரன் மெஷினாக எதிரணி பவுலர்களை வெளுத்து வாங்கிய விராட் கோலி 33 வயதிலேயே 20000க்கும் மேற்பட்ட ரன்களையும் 70 சதங்களையும் விளாசி பல சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து தன்னை உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்று நிரூபித்துள்ளார்.

ஆனாலும் யார் கண் பட்டதோ என்பது போல் கடந்த 3 வருடங்களாக டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து 100 போட்டிகளுக்கும் மேலாக சதமடிக்க முடியாமல் பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளார். இத்தனைக்கும் இடையிடையே 50, 70 போன்ற ரன்களை அடித்து வரும் அவரை அனைவரும் பார்ம் அவுட் என்றே கருதி விமர்சிக்கிறார்கள். முந்தைய காலங்களில் களமிறங்கினாலே சதமடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்க்கும் அளவுக்கு அட்டகாசமாக செயல்பட்ட அவர் தனக்கென்று தனி தரத்தை உருவாக்கி வைத்துள்ளதே அதற்கு காரணமாகும்.

- Advertisement -

பாபரின் ஆதரவு:
அந்த நிலைமையில் சமீபத்திய ஐபிஎல் தொடரில் பங்கேற்று விட்டு தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் ஓய்வெடுத்து இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பங்கேற்று வரும் அவர் 11, 19, 11, 1, 16, என இதுவரை பங்கேற்ற 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சொற்ப ரன்களில் அவுட்டாகி அனைவரும் எதிர்பார்த்த சதத்தை அடித்து விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

இதனால் பொறுமை இழந்த கபில்தேவ் உட்பட நிறைய முன்னாள் வீரர்கள் பெரிய பெயரை வைத்துக் கொண்டு எத்தனை நாட்கள் ரன்கள் அடிக்காமல் அணியில் இடம் பிடிப்பீர்கள் என்ற விமர்சனத்தை அம்பாக எய்து அவரை அணியில் இருந்து நீக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இப்படிபட்ட மோசமான சூழ்நிலையில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் 16 ரன்களில் அவுட்டான விராட் கோலி வழக்கம் போல ஏராளமான விமர்சனங்களை சந்தித்தார்.

- Advertisement -

அதற்கு மத்தியில் பாகிஸ்தானின் நட்சத்திர வீரர் மற்றும் கேப்டன் பாபர் அசாம் கடந்த 2021 டி20 உலக கோப்பையில் விராட் கோலியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றி “இதுவும் கடந்து போகும், உறுதியுடன் இருங்கள்” என்ற ட்வீட்டை போட்டு மெகா ஆதரவு கொடுத்தது அத்தனை பேரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

இதுதான் காரணம்:
ஏனெனில் பொதுவாகவே பெரும்பாலான பாகிஸ்தான் முன்னாள் இந்நாள் வீரர்கள் இந்தியாவையும் அதன் வீரர்களையும் எப்போது சமயம் கிடைக்கும் விமர்சிக்கலாம் என்று காத்துக் கிடப்பார்கள். அதிலும் விராட் கோலி சதமடிக்காத காலகட்டங்களில் இருமடங்கு அபாரமாக செயல்பட்டு வருவதால் அவரைவிட பாபர் அசாம் உலகின் சிறந்த பேட்ஸ்மென் என்று அந்நாட்டு ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் பேசுகின்றனர். ஆனால் அவர்களைப் போல் அல்லாமல் இரு நாடுகளுக்கிடையே நிலவும் எல்லை மற்றும் அரசியல் வேறுபாடுகளையும் கடந்து ஒரு விளையாட்டு வீரராக மோசமான தருணத்தில் தவிக்கும் நண்பனுக்கு கைகொடுக்கும் நண்பனாக பாபர் அசாம் ஆதரவு தெரிவித்தது பல இந்திய ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் நெஞ்சங்களை தொட்டது.

- Advertisement -

இந்நிலையியில் இதுபோன்ற கடினமான தருணங்களில் விமர்சனத்தை கொடுக்காமல் ஆதரவு கொடுத்தால் விராட் கோலி அதிலிருந்து நிச்சயம் மீண்டு வர முடியும் என்பதாலேயே அப்படி ட்வீட் போட்டதாக பாபர் அசாம் தெரிவித்துள்ளார். இதுபற்றி இலங்கை டெஸ்ட் தொடருக்கு முன்பாக நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு.

“ஒரு கிரிக்கெட் வீரராக அதுபோன்ற மோசமான தருணத்தை நானும் ஒருநாள் சந்திக்க நேரிடும் மற்றும் ஒரு வீரர் அத்தகைய சூழ்நிலையில் என்ன உணர்வார் என்பதும் எனக்கு தெரியும். அது போன்ற கடினமான தருணங்களில் உங்களுக்கு ஆதரவு மட்டுமே தேவை. எனவே கொஞ்சம் ஆதரவு கொடுக்கலாம் என்று நினைத்துதான் ட்வீட் போட்டேன். அவர் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர்.

- Advertisement -

ஏராளமான கிரிக்கெட் விளையாடியுள்ள அவருக்கு இந்த மோசமான சூழ்நிலையில் இருந்து எப்படி வெளியே வர முடியுமென்று தெரியும். அதற்கு சற்று நேரங்கள் தேவைப்படுகிறது. அந்த நேரத்தில் நீங்கள் அந்த வீரர்களுக்கு ஆதரவு கொடுத்தால் தாமாக நல்ல நிலைமைக்கு வந்து விடுவார்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க : IND vs ENG : 3 ஆவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ -உத்தேச பட்டியல்

இந்தியாவில் இருக்கும் எத்தனையோ முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் தினம்தோறும் விராட் கோலியை ஆதரிக்காமல் விமர்சிக்கின்றனர். ஆனால் பாகிஸ்தானைச் சேர்ந்த பாபர் அசாம் ஒரு கிரிக்கெட் வீரராக அதுபோன்ற நிலைமையை பற்றி உணர்ந்துள்ள காரணத்தால் எல்லையை தாண்டி இந்தியர்களைப் போல் அல்லாமல் ஆதரவு கொடுத்துள்ளது உண்மையிலேயே பாராட்டத்தக்கதாகும்.

Advertisement