
சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் துவங்குகிறது. அந்தத் தொடரில் சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற சவாலான அணிகளை தோற்கடித்து 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துவதற்காக போராட உள்ளது. அதே சமயம் பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிராக அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறும் போட்டியில் வென்று காலம் காலமாக வைத்திருக்கும் கௌரவத்தை இந்தியா காப்பாற்றுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் காணப்படுகிறது.
குறிப்பாக 1992 முதல் வரலாற்றில் இதுவரை நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைகளில் 7 போட்டிகளில் பாகிஸ்தானை சந்தித்த இந்தியா 7 வெற்றிகளை பெற்று போட்டு வரும் வெற்றி நடையை சொந்த மண்ணிலும் தொடர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. மறுபுறம் கடந்த 30 வருடங்களாக தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் உலகக் கோப்பையை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை இந்தியாவை இம்முறை அவருடைய சொந்த மண்ணிலேயே தோற்கடித்து அனைத்து தோல்விகளுக்கும் மாஸ் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே பாகிஸ்தான் ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்பாகவும் விருப்பமாகவும் இருக்கிறது.
பாபரின் திட்டம்:
குறிப்பாக 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் தோற்கடித்து 2021 டி20 உலக கோப்பையில் முதல் முறையாக இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான் கடந்த ஆசிய கோப்பையிலும் ஒரு போட்டியில் வென்றது. அந்த வகையில் சமீப காலங்களில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் கை ஓங்கியுள்ளதால் இம்முறை வெற்றி நிச்சயம் என்று அந்நாட்டவர்கள் உறுதியாக காத்திருக்கின்றனர். மேலும் நம்பிக்கை நட்சத்திரம் ஷாஹீன் அப்ரிடி முழுமையாக குணமடைந்து பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளதும் அந்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக வெல்ல வேண்டும் என்பதை விட தங்களை புறக்கணிக்கும் இந்திய மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே தங்களுடைய லட்சியம் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார். குறிப்பாக இந்தியாவை வீழ்த்தினால் கோப்பை கிடைத்து விடுமா என்று கூறும் அவர் ஒருவேளை அவர்களிடம் தோற்று எஞ்சிய அணிகளுக்கு எதிரான போட்டியில் வென்று உலகக் கோப்பையை வெல்வது மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என தெரிவித்துள்ளார். தற்போது இலங்கைக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக அந்நாட்டுக்கு சென்றடைந்துள்ள அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.
“நாங்கள் இந்த உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக மட்டும் சிறப்பாக விளையாட வேண்டும் நினைக்கவில்லை. மாறாக ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு ஐசிசி உலக கோப்பையை வெல்வதை பற்றி கனவு காண்கிறோம். மேலும் இந்தியாவில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக மட்டும் நாங்கள் விளையாட போவதில்லை. எனவே ஒவ்வொரு முறையும் உலகக் கோப்பை எங்கு நடைபெற்றாலும் அது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை”
“தற்சமயத்தில் பாகிஸ்தான் வாரியத்தில் என்ன நடக்கிறது என்பதில் நாங்கள் கவனம் செலுத்தாமல் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். குறிப்பாக அடுத்து வரும் போட்டிகளுக்கான அட்டவணை எங்களிடம் இருப்பதால் அதில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி காண்பதற்கு தயாராகி வருகிறோம். மேலும் இலங்கையில் நிலவும் அதே சூழ்நிலைகள் இந்தியாவிலும் இருக்கும் என்பதால் உலககோப்பைக்கு தயாராக இந்த தொடர் உதவும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.
இதையும் படிங்க: 35 வயசுல அவரே கம்பேக் கொடுத்திருக்காரு. எனக்கு என்ன? என்னோட இடத்தை பிடிக்காம விடமாட்டேன் – ஹனுமா விஹாரி கருத்து
முன்னதாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களை போல் அல்லாமல் பாகிஸ்தான் வீரர்கள் கடந்த 10 வருடமாக ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெறவில்லை. அதன் காரணமாக பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு இந்தியாவின் கால சூழ்நிலைகள் இந்த உலகக் கோப்பையில் புதிதாகவும் சவாலானாதாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.